ஆன்மிகச் சுற்றுலா - உனகோடி: கோடிக்கு ஒன்று குறைவு

By பிருந்தா கணேசன்

ஓங்கிய பெருங்காடு. அதில் மலைகள் சூழ்ந்த பள்ளத்தாக்கு. ஏகப்பட்ட மலைச் சரிவுகள், பாறைகள். அதில் புடைப்புச் சிற்பங்கள். சலசலக்கும் நீரோடைகள். தனித்து நிற்கும் சிலைகளும் பரவிக் கிடக்கின்றன. இன்னும் பல சிலைகள், காடுகளில் மறைந்தும் புதைந்தும் கிடக்கின்றனவாம். மொத்தம் எவ்வளவு? யாரும் எண்ணியதில்லை. ஒரு கோடிக்கு ஒன்று குறைவாக (உனகோடி என்ற வார்த்தையின் பொருள்) இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

இதனால்தான் இந்தப் பகுதியின் பெயரே உனகோடி என்று வழங்கப்படுகிறது. இந்தியாவின் வடகிழக்கு மூலையில் பசுமை வளம் பொதிந்துள்ள சிறிய மாநிலமான திரிபுராவில் எண்ணற்ற அதிசயங்களும் ஆச்சரியங்களும் உள்ளன. அப்படிப்பட்ட ஆச்சரியங்களில் ஒன்றுதான் உனகோடி. புண்ணியத் தலமாகப் போற்றப்படும் இடம் இது. இந்த ஊரின் அழகு நம்மை வியக்க வைக்கிறது.

சிவனால் சபிக்கப்பட்ட தேவர்கள்

இத்தனை சிலைகள் இங்கே இருப்பதற்கு இரண்டு கதைகள் சொல்லப்படுகின்றன. ஒரு சமயம் சிவபெருமான் ஒரு கோடி தேவர்களுடன் கைலாயம் செல்லும் வழியில் இங்கு இளைப்பாறினார். பரிவாரங்கள் இரவு அங்கேயே தங்க விரும்பினர். அனுமதி வழங்கப்பட்டது ஒரு நிபந்தனையுடன். மறுநாள் சூரிய உதயத்துக்கு முன் கிளம்பிவிட வேண்டும். அனால் மறுநாள் விடிந்தபோது, மகேசன் மட்டுமே எழுந்தார். சினமுற்ற ஈசன், சோம்பேறி தேவர்களைச் சிலைகளாக்கி அங்கேயே இருக்கும்படி சபித்தார். அதனால்தான் இங்கு 99,99,999 சிற்பங்கள் உள்ளனவாம் !

இன்னொரு கதை பரமனையும் பாமரனையும் பாத்திரங்களாகக் கொண்டது. இந்த இடத்தில் உள்ள எல்லாச் சிற்பங்களும் குல்லு கம்ஹார் என்று சிற்பியால வடிக்கப்பட்டவை. அவர் பெரிய சக்தி உபாசகர். பார்வதி, பரமேஸ்வரன் சிவகணங்களுடன் சென்றுகொண்டிருந்தபோது இந்த வழியாக வந்தனர். அப்போது தன்னையும் அழைத்துச் செல்லும்படி வேண்டினார் குல்லு. ஈசனால் இதை ஏற்க முடியவில்லை. பக்தனின் கோரிக்கையை நிறைவேற்ற விரும்பிய உமையவள் ஓர் உபாயம் செய்தாள். இரவு முடிவதற்குள் கோடி கயிலை பதியின் உருவங்களைப் பொறிக்கச் சொன்னாள். ஆனால் விடிவதற்குள் கோடிக்கு ஒன்று குறைவாகவே சிற்பியால் செதுக்க முடிந்தது.

பழங்குடி மரபில் வந்த சிலைகள்

இந்தியாவிலேயே மிகப்பெரிய எண்ணிக்கையில் சிலைகளைக் கொண்ட உனகோடியின் சிற்பங்கள், ஒவ்வொன்றும் 30-40 அடி உயரம் கொண்டது. சிலைகளின் பற்கள், கண்கள், உடற்கூறு, அலங்காரம் எல்லாம் உள்ளூர் பழங்குடிகளின் மரபைச் சார்ந்தவை.

புனிதத் தலமாகக் கருதப்படும் இந்த இடம் முழுவதும் ஏற்றமும் இறக்கமும் கொண்டது. ஒவ்வொரு மூலைக்கும் செல்வதற்கு மேலும் கீழுமாகக் குறுக்கும் நெடுக்குமாக ரிப்பன் போன்ற படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. மலைகளை இணைப்பதற்காகப் பாலங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இங்கே நடக்கும்போது, காலத்தில் மிகவும் பிந்திய, மிகப் புராதனமான ஒரு பழைய புனிதத் தலத்தில் கால் வைத்ததுபோன்ற பிரமிப்பு ஏற்படுகிறது. மெய் சிலிர்க்கிறது.

பத்தடி மணிமகுடம்

ஈசனுக்குக் காலையும் மாலையும் பூஜைகள் நடைபெறுகின்றன. பூசாரிகள் கொஞ்சம் உயரத்தில் குடிசை போட்டு வாழ்கிறார்கள். பக்தர்களுக்கு ஆராதனை செய்வித்துப் பிரசாதம் வழங்குகிறார்கள்.

இந்த இடத்தில் நுழைந்தவுடன் சிற்ப உருவங்கள், ஒருவித அதிர்ச்சியைத்தான் தருகின்றன. தலையும் பெரிய காதுகளும் புத்தரின் முகத்தை நினைவுறுத்துகின்றன. ஆனால் சற்று மேலே பார்க்கும்போது நெற்றிக்கண், பெரிய காதணிகள், பழங்குடிகளைப் போலச் சற்றே பகட்டான மீசையும் அகன்ற பல்லிளிப்புமாக அவை தோற்றம் கொடுக்கின்றன. பத்தடி நீளமுள்ள மணி மகுடம் இந்து சமய அடையாளத்தைக் கொண்டிருக்கிறது.

பவுத்த மரபில் வந்த திரிபுர மலை வாழ் பழங்குடியினரிடயே ஒன்பதாம் நூற்றாண்டில் சைவமும் வைணவமும் பிரவேசித்து நிரந்தரமாகக் குடியேறிவிட்டன. பவுத்த மரபின் அடையாளங்கள் இந்தச் சிற்பக் கலையில் இழையோடுவதையும் காணலாம். சற்று மேலே பார்த்தால் நிறைய உருவங்கள் சிறியதும் பெரியதுமாய் சிதறிக் கிடக்கின்றன. அவற்றில் புன்சிரிப்புடன் தலையில் இறகுகளான கிரீடத்துடன் உள்ள இரு பிரம்மாண்டமான பெண் உருவங்கள் கவனத்தை ஈர்க்கின்றன.

கீழே இறங்கும்போது ஓடை ஒன்று அருவியாக விழுகிறது. அந்தப் பாறையில் கணபதி உருவம் அமர்ந்த நிலையில் உள்ளது. அருகிலேயே நின்ற நிலையில் கணேசரின் உருவங்கள். இவற்றுக்குச் சற்றே இடப்பக்கத்தில் இன்னும் நேர்த்தியுடன் விஷ்ணுவின் உருவம். இவ்விடத்தில் நடுநாயகமாக இருக்கும் சிவனின் பெயர் உணகொடீச்வர பைரவர். இங்கிருக்கும் மற்ற தெய்வங்கள் துர்க்கை, கங்கை, கௌரி, வீரபத்திரர், சீதா ராமர், கின்னரர், பார்வதி தபஸ், மற்றும் பல. சதுர்முக லிங்கங்கள், கல்யாண சுந்தர மூர்த்தி என மேலும் பல சிலைகளும் உள்ளன.

இன்னொரு சிறப்பம்சம் ஜடாமுடியுடன் உள்ளே நுழைந்தவுடன் முதலில் இருக்கும் சிவனின் தலை. இதில் மேலே தலையிலிருந்து ஓர் ஓட்டை. அதன் வழியாகத் தண்ணீர் வழிந்தோடுகிறது. இது சிவனின் தலையிலிருந்து கங்கை வழிந்தோடுவதைக் குறிப்பதுபோல் அமைந்துள்ளது. நரசிம்மர், ஹரன் கௌரி, ஹரிஹரன், அனுமன், பஞ்சானனன் உருவங்களும் இங்கே உள்ளன.

பழைய கோவிலின் சிதிலமடைந்த பாகங்கள் ஆங்காங்கே தென்படு கின்றன. இது ஒரு திருத்தலமாகவே இருந்திருக்கிறது என்று இதை வைத்து ஊகிக்கலாம். இங்கு வர மேற்கொள்ளும் யாத்திரை புனித யாத்திரையாகக் கருதப்படுகிறது.

திரும்பி வரும்போது சிலைகளைப் பார்த்துக்கொண்டே பிரமிப்புடன் நடக்கும்போது பறவைகளின் ஒலி கேட்கிறது. பிறகு நிசப்தம் சூழ்கிறது. இந்த ஒலியும் நிசப்தமும் இந்தச் சிலைகளின் தரிசனமும் சேர்ந்து தியான உணர்வைத் தருகின்றன.

‘அசோகாஷ்டமி விழா'

இளவேனிற்காலத்தின் போது நடைபெறும் ‘அசோகாஷ்டமி விழா'வில் நடைபெறுகிறது. அப்போது ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வழிபாட்டுக்காகக் கூடுகின்றனர்.

எப்படிச் செல்வது ?

ரயில்: குவாஹாத்தியிலிருந்து அகர்தலாவிற்கு ரயில்கள் உள்ளன. கௌஹாத்தியிளிருந்து தரை மார்க்கமாகவும் உனகோடி வர முடியும்.

ஆகாயம்: கல்கத்தாவிலிருந்து அகர்தலாவுக்கு நேராகப் பறக்கலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

9 hours ago

ஆன்மிகம்

17 hours ago

ஆன்மிகம்

22 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

8 days ago

மேலும்