நம்முடைய எதிரிகளுக்குப் பயம் தந்து தன்னை அண்டியவர்களுக்கு அருள் செய்பவர் பைரவர். படைத்தல், காத்தல், அழித்தல் எனப்படும் முத்தொழில்களுக்கும் பக்கபலமாகத் திகழ்கிறார் பைரவர்.
பைரவர் என்றால் பயம் நீக்குபவர் என்று அர்த்தம். பாவத்தைப் போக்குபவர் என்று அர்த்தம். முத்தொழில்களுக்கும் பலமாகவும் அரணாகவும் இருப்பதால், சிவாம்சம் கொண்ட பைரவர், திரிசூலத்துடன் திகழ்கிறார் என்கிறது புராணம். ஆனந்த பைரவராக உலகைப் படைக்கிறார். காலபைரவராகத் திகழ்ந்து உலகைக் காத்தருள்கிறார். அதனால்தான் கலியுகத்துக்கு காலபைரவர் என்று போற்றப்படுகிறார்.
பைரவரை நினைத்தாலே போதும்... மனதார நினைத்து வேண்டிக்கொண்டாலே போதும்... நம்மைச் சுற்றியுள்ள எதிர்ப்புகள் அனைத்தையும் தகர்த்து, நம்மைக் காத்தருள்வார் காலபைரவர் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
துன்பமில்லாதவர்கள் எவருமில்லை. துயரத்தில் உழன்று தவிக்காதவர்கள் என எவரும் இருக்கிறார்களா என்ன? ‘ஜாண் ஏறினால் முழம் சறுக்குகிறதே...’ என்று புலம்புகிற சராசரி மனிதர்களைக் கொண்ட உலகில், பைரவ வழிபாட்டை ஆத்மார்த்தமாகச் செய்தால், வந்த துன்பமெல்லாம் வந்த திசையில் ஓடச் செய்து அருளுவார் பைரவர் என்கிறார்கள் பக்தர்கள்.
» சங்காபிஷேக தரிசனம் தரும் பலன்கள்!
» சங்காபிஷேகம்... சங்கடம் தீரும்; சந்தோஷம் பெருகும்! அபிஷேகப் பிரியனுக்கு குளிரக்குளிர சங்காபிஷேகம்!
கிரக ஆதிக்கத்தின்படியே சகலமும் நடக்கிறது என விவரிக்கிறது ஆன்மிகம். விஞ்ஞானமும் இப்படித்தான் தெரிவிக்கிறது. நவக்கிரகங்களின் ஆளுமையால், சஞ்சாரத்தால், இன்பமும் துன்பமும் மாறி மாறி வருகிறது நமக்கு. திடீரென பொருளாதாரத்தில் உயருவார்கள். இன்னொருவர் தடாலெனச் சறுக்குவார். புகழின் உச்சிக்குச் சென்றவர்களும் உண்டு. அவமானங்களால் நிலைகுலைந்து போகிறவர்களும் இருக்கிறார்கள். கஷ்டத்தையே ஜீவனமாகக் கொள்பவர்களும் இருக்கிறார்கள். கஷ்டப்படுபவர்களுக்கு வள்ளலென உதவுபவர்களும் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரையும் காத்தருளும் குணமும் தயாள அருளும் கொண்டவர் என பைரவரைச் சொல்கிறது புராணம்.
பைரவர் பூஜையை, பைரவர் தரிசனத்தை, பைரவர் வழிபாட்டை தொடர்ந்து மேற்கொண்டால், ஏற்ற இறக்கங்களில் இருந்து விடுபடலாம். வாழ்வில் நிலையான இன்பத்தை, நிலையான புகழை, நிலையான செல்வத்தை, நிலையான அமைதியைப் பெறலாம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
நம் கிரக சஞ்சாரங்களையும் கிரக தோஷங்களையும் கிரக பலவீனங்களையும் ஜோதிடர்களின் மூலமாக அறிந்து கொண்டு அவற்றைப் போக்குவதற்கும் சரி செய்வதற்குமான பைரவ மூர்த்தியை வழிபடுவது இன்னும் மகத்தான பலன்களைத் தந்தருளும்.
நவக்கிரகங்களின் தொல்லைகளிலிருந்து மீள ஒன்பது விதமான பைரவ வழிபாடுகள் சொல்லப்பட்டிருக்கின்றன. நீங்கள் நல்ல பயனை அடைய, கிரகங்களின் பிராணனாக உள்ள பைரவ காயத்ரீயையும், அந்த பைரவரின் உபசக்தியின் காயத்ரீயையும் சேர்த்து பாராயணம் செய்தும் வழிபாடுகள் செய்தும் வந்தால், கிரக தாக்கங்களில் இருந்தும் கிரக தோஷங்களில் இருந்தும் விடுபடலாம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
நவக்கிரகங்களையும் நவக்கிரக பைரவர்களையும் உபசக்திகள் எனப்படும் தேவதைகளையும் அறிந்து உணர்ந்து பூஜித்தால் அல்லல்கள் எல்லாம் இல்லாமல் போக்கச் செய்வார் பைரவர்.
நவக்கிரகங்கள் - பிராண பைரவர் - பைரவரின் உபசக்தி :
சூரியன் - ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் - பைரவி
சந்திரன் - ஸ்ரீகபால பைரவர் - இந்திராணி
செவ்வாய் - ஸ்ரீசண்ட பைரவர் - கௌமாரி
புதன் - ஸ்ரீஉன்மத்த பைரவர் - வராஹி
குரு - ஸ்ரீஅசிதாங்க பைரவர் - பிராம்மி
சுக்கிரன் - ஸ்ரீருரு பைரவர் - மகேஸ்வரி
சனி - ஸ்ரீகுரோதன பைரவர் - வைஷ்ணவி
ராகு - ஸ்ரீசம்ஹார பைரவர் - சண்டிகை
கேது - ஸ்ரீபீஷண பைரவர் - சாமுண்டி
ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமி நாளிலும் பைரவரை வணங்குவோம். சிவாலயங்களுக்குச் செல்லும் போதெல்லாம் பைரவரை தரிசித்துப் பிரார்த்தனைகள் செய்வோம். பைரவாஷ்டகம் பாராயணம் செய்து வழிபடுவோம்.
கார்த்திகை மாதத்து வளர்பிறை அஷ்டமி, காலபைரவாஷ்டமி என்றும் மகாதேவாஷ்டமி என்றும் போற்றப்படுகிறது.
இன்று 7ம் தேதி திங்கட்கிழமை, அஷ்டமி. கார்த்திகை அஷ்டமி. காலபைரவாஷ்டமி. மகாதேவாஷ்டமி. பைரவரைப் போற்றுவோம். வணங்குவோம். நம் பயத்தையெல்லாம் போக்கியருளுவார். எதிரிகளையெல்லாம் பலமிழக்கச் செய்வார். எதிர்ப்புகளையெல்லாம் தவிடுபொடியாக்கி அருளுவார். எடுத்த காரியம் யாவிலும் பக்கத்துணையாக இருந்து பலமும் அருளும் தந்து காப்பார் பைரவர்!
முடிந்த அளவுக்கு இந்தநாளில், உணவுப் பொட்டலம் வழங்குவோம். தெருநாய்களுக்கு பிஸ்கட்டோ உணவோ அளிப்போம். அல்லல்களில் இருந்து காத்தருள்வார் காலபைரவர்!
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
11 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
9 days ago
ஆன்மிகம்
9 days ago
ஆன்மிகம்
9 days ago
ஆன்மிகம்
9 days ago