ஒளிமயமான வாழ்வைத் தரும் திருக்கார்த்திகை! 

By வி. ராம்ஜி

தீபமேற்றி இறைவனை வணங்குவதுதான் நம்முடைய வழக்கம். செவ்வாய் வெள்ளிக் கிழமைகளில் தீபமேற்றுவதும் தினமும் தீபமேற்றுவதும் கடவுளை பூஜிக்கிற முக்கியமான சடங்கு சாங்கியங்களில் ஒன்றாக இருக்கிறது. ஆனால், தீபத்தையே இறைவனாக, இறை சக்தியாக வழிபடுகின்ற அற்புதமான நாள்தான் திருக்கார்த்திகை தீபத் திருநாள்.

வீடு முழுக்க, வாசலில் வரிசையாக, வீட்டைச் சுற்றிலும் என தீபங்கள் வரிசைகட்டி ஏற்றிவைத்து, தீபத்தை வணங்கும் அருமையான நன்னாள்தான் திருக்கார்த்திகை தீபத் திருநாள். நம் வீடுகளில் எப்படி ஒளி நிறைந்திருக்கிறதோ... பரந்துவிரிந்த ஆகாயமும் பெளர்ணமி முழு நிலவால் தகதகத்து பிரகாசிக்கிற நன்னாள்தான் திருக்கார்த்திகை தீபநாள்.

கார்த்திகை நட்சத்திரத்துடன் முழுமதியான பெளர்ணமி சேரும் காலம் அற்புத அதிர்வுகள் கொண்டது. நம் எண்ணங்களை மேம்படுத்தக் கூடியது. துர் சிந்தனைகளையும் துர்தேவதைகளையும் விரட்டியடிக்கக் கூடியது. பொதுவாகவே பெளர்ணமியின் குணம் இதுதான் என்கிறது சாஸ்திரம். கூடவே கார்த்திகை நட்சத்திரமும் சேரும் போது, இன்னும் வலுவாக அமைந்து நமக்குள் நற்சிந்தனைகளையும் நல்ல நல்ல செயல்களையும் உண்டாக்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

இப்படியான குளிர் மிகுந்த கார்த்திகையின் முழுமதி நாளில், சிவபெருமான் ஜோதிப் பிழம்பாகக் காட்சி தந்து அருள்பாலிக்கிறார். அவர், அக்னி மண்டலத்தின் நடுவில் உமையொரு பாகனாக திருநடனம் புரிகிறார். அதுவே கார்த்திகை தீபத் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது என்கின்றன ஞான நூல்கள்.

இந்தத் திருநாளில் ஆலயங்கள்தோறும், வீடுகள்தோறும் ஏராளமான விளக்குகளை ஏற்றிவைத்து வணங்குவது வழக்கம். அது ஏன்? விண்ணில் விளங்கும் நட்சத்திரக் கூட்டங்களை மண்ணில் ஒளிர்வதாகக் காட்டுவதே திருக்கார்த்திகை தீபத்திருநாள். அதையொட்டியே, அன்று ஏராளமான தீபங்கள் ஏற்றுகிறோம். குடும்பத்துக்கே ஒளியெனத் திகழும் விளக்குகள் ஏற்றப்படுகின்றன.

வீட்டின் பெரியவர்கள் அகல்விளக்கில் எண்ணெய் ஊற்றி, திரிவைத்து தீபமேற்றிக் கொடுப்பார்கள். வீட்டின் சிறுவர் சிறுமிகள், வாசலில் கோலமிட்டு தீபங்களை வரிசையாக வைப்பார்கள்.

திருக்கார்த்திகை தீபத் திருநாளில், குடும்பத்தார் அனைவரும் சேர்ந்து சிவ பார்வதிதேவியை, அம்மையப்பனை வணங்கி வழிபடுவார்கள். பொரி உருண்டை முதலான நைவேத்தியங்களைப் படையலிடுவார்கள்.

பின்னர், கோயிலுக்குச் சென்று இறைவனை வழிபடுவார்கள். சிவ பாராயணம் செய்தும் ருத்ரம் ஜபித்தும் வேண்டிக்கொள்வார்கள்.

தீபத்தில் குடிகொண்டிருக்கும் இறைவனை, தென்னாடுடைய சிவனை, திருக்கார்த்திகை நன்னாளில் வேண்டும். நம் குடும்பத்துக்கும் வம்சத்துக்கும் ஒளிமயமான வாழ்க்கையைத் தந்தருள்வான் ஈசன்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

23 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

10 days ago

ஆன்மிகம்

10 days ago

மேலும்