உண்மையான பக்தியை உணர்த்திய கிருஷ்ணர்; நரகாசுர வதத்துக்கு முன் செய்த கிருஷ்ண லீலை! 

By வி. ராம்ஜி

ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவை, நாம் மனதார நினைத்து வழிபட்டு வந்தால் போதும். உண்மையான பக்தனின் அன்புக்குக் கட்டுப்பட்டு நமக்கு அருளுவார் பகவான் கிருஷ்ணர்.

பகவான் கிருஷ்ணரின் லீலைகளில் ஒன்றைப் புராணம் விவரிக்கிறது.

ஒருமுறை, ஸ்ரீகிருஷ்ணர் தனக்கு தலைவலி வந்ததுபோல நடித்தார். அவர் மனைவி சத்யபாமா, பதறியடித்துக் கொண்டு ஓடி வந்தாள். அடுத்து ருக்மிணியும் பதைபதைத்து வந்தாள். அவர்களுக்குத் தெரிந்த வைத்தியத்தையெல்லாம் செய்து பார்த்தார்கள். ஆனால், வலி நின்றபாடில்லை. உண்மையாகவே வலி இருந்தால் சரியாகிவிடும். இது நடிப்புத்தானே! எனவே, வலியால் துடிப்பது போல தொடர்ந்து நடித்தார் ஸ்ரீகிருஷ்ணர்.

அப்போது, அங்கு வந்தார் நாரதர். ஊரையே ஏமாற்றும் நாரதரை உலகளந்த எம்பெருமான் ஏமாற்றி விட்டார். உண்மையிலேயே,சுவாமிக்கு தலைவலிதான் என்று நாரதரும் நம்பிவிட்டார்.

இதற்கான மருந்தை அந்த பரந்தாமனைத் தவிர வேறு யாரால் சொல்ல முடியும் என நினைத்தார். எங்களைப் போன்றவர்களுக்கு வியாதிகள் வந்தால், வைத்தியர் அறிந்து மருந்து தருவார். உலகின் எல்லா மக்களுக்கும் வைத்தியம் செய்ய வைத்தியர் இருக்கிறார். ஆனால் நீங்கள்தான் உலகம். உலகையும் மக்களையும் சிருஷ்டித்தவர் நீங்கள்தான். எனவே இதற்கான மருந்து என்ன என்பது உங்களுக்குத்தான் தெரியும். அந்த மருந்தைச் சொல்லுங்கள். எங்கே இருக்கிறது என தெரிவியுங்கள். மருந்தை வரச் செய்ய ஏற்பாடுகள் செய்கிறேன் என்றார் நாரதர் பெருமான்.

கிருஷ்ணர் அவரிடம், ’என் மீது அதிக பக்திகொண்டவர் யாரோ, அவருடைய பாதத்தில் படிந்த மணலை உதிர்த்து தண்ணீரில் கலக்கி எடுத்து வாருங்கள். அந்த பாதத்துளி தீர்த்தம் என்னைக் குணமாக்கி விடும்’ என்றார்.

நாரதரும் தேடிப்பார்த்தார். யாரும் சிக்கவில்லை. எல்லாரும் தங்கள் பக்தியில் ஏதோ ஒரு குறையைத்தான் கூறினர். கிருஷ்ணரிடமே திரும்பிய நாரதர், மருந்தைச் சொன்ன நீ மருந்து எங்கு உள்ளது என்பதையும் சொல்லி விடு கிருஷ்ணா என்றார். அதற்கு, கிருஷ்ணர் சொன்ன பதிலைக் கேட்டு சிரித்துவிட்டார் நாரதர்.

’கிருஷ்ணா! கோபியரின் கால் தூசைக் கொண்டு வரச்சொல்கிறாயே! எங்களைப் போன்றவர்கள் யாகம்,பூஜைகளால் உன்னை ஆராதிக்கிறோம். அப்படிப்பட்ட நாங்களே எங்கள் பாதத்தில் படிந்திருக்கும் தூசியை தருவதற்கு யோசிக்கிறோம். கல்வியறிவற்ற கோகுலத்துப் பெண்களின் கால் தூசை கேட்கிறாயே! என்ன விளையாட்டு இது’ என்றார்.

பகவான் கிருஷ்ணரோ, ‘சொன்னதை செய் நாரதா’ என்றார். இதையடுத்து நாரதரும் கோகுலத்துக்குச் சென்றார்.

கிருஷ்ணனுக்கு உடல்நிலை சரியில்லை எனும் தகவலைத் தெரிவித்தார். இதைக் கேட்ட மாத்திரத்திலேயே பல கோபிகையரும் மயங்கி விழுந்தனர். சிலர் அரைகுறை மயக்கத்தில், ’கண்ணா! உனக்கு என்னாச்சு கண்ணா?’ என்று புலம்பினார்கள். ‘நீ பிழைக்காது போனால் நாங்களும் உயிர் வாழமாட்டோம்’ என்று கண்ணீர் விட்டார்கள். சிலர், பித்துப் பிடித்ததைப் போல தயிர்ப் பானைகளை கீழே போட்டு விட்டு அங்குமிங்குமாக ஓடினர். ’கிருஷ்ணா! இப்போதே உன்னைப் பார்க்க வேண்டுமே...’ என்று அரற்றினர். அவர்களின் பக்தியைப் பார்த்து நாரதர் அசந்து போனார். வியந்து போனார். மலைத்துப் போனார்.

தேவலோகத்தில் போய், கிருஷ்ணனுக்கு உடல்நிலை சரியில்லை, உங்களில் பக்தி மிக்கவர் பாதத்துளியைக் கொடுங்கள் என்ற போது, நாங்கள் ஒன்றும் அவர் நினைக்குமளவு பக்தி செலுத்தவில்லையே என்றார்களே தவிர, ஒருவராவது இப்படி வருத்தப்பட்டார்களா! நானே கூட அப்படி ஒரு நிலையை அடையவில்லையே! இந்தக் கோபிகையரோ, கிருஷ்ணனின் உடல்நிலை சரியில்லை என்று கேட்டதுமே கலங்கித் துடிக்கிறார்களே! உயிரையே விடுமளவு பக்தி செலுத்துகிறார்களே! இவர்களின் பாதத் துளியே கிருஷ்ணரின் வியாதியைக் குணப்படுத்தும் என்று நினைத்த நாரதர், அவர்கள் பாதம்பட்ட கோகுலத்து மண்ணில் சிறிதளவு நீரில் கரைத்துக் கொடுத்தார்.

கிருஷ்ணருக்கு தலைவலி நீங்கியது. இதன் பின்னர்தான், நாட்டுக்கே தலைவலியாக இருந்த நரகாசுரனை அழித்தொழித்தார் என்கிறது புராணம்!

உண்மையான பக்தியின் வீரியத்தை எல்லோருக்கும் எடுத்துரைத்தார் பகவான் கிருஷ்ணர். உண்மையான, ஆத்மார்த்தமான, தூய்மையான பக்தி எங்கிருக்கிறதோ அவர்களைக் கண்டறிவார் கிருஷ்ணர். அவர்களுக்கு உயர்ந்த இடத்தைத் தந்து காத்தருள்வார் கிருஷ்ண பரமாத்மா.

தீபாவளி நன்னாளில், பகவான் கிருஷ்ணரை உள்ளன்புடனும் ஆத்மார்த்த பக்தியுடன் பிரார்த்திப்போம்.

***************

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

13 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

9 days ago

மேலும்