மஹா அமிர்தம்: பல்லவன் கட்டிய பரமேச்வர விண்ணகரம்

By செய்திப்பிரிவு





தெலுங்கு தேசத்தில் அமராவதி என்ற இடத்திலுள்ள சிம்மவர்ம பல்லவனின் சமஸ்க்ருதக் கல்வெட்டில் இந்தக் கதை விரிவாகச் சொல்லியிருக்கிறது. அரக்கோணத்திற்கு ஏழெட்டு மைலிலுள்ள வேலூர் பாளையம் என்கிற இடத்தில் அகப்பட்ட மூன்றாவது (விஜய) நந்தவர்மாவின் தாமிர சாசனத்திலும் இந்தக் கதை குறிப்பிட்டிருக்கிறது. அச்வத்தாமா பாரத்வாஜ கோத்திரத்தைச் சேர்ந்த பிராம்மணர். அவருடைய பிதாவான துரோணாசார்யாருக்கு பாரத்வாஜர் என்றே ஒரு பெயர். பல்லவ ராஜாக்கள் தங்களை பாரத்வாஜ கோத்திரக்காரர்களாகவே சாசனங்களில் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

பல்லவ ராஜாக்களே சாசனங்களில் இப்படியெல்லாம் சொல்லிக்கொண்டாலும், பழைய தமிழ் இலக்கியங்களிலிருந்து ஆராய்ச்சி பண்ணித் தமிழபிமானிகள் பல்லவர்களின் ‘ஆரிஜின்' (தோற்றுவாய்) பற்றி வேறே ஒரு கதை சொல்கிறார்கள்.

நாகப்பட்டினத்துச் சோழ ராஜா ஒருத்தனுக்கு நாக கன்னிகையிடம் ஒரு பிள்ளை பிறந்தது. அவள் தொண்டைக் கொடியைச் சுற்றி அந்தக் குழந்தையை சமுத்திரத்தில் மிதக்க விட்டுவிட்டாள். அதுதான் கரையேறித் தொண்டைமான் என்ற பல்லவ ராஜா ஆயிற்று என்று இந்தக் கதை. காஞ்சி மண்டலத்துக்கே தொண்டை மண்டலம் என்று பெயர்.

நந்திவர்மா வைகுண்டப் பெருமாள் கோயில் கட்டினான். அதற்குப் ‘பரமேச்வர விஷ்ணுக்ருஹம்' என்றே பழைய பெயர். விஷ்ணுவின் க்ருஹம், ஆனால் பரமேச்வரனின் பேரில் இருக்கிறது என்கிறபோதே, சைவ, வைஷ்ணவ ஒற்றுமை தெரிகிறது. ஆனால் இங்கே ‘பரமேச்வரன்' என்பது கோயில் கட்டிய நந்திவர்மாவின் இன்னொரு பெயரை வைத்துத்தான்.

ராஜராஜன் கட்டியது ராஜராஜேச்சுரம், கங்கை கொண்ட சோழன் கட்டியது கங்கை கொண்ட சோழீச்சுரம் என்கிற மாதிரி பரமேச்வரப் பல்லவ மல்லனான நந்திவர்மா கட்டிய வைகுண்டப் பெருமாள் கோயில் அவன் பெயரிலேயே பரமேச்வர விண்ணகரம் ஆயிற்று.

கைலாசநாதர் கோயில் சிற்பங்கள் புராண சம்பந்தமானவையாகப் பிரசித்தி பெற்றிருக்கின்றன. வைகுண்டப் பெருமாள் கோயில் சிற்பங்களோ சரித்திர சம்பந்தத்தினால் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன.

ராஜசிம்மன் ரொம்பவும் பேர் புகழோடு ஆட்சி செய்துவிட்டுக் காலகதி அடைந்த பின் ராஜ்யத்தில் ஒரேயடியான குழப்ப நிலை உண்டாயிற்று. சாளுக்கிய ராஜாவான விக்ரமாதித்தன் காஞ்சிபுரத்தின்மீது படையெடுத்து வந்து அதைக் கைப்பற்றிக்கொண்டான்.

ராஜசிம்மனுடைய பிள்ளையும் ஒரு பரமேச்வர வர்மாதான். அவன் ரொம்பவும் ஸ்வல்ப காலமே ஆட்சி பண்ணிவிட்டு, சந்ததி இல்லாமலே இறந்து போய்விட்டான். தலைப் பிள்ளைக்குப் பட்டம் என்ற நம்முடைய Primogeniture வழக்கப்படிப் பல்லவ வம்சத்தில் சிம்ம வர்மாவுக்கு அப்புறம் சிம்மவிஷ்ணு வழியாக ராஜசிம்மனின் பிள்ளைவரை போன நடுக்கிளை அதோடு முடிந்துபோயிற்று.

அப்புறம் அதன் பக்கக் கிளைகளில் ஒன்றில் வந்த கோத்திர தாயாதியான ஹிரண்யவர்மா என்பவனிடம் பல்லவ ராஜ்யத்தின் முக்கியஸ்தர்கள் தூது போய் கேட்டுக்கொண்டு, அவனுடைய பிள்ளையான இன்னொரு பரமேச்வர வர்மாவுக்கு ராஜ்ய பட்டாபிஷேகம் பண்ணினார்கள். அவன்தான் நந்திவர்ம பல்லவ மல்லன் என்று பெயர் வைத்துக்கொண்டு அறுபது வருஷத்திற்குமேல் ஆட்சி நடத்தினான். அவனுடைய இன்னொரு பெயரில் அமைக்கப்பட்ட பரமேச்வர விண்ணகரமாகிய வைகுண்டப் பெருமாள் கோயிலில் இதைப் பற்றிய கல்வெட்டு இருக்கிறது.

இப்படி எழுத்திலே வெட்டியிருப்பதைவிட முக்கியமாக இந்தக் கோயிலுக்கு என்ன சரித்திர பிரசித்தி என்றால், மஹாவிஷ்ணுவிலிருந்து ஆரம்பித்து பிரம்மா வழியாகப் பல்லவ ராஜாக்கள் அத்தனை பேரின் வம்சாவளிக் கதைகளையும், இந்தக் கோயிலைக் கட்டினவர் வரை, சிற்ப வரிசைகளில் வடித்துக்காட்டியுள்ள ஒரு மண்டபம் அங்கே இருப்பதுதான்.

சரித்திர முக்கியத்துவம் மட்டும்தான் என்றில்லாமல் மத சம்பந்தமான விசேஷமும் அந்தக் கோயிலுக்கு உண்டு. இங்கே மூன்று அடுக்குகளாக சந்நிதிகளை அமைத்து, பெருமாளின் நின்ற திருக்கோலத்தைக் கீழ் தளத்திலும், இருந்த (உட்கார்ந்த) திருக்கோலத்தை நடுத் தளத்திலும், கிடந்த (சயனித்த) திருக்கோலத்தை மேல் தளத்திலும் அமைத்திருக்கிறது.

‘அஷ்டாங்க விமானம்' என்பதாகப் பொதுவாகச் சொல்லப்படுகிற ஆகம விதிகளின்படி இப்படிப் பல அடுக்குகளில் ஆலயம் நிர்மாணிப்பது ரொம்பவும் அபூர்வமே. பாண்டி நாட்டில் திருக்கோட்டியூரிலுள்ள பெருமாள் கோயில், மதுரையிலேயே கூடலழகர் கோயில், காஞ்சி வைகுண்டப் பெருமாள் கோயில், இதைக் கட்டிய நந்திவர்மனின் பிள்ளையான தந்திவர்மன் காஞ்சிக்கு சமீபத்திலுள்ள உத்திரமேரூரில் கட்டிய சுந்தர வரதப் பெருமாள் கோயில் ஆகிய நாலில்தான் இந்த அமைப்பு இருப்பதாகத் தெரிகிறது.

நந்திவர்ம பல்லவ மல்லன் திருமங்கையாழ்வாரின் காலத்தில் இருந்தவன் என்று தெரிகிறது. அவனைத் தம்முடைய பாசுரத்தில் குறிப்பிட்டு அவர் பாடியிருக்கிறார்.

இந்த ஆழ்வாரிலிருந்து குரு, சிஷ்ய சமாசாரமாக, சிஷ்யனுக்காக ஸ்வாமியையே, ‘இப்படிப் பண்ணு, அப்படிப் பண்ணு' என்று சொல்லித் தாம் சொன்னவண்ணம் செய்ய வைத்தவர் திருமழிசையாழ்வார். அவர் காஞ்சீபுரத்திலே ஒரு பெருமாள் கோயிலில் வாசம் பண்ணிவந்தாரென்று சொல்லி அது எந்தக் கோயில் என்று சொல்வதில்தான் இருந்தேன். காஞ்சியிலுள்ள பதினாலு திவ்ய தேசங்களுக்குள் அவர் இருந்தது திருவெஃகா என்பதிலாகும்.

தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

1 hour ago

ஆன்மிகம்

3 hours ago

ஆன்மிகம்

14 hours ago

ஆன்மிகம்

23 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

6 days ago

மேலும்