கந்தசஷ்டியில்... திருச்சி வழிவிடும் முருகனை வேண்டுவோம். நல்வழி காட்டி அருளுவான் வேலவன். நாளைய தினம் 20ம் தேதி கந்தசஷ்டி.
நல்ல வழி கிடைக்காதா என்பதுதான் நம் எல்லோருடயை பிரார்த்தனை. ஏக்கம். கனவு. வேண்டுதல். நம்முடைய எதிர்பார்ப்புகளையெல்லாம் ஈடேற்றித் தருவதால், இந்த முருகனுக்கு, வழிவிடு முருகன் என்றே பெயர் அமைந்தது என சிலிர்ப்பும் வியப்புமாகச் சொல்கிறார்கள் முருக பக்தர்கள்.
திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் இருந்து வெளியே வந்ததும், ரவுண்டானா பகுதியில் ரயில்நிலையத்தைப் பார்த்தபடி அமைந்திருக்கிறது வழிவிடு முருகன் கோயில். திருச்சியில் இருந்து வேறு ஊருக்குச் செல்பவர்களுக்கும் வேறு வேறு ஊர்களில் இருந்து இங்கே வருபவர்களுக்கும் நினைத்த காரியத்தை ஈடேற்றித் தருவதற்காகவும் நல்வழி காட்டுவதற்காகவும் கோயில் கொண்டிருக்கிறார் முருகக் கடவுள்.
மிகச் சிறிய கோயில். ஆனாலும் கீர்த்தியில் உயர்ந்திருக்கிறது இந்தத் திருத்தலம். ஊருக்குக் கிளம்பிச் செல்பவர்களும் சரி... ஊருக்குள் வந்து இறங்குபவர்களும் சரி... சந்நிதியில் நின்று வழிவிடும் முருகனிடம் வேண்டிக் கொண்டு செல்வதை வழக்கமாக் கொண்டிருக்கின்றனர்.
» மாம்பழம் கொடுத்தால் கடன் பிரச்சினை தீரும்; குறைகள் அனைத்தும் தீர்ப்பான் குமரகிரி முருகன்!
அழகே உருவெனக் கொண்டு, அற்புதமாகக் காட்சி தருகிறான் வடிவேலன். செவ்வாய்க்கிழமைகளில், பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. ரயில் நிலையத்தில் இருந்து மத்திய பேருந்து நிலையம் செல்லும் சாலையின் இரண்டு பக்கமும் ஏராளமான கடைகள் இருக்கின்றன. இந்தக் கடைக்காரர்கள் பலரும், தினமும் வழிவிடும் முருகனை தரிசித்துவிட்டு, சந்நிதியில் கடைச்சாவியை வைத்து எடுத்துக் கொண்டு, கடையை திறக்கிறார்கள். வியாபாரத்தை தொடங்குகிறார்கள். ‘அப்பனே முருகா... இன்னிக்கி பொழுது நல்ல பொழுதா அமையணும். நல்லபடியா வியாபாரம் ஆகணும்’ என்று வேண்டிக்கொள்கின்றனர்.
அப்படியான வேண்டுதலை நிறைவேற்றி அருள்வதால், ஆடிக் கிருத்திகை, தை கிருத்திகை, பங்குனி உத்திரம், தைப்பூசம், வைகாசி விசாகம், கந்த சஷ்டி, திருக்கார்த்திகை முதலான நாட்களில், இங்கே உள்ள வியாபாரிகள் ஒவ்வொருவரும் தனித்தனியாகவும் சேர்ந்தும் அன்னதானம், சிறப்பு பூஜைகள் செய்கிறார்கள்.
திருச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்தவர்கள், புதிதாக இரு சக்கர வாகனமோ கார் முதலான நான்கு சக்கர வாகனமோ வாங்கினால், வழிவிடும் முருகன் கோயில் வாசலில் வந்து நிறுத்துகின்றனர். வண்டிச் சாவியை முருகன் காலடியில் வைத்து வேண்டிக் கொள்கின்றனர். வண்டிக்கு சந்தனம் குங்குமமிட்டு, மாலை அணிவித்து, சூடமேற்றி பூஜை செய்யப்படுகிறது. அதன் பிறகு வண்டியின் டயரில் எலுமிச்சையை வைத்து திருஷ்டி கழித்துவிட்டு வேண்டிச் செல்கின்றனர்.அப்படிச் சென்றால், வழியில் ஏதும் நிகழாமல் காத்தருள்வான் வடிவேலன் என்பது நம்பிக்கை. வாகன விபத்து ஏதும் நேராமல் வழிவிடும் முருகன் காத்தருள்வான். செல்லும் வழியெங்கும் துணைக்கு வருவான் என்று போற்றுகின்றனர், பக்தர்கள்!
அதேபோல், ரயில் எஞ்சின் டிரைவர்கள் தொடங்கி பேருந்து ஓட்டுனர்கள் வரை பலரும் வழிவிடும் முருகனை மனதார வேண்டிக் கொள்கின்றனர். தினமும் இரவில் பேருந்தை ஷெட்டில் நிறுத்துவதற்கு முன்னதாக, இங்கு வந்து கோயில் நடையே சார்த்தியிருந்தாலும் கூட, வாசலில் சூடமேற்றி, வணங்கிவிட்டு, அன்றைய பணியை நிறைவு செய்கின்ற பக்தர்களும் இருக்கிறார்கள்.
எவ்வளவு பிரச்சினையாக இருந்தாலும் வழிவிடும் முருகன் சந்நிதியில் வந்து, இரண்டு நிமிடம் கண்மூடி வேண்டிக் கொண்டால் போதும். நம் வேதனைகளையெல்லாம் போக்கி அருள்வான் வழிவிடும் முருகன், திக்குத்திசை தெரியாமல் வாழ்க்கையில் தவித்து மருகுவோருக்கு நல்வழி காட்டி அருளுவான் கந்தபெருமான் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
வேலைக்கு இண்டர்வியூ செல்லும் இளைஞர்களும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்குச் செல்பவர்களும் இங்கே வந்து, முருகப்பெருமானை தரிசித்து, சிதறுகாய் உடைத்து வழிபட்டுச் செல்கின்றனர். அப்படி வழிபட்டால், நல்ல வேலை கிடைக்கப் பெறலாம். தீராத நோயும் தீர்ந்துவிடும் என்பது ஐதீகம்!
இன்னொரு விஷயம்... பழநிக்குப் பாதயாத்திரை செல்லும் திருச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த பக்தர்கள், வழிவிடும் முருகன் கோயிலுக்கு வந்து, முருகப்பெருமானைத் தரிசித்துவிட்டு, சிதறுகாய் உடைத்துவிட்டுத்தான், பழநி பாதயாத்திரையைத் தொடங்குகிறார்கள்.
கந்தசஷ்டி நாளில்... சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. நாளைய தினம் 20ம் தேதி வெள்ளிக்கிழமை கந்த சஷ்டி. அற்புதமான இந்த நாளில், வழிவிடும் முருகனை கண்ணாரத் தரிசித்து மனதார வேண்டிக்கொள்ளுங்கள். வாழ்வில், இனி நல்ல வழியைத் தந்தருள்வான். வியாபாரத்தை விருத்தி செய்து அருளுவான். வீடு மனை வாங்கும் யோகத்தைத் தந்தருளுவான்.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
13 hours ago
ஆன்மிகம்
19 hours ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
9 days ago
ஆன்மிகம்
9 days ago
ஆன்மிகம்
10 days ago