ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் தொடக்கமாக பகல்பத்து உற்சவம் இன்று தொடங்கியது. முக்கிய வைபவமான சொர்க்கவாசல் திறப்பு டிச. 25-ம் தேதி நடைபெறுகிறது.
பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறும்.
மார்கழி மாதம் நடைபெறும் திருஅத்யயன உற்சவம் எனப்படும் வைகுண்ட ஏகாதசி திருவிழா சிறப்புமிக்கது. பகல்பத்து, ராபத்து இயற்பா என மொத்தம் 21 நாட்கள் இந்த விழா நடைபெறும்.
இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி திருவிழாவில் திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சி நேற்று (டிச. 14) நடைபெற்றது.
பகல்பத்து உற்சவத்தின் முதல் நாளான திருமொழி திருவிழா இன்று (டிச.15) தொடங்கியது.
இதையொட்டி, நம்பெருமாள் நீள்முடி கிரீடம், ரத்தின அபயஹஸ்தம், மார்பில் லட்சுமி பதக்கம், கர்ணபூசம், பவள மாலை, முத்துமாலை, அடுக்கு பதக்கம் உள்ளிட்ட திரு ஆபரணங்கள் அணிந்து காலை 7 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து தனுர் லக்னத்தில் புறப்பட்டு மேலப்படி வழியாக வெளிவந்து இரண்டாம் பிரகாரம் ராஜமகேந்திரன் திருச்சுற்று வழியாக காலை 7.45 மணிக்கு அர்ஜூன மண்டபம் வந்தடைந்தார்.
காலை 8.15 மணி முதல் மதியம் 1 மணிவரை அரையர்கள் நம்பெருமாள் முன் நின்று நாலாயிரம் திவ்யப் பிரபந்த பாடல்களை அபிநயம் மற்றும் இசையுடன் பாடுவர்.
மாலை 6.30 மணிக்கு அர்ஜூன மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார்.
பகல்பத்தின் முதல் நாளான இன்று மூலவர் ரங்கநாதர் முத்தங்கி சேவையில் காட்சியளித்தார். இந்த முத்தங்கி சேவை தொடர்ந்து 20 நாட்களுக்கு நடைபெறும்.
இதேபோல், பகல்பத்தின் ஒவ்வொரு நாளும் உற்சவர் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் அர்ஜூன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். பகல்பத்து உற்சவத்தின் 10-வது நாள் (டிச.24) நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.
டிச.25-ம் தேதி ராப்பத்து உற்சவத்தின் முதல் நாள் வைகுண்ட ஏகாதசி திருநாள் ஆகும். அன்றைய தினம் அதிகாலை 3.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அதிகாலை 4.45 மணிக்கு பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் வழியாக வெளியே வந்து பக்தர்களுக்கு எழுந்தருள்வார்.
சொர்க்கவாசல் 26-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை பகல் 1 மணி முதல் இரவு 8 மணிவரை திறந்திருக்கும். 31-ம் தேதி மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். ஜன.1-ம் தேதி சொர்க்கவாசல் திறப்பு இல்லை.
சொர்க்கவாசல் திறப்பு தினமான 25-ம் தேதி முதல் ராப்பந்து எனப்படும் திருவாய்மொழி திருநாள் தொடங்குகிறது. ராப்பத்தின் ஒவ்வொரு நாளும் உற்சவர் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் ஆயிரங்கால் மண்டபத்தின் நடுவே உள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.
ராப்பத்து ஏழாம் திருநாளான டிச.31-ம் தேதி நம்பெருமாள் திருக்கைத்தல சேவையும், எட்டாம் திருநாளான ஜன.1-ம் தேதி திருமங்கைமன்னன் வேடுபறி நிகழ்ச்சியும், பத்தாம் திருநாளான 3-ம் தேதி தீர்த்தவாரியும், 4-ம் தேதி நம்மாழ்வார் மோட்சமும், இயற்பா சாற்றுமறை நிகழ்ச்சியும் நடைபெறும். இத்துடன் வைகுண்ட ஏகாதசி திருவிழா நிறைவு பெறும்.
விழாவுக்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் கோயில் அறங்காவலர் குழுத்தலைவர் வேணு ஸ்ரீனிவாசன், கோயில் இணை ஆணையர் பொன்.ஜெயராமன், உதவி ஆணையர் கந்தசாமி, அறங்காவலர்கள் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.
18 விதமான வாத்தியங்கள்
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தினந்தோறும் நடைபெறும் வைபவங்களில் 10 விதமான வாத்தியக் கருவிகள் வாசிக்கப்படும். வைகுண்ட ஏகாதசி விழாக் காலங்களில் மட்டும் 18 விதமான வாத்தியக் கருவிகள் வாசிக்கப்படும். இதில், பெரியமேளம், நாதஸ்வரம், சங்கு, மிருதங்கம், வெள்ளியெத்தாளம், செம்புயெத்தாளம், வீரவண்டி உள்பட 18 வாத்தியக் கருவிகள் வாசிக்கப்படும்.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
3 hours ago
ஆன்மிகம்
9 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago