’நான் உன் வீட்டில்தான் இருக்கிறேன்’ என்கிறார் ஷீர்டி சாயிபாபா! 

By வி. ராம்ஜி

’நான் உன் வீட்டில்தான் இருக்கிறேன். ஆனால் என்னை இன்னும் நீ உணர்ந்துகொள்ளவில்லை. உன் கவலைகளையெல்லாம் போக்கத்தான் உனக்கு அருகிலேயே இருக்கிறேன்’’ என அருளுகிறார் ஷீர்டி சாயிபாபா.

இந்தக் கலியுகத்தில் எத்தனையோ சக்திகள், மகான்களாக அவதரித்திருக்கிறார்கள். தெய்வங்கள் அனைத்தும் உலகத்துக்காகவும் உலக மக்களுக்காகவும் மகான்களை அவதரிக்கச் செய்து பூமியில் உலவ விட்டிருக்கிறார்கள்.

அப்படி பூமிக்கு வந்த அற்புத மகான் தான், பகவான் ஷீர்டி சாயிபாபா. வட மாநிலத்தின் சின்னஞ்சிறிய கிராமம் ஷீர்டி. இந்த கிராமத்தில் இருந்துகொண்டுதான் மொத்த உலகையும் தன் அருளாடல்களால் திரும்பிப் பார்க்க வைத்தார் பாபா. அவரின் அருளையும் சக்தியையும் சாந்நித்தியத்தையும் உணர்ந்து எங்கிருந்தெல்லாமோ வந்து பாபாவை தரிசித்தார்கள் மக்கள்.

பாபா முக்தி அடைந்த பின்னரும், ஷீர்டிக்கு இன்றளவும் வந்து சூட்சும பாபாவை, பாபாவின் அருளை உணர்ந்து சிலிர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஷீர்டியில் இருந்து பிடிமண் எடுத்து வந்து இந்தியாவில் பல மாநிலங்களில் பாபாவை பிரதிஷ்டை செய்து ஆலயம் எழுப்பி வழிபட்டு வருகிறார்கள். அங்கிருந்து சிலையை பூஜித்து எடுத்து வந்து, தெற்கேயும் பல ஊர்களில் கோயில் எழுப்பி, வழிபட்டு வருகிறார்கள்.

சென்னை மயிலாப்பூரில் சாயிபாபா கோயில் இருக்கிறது. மகாபலிபுரம் செல்லும் சாலையில் சாயிபாபாவுக்கு கோயில் இருக்கிறது. சென்னை தி.நகரில் சாயிபாபா கோயில் எழுப்பப்பட்டிருக்கிறது.

இதேபோல், சென்னையில் இருந்து திருச்சி செல்லும் பல இடங்களில் சாயிபாபாவுக்குக் கோயில் எழுப்பப்பட்டுள்ளது. திருச்சி சமயபுரத்துக்கு அருகில் உள்ள அக்கரைப்பட்டி எனும் ஊரில், பிரமாண்டமான சாயிபாபா மந்திர் எழுப்பப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை என்றில்லாமல், சாயிபாபாவை அனவரதமும், தினந்தோறும் தரிசித்துக்கொண்டிருக்கிறார்கள் பக்தர்கள்.

பகவான் சாயிபாபா, கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாகப் போற்றப்படுகிறார். தன் பக்தர்களுக்கு துக்கமோ வருத்தமோ என்றால், ஓடிவந்து உதவக் காத்திருக்கிறார். கைதூக்கி அருளுகிறார் சாயிபாபா.

‘நான் உன் வீட்டில்தான் அமர்ந்திருக்கிறேன். என்னை உணர்ந்துகொள்ள முடியவில்லை உன்னால். பல உருவங்களில் நான் உனக்கு காட்சி தந்துகொண்டிருக்கிறேன். இன்னும் வேறு உருவங்களிலெல்லாம் காட்சி தருகிறேன்’’ என அருளுகிறார் பகவான் ஷீர்டி சாயிபாபா.

சாயிராம் என்று எப்போதும் உள்ளுக்குள் உச்சரித்தபடி பாபாவை வேண்டுங்கள். உங்கள் துயரங்களையெல்லாம் துடைக்க உங்கள் இல்லத்துக்கே ஓடி வருவார். அங்கேயே இருந்தபடி உங்களை கைதூக்கிவிடுவார். உங்களின் கண்ணீரைத் துடைத்து காத்தருள்வார்.

சாயி பகவானை, சாயிபாபாவை, பகவான் ஷீர்டி சாயிநாதனை மனதார வேண்டுவோம்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE