அழகன் முருகனை வியந்து பார்க்கும் மயில்! 

By வி. ராம்ஜி

கந்தசஷ்டி விழா நடந்துகொண்டிருக்கும் தருணத்தில், முருகப்பெருமான் குடிகொண்டிருக்கும் தலத்துக்குச் சென்று கந்தனை வேண்டுவோம். அசுரனை அழித்தது போல் நம் அல்லல்களையெல்லாம் அழித்து, நம்மைக் காத்தருள்வான் வேலவன்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ள அற்புதமான திருத்தலம் சீர்காழி. இங்கிருந்து சிதம்பரம் நோக்கிச் செல்லும் வழியில் உள்ளது புத்தூர். இங்கிருந்து கிளை பிரிந்து செல்லும் சாலையில் சுமார் இரண்டு கிலோ மீட்டர் பயணித்தால் அற்புதமான முருகப்பெருமானை, அழகு ததும்பும் முருகக் கடவுளை தரிசிக்கலாம். இந்த ஊரின் பெயர் மயிலாடி.


அழகு தொடர்பான போட்டியும் அதுகுறித்த கர்வமும் எல்லோருக்கும் எல்லா காலத்திலும் இருக்கும். இதற்கு கடவுளர்களும் விதிவிலக்கல்ல. அழகு என்பதில் அப்பன் சிவனாருக்கும் அம்மை பார்வதிதேவிக்கும் வாக்குவாதம் வந்தது. இந்த வாதம் சண்டையாக வளர்ந்தது.

‘நானே அழகு’ என்று ஈசன் சொன்னார். ‘அட... இதென்ன விந்தை. நான்தான் அழகு’ என உமையவள் மறுத்துச் சொன்னாள். இரண்டுபேருக்கும் ஆரம்பமானது சண்டை. ஒருகட்டத்தில், கடுங்கோபத்துக்கு ஆளான ஈசன், திருக்கயிலாயத்தில் இருந்து சட்டென மறைந்தார். அதைக் கண்டு, துடித்துப் போனாள் பார்வதி தேவி. கலங்கிக் கதறினாள். ’என்னடா இது தேவையில்லாத சண்டை’ என்று வருந்தினாள். ‘இந்த உருவம்தானே அழகு என்று நம்மை கர்வம் கொள்ளவைத்தது’ என்று தன் சிந்தையைக் கண்டு தானே கவலைப் பட்டாள். துக்கப்பட்டாள்.
உடலைத் துறந்தார். உருவத்தை இழந்தார். மயிலாக மாறினாள் பார்வதிதேவி. சிவபெருமானை எண்ணி, மனமுருக வேண்டினாள். கடும் தவத்தில் ஆழ்ந்தாள். மயிலாக இருந்து சிவ பூஜை செய்தாள்.

இதில் மகிழ்ந்து நெகிழ்ந்தார் ஈசன். அழகிய லிங்கத் திருமேனியராகக் காட்சி தந்தார். அதைக் கண்டு நெக்குருகினார் உமையவள். தோகையை விரித்து மனம் குளிர ஆடினாள். மனநிறைவுடன் ஆடினாள். ஆடியாடிக் கூதூகலித்தாள். ஆனந்தமாக ஆடினாள். ஆடியபடியே... மயிலாக ஆடியபடியே சிவலிங்கத்தை வலம் வந்தாள்.
அம்மை உமையவள் மயிலாக வந்து ஆடிய திருத்தலம் மயிலாடி என்று போற்றப்படுகிறது என்கிறது புராணம். திருமயிலாடி என்று போற்றப்படுகிறது. இங்கே குடிகொண்டிருக்கும் சிவனாரின் திருநாமம் ஸ்ரீசுந்தரேஸ்வரர். மயிலாடி என்று உமையவள் இருந்தாலும் சிவனார் குடிகொண்டிருக்கும் தலம் என்றாலும் இங்கே மயில்வாகனனே நாயகன்!

இங்கே சிவனாரும் விசேஷம். அம்பாளும் சிறப்புக்கு உரியவர். கந்தனின் அண்ணன் விநாயகரும் முக்கியத்துவம் கொண்டவராகத் திகழ்கிறார். பிள்ளையாரின் திருநாமம் ஸ்ரீசுந்தர விநாயகர். கண்வ மகரிஷி விநாயகரைப் பிரதிஷ்டை செய்து சிவபூஜையில் ஈடுபட்டார் என்கிறது ஸ்தல புராணம்.

இங்கு வந்து, ஸ்ரீசுந்தரவிநாயகர், ஸ்ரீசுந்தரேஸ்வரர் ஆகிய இருவரையும் வணங்கி வழிபட்டால், முகத்தில் தேஜஸ் கூடும். ஆரோக்கியம் கூடும். மனதில் தெளிவு பிறக்கும். மங்கல காரியங்கள் நடந்தேறும்.

இன்னொரு சிறப்பு... இங்கே ஸ்ரீபெரியநாயகி, ஸ்ரீபிரகதாம்பாள் என இரண்டு தேவியரின் சந்நிதிகள் அடுத்தடுத்து காட்சி தருகின்றன. இருவருக்கும் அபிஷேக- ஆராதனைகள் விமரிசையாக நடைபெறுகின்றன. இந்தத் தலத்து முருகப் பெருமானை வணங்கினால், செல்வம் பெருகும். நல்ல வரன் அமையும். பிள்ளை பாக்கியம் கிடைக்கப்பெறும். வீடு மனை யோகம் கிடைப்பது உறுதி என்கிறார்கள் பக்தர்கள்.

கிழக்குப் பார்த்த மூன்றடுக்குக் கோபுரம் கொண்ட ஆலயம். உள்ளே... வடக்குப் பார்த்த நிலையில், அழகுறக் காட்சி தருகிறார் ஸ்ரீபாலசுப்ரமணிய ஸ்வாமி. கருவறையில், ஸ்ரீசுந்தரேஸ்வரர் கிழக்கு திசை பார்த்தபடி இருக்க, ஸ்ரீபிரஹன்நாயகி மற்றும் ஸ்ரீபெரியநாயகி என இரண்டு அம்பிகையும் தெற்குப் பார்த்தபடி அருளுகின்றனர். அழகும் கருணையும் ததும்பக் காட்சி தரும் தேவியரைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம்!

ஸ்ரீசுந்தரேஸ்வரர் ஆலயம் என்று கேட்டால்தான் மக்கள் வழிகாட்டுகிறார்கள். எனினும், ஆலய நாயகன், முருகப்பெருமான்தான்! இங்கே... மூலவரைப் போலவே உற்ஸவரும் கொள்ளை அழகு. இதில் இன்னொரு விசேஷம்... வழக்கமாக மயிலின் மீது அமர்ந்திருப்பார் முருகக் கடவுள். ஆனால் இங்கு, பாதரட்சைக்குப் பதிலாக மயிலையே அணிந்திருக்கிறார் வேலவன்.

அதாவது, அசுரனை அழித்து, அவனது ஆணவத்தை மயிலாக்கி காலின்கீழ் மிதித்தபடி காட்சி தருகிறார். இடதுகாலின் பெருவிரலுக்கும் அடுத்த விரலுக்குமான இடைவெளியில், தலையைத் தூக்கியபடி, முருகப்பெருமானின் அழகு ததும்பும் முகத்தைப் பார்த்தபடி காட்சி தரும் மயில், வேறெங்கும் காணக் கிடைக்காத ஒன்று.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

7 hours ago

ஆன்மிகம்

15 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

மேலும்