’உண்மையாய் விரதமிருந்தால் ஐயப்பன் அருள் நிச்சயம்!’ - விரத முறைகள் குறித்து பக்திப் பாடகர் வீரமணி ராஜு விளக்குகிறார்

By வி. ராம்ஜி


அற்புதமான கார்த்திகை மாதம், அமர்க்களமாகத் தொடங்கிவிட்ட்டது. ஒரு மாதத்தின் பிறப்பை, இப்படிக் கொண்டாட்டமாக, குதூகலமாக, பக்திசிரத்தையாகச் செய்த விந்தை, ஐயப்ப சுவாமிக்கே உரியது. ஐயப்ப பக்தர்களுக்கு மட்டுமேயானது!

கார்த்திகை மாதம் துவங்கிவிட்டாலே, வண்ண வேட்டிகளை அணிந்து, கழுத்தில் துளசி மாலை அணிந்து, நெற்றியில் மணக்கும் சந்தனத்தை இட்டுக் கொண்டு, ‘சுவாமி சரணம்’ எனும் வார்த்தையை, வார்த்தைக்கு வார்த்தை சொல்லிக் கொண்டு, பாட்டு, பஜனை, பூஜை என ஊரையே அவர்களும் மகிழ்ந்து நம்மையும் மகிழச் செய்துவிடுவார்கள் பக்தர்கள்.

வருடந்தோறும் தவறாமல் செல்லும் பக்தர்கள், தவறாமல் கடைப்பிடிக்கும் விரதமுறைகள் பலருக்கும் தெரிந்ததுதான். என்றாலும் கன்னிசாமிகளாக, முதல்முறை மாலையணிந்து விரதம் மேற்கொள்பவர்களுக்காக, ஐயப்ப மலைக்கு மாலையணியும் பக்தர்களின் விரத முறைகளைப் பார்ப்போம்.

என் நண்பர் அடிக்கடி சொல்வார்... ‘‘எந்தவொரு விஷயத்தையும் 21 நாட்கள் தொடர்ந்து கடைப்பிடிக்கச் சொல்கிறது விஞ்ஞானம். அதாவது ஒருவர், காலையில் 5 மணிக்கு எழுந்திருந்ததே இல்லை. ஆனால் இனி எழவேண்டும் என திட்டமிடுகிறார். ஆனால், ஒருநாள் இரண்டு நாள் ஆர்வத்துடன் எழுந்திருப்பார். மூன்றாவது நாளோ நான்காவது நாளோ, அலுவலகத்தில் இருந்து தாமதமாக வந்ததலோ அல்லது தாமதமாகத் தூங்கியிருந்ததாலோ அல்லது காலையில் மழை பெய்து கொண்டிருந்தாலோ என்று ஏதேதோ காரணமாக நினைத்துக் கொண்டு, எழுந்திருக்கமாட்டார். ஆனால் இவற்றையெல்லாம் ஒரு தடையாகக் கருதாமல், மன உறுதியுடன் ஒருவர் 21 நாட்கள் தொடர்ந்து அதிகாலையில் ஐந்து மணிக்கு எழுந்துவிட்டால், பிறகு ஒரு அலாரம் அவர் மூளைக்குள் செயல்படத் தொடங்கிவிடும். உடலானது பழக்கமாகிவிடும். பிறகு அவரே நினைத்தாலும் ஐந்து மணிக்கு எழுந்திருப்பதைத் தடுக்கமுடியாது’’ என்பார். ஐயப்ப பக்தர்கள் இப்படித்தான் விரதம் இருக்கிறார்கள். அதை ஒரு நியமமாகக் கடைப்பிடிக்கிறார்கள்.

ஐயப்ப சுவாமிக்கு நாம் இருக்கிற 48 நாள் எனப்படும் விரதம், ஒரு மண்டலமாகச் சொல்லப்படுகிறது. இந்த மண்டல காலத்தில் எவரொருவர் கர்மசிரத்தையுடன் விரதம் மேற்கொள்கிறார்களோ... அவர்களின் உடலும் மனமும் புத்தியும் பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பதாகி விடுகின்றன என்பதே சத்தியம். அப்படியான கட்டுக்கோப்பும் எல்லாச் செயல்களுக்குமான அஸ்திவாரமும்தான் இந்த ஐயப்ப விரத முறைகள்!

சரி.. விரத முறைகள் குறித்து ஐயப்பப் பக்தரும் பிரபல பக்திப் பாடகருமான வீரமணி ராஜு விளக்கினார்.

* கார்த்திகை மாதப் பிறப்பில் விரதம் இருக்கத் துவங்கினால், நாள் பார்க்கத் தேவையில்லை. அடுத்தடுத்த நாளில் விரதத்தைத் துவங்குவோர், நிச்சயமாக நாள் பார்த்து விரதம் மேற்கொள்ளவேண்டும் என்கிறார்கள் சிலர். நாளும்கோளும் நமக்குத்தான். ஐயப்ப சுவாமியை மனதில் இருத்திக் கொண்டு, விரதம் துவங்குவதற்கு நாளும் தேவையில்லை; நட்சத்திரமும் பார்க்க வேண்டாம் என்கிறார்கள் இன்னும் சிலர். இவற்றையெல்லாம் விட, உங்களை மலைக்கு அழைத்துச் செல்லும் குருசாமி என்ன சொல்கிறாரோ, அதன்படி கேட்டு, விரதத்தைத் தொடங்குங்கள். ஆக மலைக்கு விரதம் இருப்பதற்கான முதல் விஷயம்.. குருவிடம் பணிதல். குரு சொல் கேளீர். குருவின் சொல்லைக் கேட்டு நடக்கவேண்டும்.

* 41 நாட்கள் விரதம் இருப்பது அவசியம் என்பதை மறந்துவிடாதீர்கள். இந்த 41 நாள் விரதம், உங்கள் உடலையே புத்துணர்ச்சியாக்கி விடும். மனதை மலர்ச்சிப்படுத்திவிடும். 48 நாள் விரதம் மேற்கொள்ள வேண்டும் என்று பல குருசாமிகள் சொல்கிறார்கள். அதற்கு ஓர் காரணமும் சொல்லப்படுகிறது. ஒரு மண்டலம் என்பது 48 நாட்கள். மொத்தம் 27 நட்சத்திரங்கள் இருக்கின்றன. அதேபோல் 12 ராசிகள் அமைந்து உள்ளன. ஒன்பது கிரகங்கள், அதாவது நவக்கிரகங்கள் இருப்பதையும் அறிவோம். இவற்றையெல்லாம் கூட்டினால் வருவது 48. எவரொருவர் 48 நாட்கள் விரதம் அனுஷ்டிக்கிறார்களோ, இந்த நாட்களில் ஐயப்ப சுவாமியை மெய்யுருக நினைத்து, பக்தி செலுத்துகிறார்களோ அவர்களுக்கு நட்சத்திரத்தாலும், ராசியாலும், கிரகங்களாலும் எந்த தோஷங்களும் நெருங்காது. அவர்களை பகவான் பார்த்துக் கொள்கிறான் என்று நம் முன்னோர்கள் சொல்லிவைத்திருக்கிறார்கள்.

* துளசிமாலை 108 மணிகள் கொண்டதாக அணியவேண்டும். அதேபோல், ருத்திராட்ச மாலை அணிந்துகொண்டால், அதில் 54 ருத்திராட்சமணிகள் கொண்டதாக அணிந்துகொள்ளவேண்டும். அதில், ஐயப்பனின் திருவுருவம் பொறித்த டாலரை இணைத்து அணிந்து கொள்கிறார்கள். துளசி என்பது பெருமாளுக்கு உரியது. ருத்திராட்சம் என்பது சிவனாருக்கு உரியது. ஐயப்ப ஸ்வாமி, சிவனாரும் விஷ்ணுவும் இணைந்த அம்சம்!

* காலையும் மாலையும் குளிக்கவேண்டும். அப்படிக் குளிப்பதால், உடலானது குளிர்ச்சி அடைகிறது. வெம்மை குணம் கொண்ட துளசிமாலை, உடலின் வெப்பத்தை சீராக வைத்துக் கொள்கிறது.

* பெற்றோர் அல்லது வீட்டுப் பெரியவர்களின் ஆசியுடன், குருநாதரின் உதவியுடன் மாலையணிந்து விரதம் துவங்குவது உத்தமம். துவக்கத்தின் போது, குருசாமி யார் என முடிவு செய்யாத பட்சத்தில், கோயிலுக்குச் சென்று, ஸ்வாமியின் திருப்பாதத்தில் மாலையை வைத்து, ஐயப்பனையே குருவாக நினைத்து மாலையணியலாம். விரதம் துவங்கலாம்!

* கோபத்தைக் குறைப்பது உத்தமம். எல்லோரிடமும் அன்பாகப் பேசவும் பழகவும் செய்யுங்கள். கோபக்காரன் என்று பெயரெடுத்தால், நம்மைச் சுற்றியுள்ளவர்களே நம்மிடம் நெருங்கமாட்டார்கள். அப்படியென்றால், கடவுள் எப்படி நம்மருகே வருவார் என்று யோசியுங்கள்.

* தினமும் காலையும் மாலையும் வீட்டில், பூஜையறையில் சரண கோஷங்களைச் சொல்லி ஐயப்பனை வணங்கவேண்டும். வாய்விட்டு, மனம் விட்டு கோஷமிடுங்கள். அப்போது உங்களுக்குள் ஏற்படுகிற புத்துணர்ச்சியையும் நம்பிக்கையையும் உணர்ந்து சிலிர்ப்பீர்கள்.

* விரத நாட்களில், முடி வெட்டவோ, தாடி மழிக்கவோ கூடாது. நகம் வெட்டுவதையும் தவிர்க்கவேண்டும்.

* வழக்கமாக படுக்கை, மெத்தை, கட்டில் ஆகியவற்றில் தூங்குபவர்கள், விரத காலத்தில் இவற்றில் தூங்குவதைத் தவிர்க்கவேண்டும். துண்டு அல்லது போர்வையை விரித்து, மணைப்பலகையை தலைக்கு வைத்துக் கொண்டு தூங்குங்கள்.

* மரணம் முதலான துக்க காரியங்களில், ஐயப்ப மாலை அணிந்தவர்கள் மட்டுமின்றி, அவரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கூட கலந்துகொள்ளக் கூடாது. மிக முக்கியமான உறவுக்காரர்கள், நண்பர்கள் இறந்துவிட்டால், ஐயப்ப மாலையை கழற்றி, ஸ்வாமி படத்தில் மாட்டிவிட்டு, துக்க காரியத்துக்குச் செல்லவேண்டும். பிறகு ஒரு வருடத் தீட்டு முடிந்த பிறகு, அடுத்த வருடம்தான் மாலையணிந்து செல்லவேண்டும். அதேபோல், பெண்ணின் சடங்கு, குழந்தை பிறந்து பெயர்சூட்டுதல் முதலான விழாக்களையும் தவிர்ப்பதே உத்தமம்!

இவ்வாறு வீரமணி ராஜு தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

20 hours ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

9 days ago

மேலும்