சபரிமலை... ஐயப்ப சுவாமி என்றதும் நம் நினைவுக்கு வரும் விஷயங்களில் முக்கியமானது... ஹரிவராசனம்.
சபரிமலையில் ஐயப்ப ஸ்வாமியை உறங்க வைக்கும் ’ஹரிவராசனம் விஸ்வமோஹனம்’ எனும் உறக்கப்பாட்டு. இது, அத்தாழபூஜை எனும் அர்த்தசாம பூஜை முடிந்த பின் சபரிமலை திருத்தலத்தின் நடை சார்த்தும் பாடலாக ஒலிக்கும். இந்தப் பாடலை இயற்றியவர் கம்பங்குடி சுந்தரம் குளத்து ஐயர். திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைகுறிச்சி எனும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்ட கம்பங்குடி சுந்தரம் குளத்து ஐயர், 1920-ம் வருடம் இந்தப்பாடலை இயற்றினார் என்கிறார்கள் ஐயப்ப பக்தர்கள்.
முன்னொரு காலத்தில், வசதிவாய்ப்புகளெல்லாம் இல்லாத குடும்பம்தான். ஆனாலும் தன் வீட்டுப் பக்கம் எவர் வந்தாலும் அவர்களைப் பசியாற வைத்த குடும்பம் அது. அப்படியொரு வழக்கத்தைக் கொண்டிருந்தார்கள் அந்தப் பரம்பரையினர்.
அப்போது புலிப்பாலைப் பெறுவதற்காக வந்த மணிகண்ட சுவாமி, இவர்கள் வீட்டின் வழியாக வந்ததாகவும் பசியுடனும் களைப்புடனும் சோர்ந்து போய் வந்த மணிகண்ட சுவாமிக்கு, வீட்டில் உணவேதுமில்லையாம். கம்பு தானியம் கொண்டு, கூழ் செய்து உணவாக அளித்தார்கள் என்கிறது ஐயப்ப புராணம். அப்போது அன்றைய இரவு, மணிகண்ட சுவாமி இவர்களின் வீட்டில் தங்கினார் என்பதும் சரிதம் விவரிக்கிறது. கம்புக் கூழை குடிப்பதற்காக வழங்கியதால், இந்தக் குடும்பத்துக்கு கம்பங்குடி எனும் பெயர் அமைந்ததாம்.
அந்தப் பரம்பரையில் இருந்து வந்தவர்தான் கம்பங்குடி சுந்தரம் குளத்து ஐயர். ஆதிகாலம் தொட்டே ஐயப்பனைத் தரிசித்து வேண்டி வந்த குடும்பத்தை, பரம்பரையை, வம்சத்தைச் சேர்ந்த கம்பங்குடி சுந்தரம் குளத்து ஐயர்தான், ஹரிவராசனம் பாடலை இயற்றி அருளினார் என்கிறார்கள் ஐயப்ப பக்தர்கள்.
இவர் ஹரிவராசனம் பாடலை ஐயப்பஸ்வாமியை தரிசிக்கும் போது எழுதினார். ஒவ்வொரு வரிகளிலும் ஐயப்பஸ்வாமியே அருளியது போல இருந்ததாக அவர் சிலிர்ப்புடன் சிலாகித்துள்ளார். அவர் பிரசுரித்த “சாஸ்தா ஸ்துதி கதம்பம்” என்ற நூலில் உள்ளது இந்த ஹரிவராசனம் கீர்த்தனம். இந்த நூலில் ஏராளமான கீர்த்தனைகள் உண்டு. என்றாலும் அவற்றில் மிக முக்கியமானதாகப் போற்றப்படுகிறது இந்தப் பாடல். உறக்கப்பாடல் என்று சொல்லப்படுகிறது. ஆனாலும் நடை சார்த்தும் பாடல் என்பதே சரியாக இருக்கும் என்கிறார் உபந்யாசகர் அரவிந்த் சுப்ரமண்யம்.
இந்தப் பாடல் வழக்கத்திற்கு வருவதற்கு முன், சபரிமலையில் மேல் சாந்தியாக இருந்த செங்ஙன்னூர் கிட்டுமணி திருமேனி நம்பூதிரி, புல்லாங்குழல் வாசித்து நடை சார்த்துவதுதான் நடைமுறையில் இருந்ததாக சபரிமலை குறித்த தகவல்கள் விவரிக்கின்றன. பாடகர் வீரமணி ராஜூ இதுகுறித்து அப்படியே நெகிழ்ந்து தெரிவித்துள்ளார்.
1950-களில் சபரிமலை ஐயப்பன் கோயில் தீ விபத்துக்கு உள்ளானது. பின்னர் தேவ பிரஸ்னம் பார்க்கப்பட்டது. 51ம் ஆண்டு கோயில் மளமளவெனப் புனரமைக்கப்பட்டது. அப்போது கோயில் மேல்சாந்தியாக இருந்த ஈஸ்வரன் நம்பூதிரி, ஹரிவராசனம் கீர்த்தனையை இரவு அத்தாழபூஜையில் ஐயப்ப ஸ்வாமி முன் நின்று ஸ்லோகம் போன்று சொல்வதை மாற்றினார். ’இது ஐயப்ப ஸ்வாமியை உறங்கவைக்கும் பாடல் போல உள்ளது. அதனால் அர்த்தசாம பூஜை முடிந்ததும் நடை சார்த்துகிற பாடலாக இருக்கட்டும்’ என மாற்றியமைத்தார் என்கிறார். இதை நடை சார்த்தும் பாடல் என்று சொல்லிச் சிலிர்க்கிறார்கள் ஐயப்ப பக்தர்கள்.
பிறகு, பின்னணிப் பாடகர் ஜேசுதாஸின் காந்தர்வக் குரலில், ஹரிவராசனம் ஒலிப்பதிவு செய்யப்பட்டு, இசைக்கப்பட்டது. 1975-ம் ஆண்டு தமிழ், மலையாள மொழிகளில் வெளிவந்த “ஸ்வாமி ஐயப்பன்” திரைப்படத்தில் முதன் முறையாக இந்த பாடலை பாடினார் கே.ஜே.ஜேசுதாஸ். புகழ் பெற்ற தேவராஜ் மாஸ்டர் இசையில், மனதை அப்படியே உருக்கியது இந்த ஹரிவராசனப் பாடல்!
ஜேசுதாஸின் தேன் குரலில், கடந்த 45 வருடங்களாக மனதை அமைதிப்படுத்துகிறது ஹரிவராசனப் பாடல். இந்தப் பாடலை 1920ம் ஆண்டு கம்பங்குடி சுந்தரம் குளத்து ஐயர் எழுதினார். கிட்டத்தட்ட இந்தப் பாடலுக்கு, கீர்த்தனைக்கு இந்த 2020ம் ஆண்டு... நூற்றாண்டு!
சுவாமியே சரணம் ஐயப்பா!
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
11 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
8 days ago