எண்ணெயில் திருமகள்; சிகைக்காயில் கலைமகள்; புத்தாடையில் விஷ்ணு; தீபத்தில் சிவனார்!  - தீபாவளி எனும் ஐஸ்வர்யம் தரும் பண்டிகை! 

By வி. ராம்ஜி

தீபாவளிப் பண்டிகையை தீபாவளி என்று எப்போதிருந்து சொல்லுகிறோம் என்று தெரியவில்லை. ஆனால் தீபாவளிப் பண்டிகை குறித்த விவரங்கள் புராண இதிகாச நூல்களில் விவரிக்கப்பட்டுள்ளன. ஐப்பசி மாதம் எனப்படும் துலா மாதம் குறித்தும் அப்போது வருகிற இந்த தீபாவளித் திருநாள் விரதங்கள் பற்றியும் எடுத்துரைக்கின்றன ஞானநூல்கள்!

தீபாவளி விரதம் தொடர்பான புராணக் கதை ஒன்றைப் பார்ப்போம்.

அவர் பெயர் தீர்க்கதமஸ். மகா முனிவர். சோலைவனத்தில், சோலையின் நடுவே சின்னஞ்சிறிய ஆஸ்ரமம் அமைத்து, மூன்று வேளையும் பூஜை செய்து, கடும் தவம் மேற்கொண்டு வந்தார். முனிவரின் பூஜைக்கு மனைவி மக்களும் சீடர் பெருமக்களும் உறுதுணையாக இருந்தார்கள். பூஜைக்குத் தேவையான தண்ணீரைக் கொண்டு வந்து கொடுத்தார்கள். பூக்கள் பறித்து எடுத்து வந்தார்கள். பழங்களைப் பறித்து நைவேத்தியத்துக்கு வழங்கினார்கள்.

ஒருநாள். சர்வ வரங்களையும் ஞானத்தையும் பெற்ற சனாதன முனிவர் அந்த ஆஸ்ரமத்துக்கு வந்தார். அவரைக் கண்டு பதறியடித்துக் கொண்டு வாசலுக்கு ஓடி வந்து வரவேற்றார் தீர்க்கதமஸ் முனிவர். மனைவி மக்களுடன் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தார். சனாதன முனிவருக்கு பாதபூஜை செய்தார். வரவேற்றார். ஆசனத்தில் அமரச் செய்து, நமஸ்கரித்தார்.

அவருக்கு குரு மரியாதைகள் செய்து, உணவுக்கும் ஏற்பாடு செய்தார். பிறகு, சனாதன முனிவர் அனைவரையும் எதிரே அமரச் சொல்லி, போதனைகள் வழங்கினார்.
‘‘தீர்க்கதமஸ். மனதில் உள்ள துன்ப இருளை அகற்றுவதற்குப் பிரயத்தனப்படுவதே மனிதப் பிறப்பின் விருப்பம். அதேபோல், வாழ்வில் இன்ப ஒளியேற்றும் நிகழ்வு வராதா என்கிற ஏக்கமும் எல்லோருக்கும் உண்டு. இருளை அகற்றவும் ஒளியை அதிகரிக்கவும் விரதம் ஒன்று உண்டு.

அதைக் கடைப்பிடித்தால் நடப்பது எல்லாம் நன்மையாகவே நிகழும். விரும்பியவை அனைத்து கிடைத்தே தீரும்.கேட்டவையெல்லாம் கிடைத்தே தீரும். குருவருளும் இறையருளும் கிடைக்கப் பெற்று, நிம்மதியும் ஆனந்தமுமாக வாழலாம்’ என்றார் சனகாதி முனிவர்.

இந்த விரதம் மிக மிக எளிமையானது. அதேநேரம் மிகமிக வலிமையானது. அற்புதமான இந்த விரதத்தை சொல்லித் தருகிறேன் கேள்.

துலா மாதம் (ஐப்பசி) தேய்பிறை திரயோதசி அன்று மகா பிரதோஷ பூஜை செய்யுங்கள். சிவனாரையும் நந்தி தேவரையும் உரிய மலர்களால் அலங்கரித்து, மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள். அப்படியே, எம தீபம் ஏற்றி எமதருமனை வழிபடுங்கள். இதனால் நம் வாழ்க்கை மலரும். நம்முடைய முன்னோர்கள் சொர்க்கத்துக்குச் செல்வார்கள். அப்படிச் செல்லும் முன்னோரின் ஆசி, பரிபூரணமாகக் கிடைக்கப் பெறலாம். ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் நாம் இனிதே வாழலாம்!’’ என தெரிவித்தார் சனாதன முனிவர்.

‘‘மறுநாள் (தீபாவளித் திருநாள்). அன்று உஷத் காலத்தில் அதாவது சூரியோதயத்துக்கு முன்னதாக, விடியற்காலையில் எழுந்து, எண்ணெய் தேய்த்து வெந்நீரில் நீராட வேண்டும். இந்த உஷத் காலத்தில் பெரும்பாலும் சுவாதி நட்சத்திரத்தில் சூரியனும் சந்திரனும் சஞ்சரிப்பதாக ஐதீகம்! எனவே இந்த நாள், மிகவும் புனிதமானதாக, சக்தி வாய்ந்ததாகப் போற்றப்படுகிறது. எனவே இந்த நாளில் செய்யும் விரதமும் பூஜையும் பல மடங்கு பலன்களை நமக்குத் தந்தருளும்!

இந்தப் புனிதமான நாளில், எண்ணெயில் திருமகள் வீற்றிருக்கிறாள். உடலில் தேய்த்துக்கொள்ளும் அரப்புப் பொடி அல்லது சிகைக்காய் பொடியில் கலைமகள் குடியிருக்கிறாள். சந்தனத்தில் நிலமகள் கலந்திருக்கிறாள். குங்குமத்தில் ஸ்ரீகௌரி கோலோச்சுகிறாள்.

மலர்களில் தேவதைகளும் நீரில் கங்காதேவியும் வாசம் செய்கிறார்கள். புத்தாடைகளில் மகாவிஷ்ணு அருள்பாலிக்கிறார். தீபத்தில் சிவபெருமான் உறைந்திருக்கிறார் என்கிறார்கள் ஞானிகள்’’ என்று எடுத்துரைத்தார் சனாதன முனிவர்.

அதுவே தீபாவளித் திருநாள் எனும் பெயரில், கொண்டாடப்பட்டு வருகிறது. ஆகவே, அற்புதமான இந்த நன்னாளில், எண்ணெய் தேய்த்து, அரப்புத் தூள் உபயோகித்து, வெந்நீரில் ஸ்நானம் செய்வோம். இதனால் கங்கையில் ஸ்நானம் செய்த பலன் கிடைக்கும். அதனால்தான், எந்த நீரில் குளித்தாலும் ‘கங்கா ஸ்நானம் ஆச்சா?’ என்று ஒருவரைப் பார்த்து ஒருவர் கேட்டு வாழ்த்துகளைப் பரிமாறிக்கொள்கிறோம்.

புத்தாடை உடுத்தி, தீபம் ஏற்றி, இனிப்பு பட்சணங்கள் படைத்து இறை வழிபாடு செய்வோம். முறையே இந்த நன்னாளைக் கொண்டாடினால், வாழ்வில் எல்லா நலனும் வளமும் பெறலாம்! தடைகள் யாவும் விலகும். நற்கதி உண்டாகும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

12 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

8 days ago

மேலும்