பைரவருக்கு பஞ்ச தீப வழிபாடு!

By வி. ராம்ஜி

தேய்பிறை அஷ்டமியில் பைரவரை வழிபடுங்கள். முக்கியமாக, பஞ்ச தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள். இதுவரை இருந்த எதிர்ப்புகள் அனைத்தும் காணாமல் போகும். தடைகளெல்லாம் தகர்ந்து போகும்.

கலியுகத்துக்கு காலபைரவர் என்றொரு வாசகம் உண்டு. பைரவர் சக்தி வாய்ந்த தெய்வம். சாந்நித்தியம் மிக்க கடவுள். பைரவரை வணங்கினால், எப்போதுமே தடைகள் அனைத்தையும் தகர்த்துவிடுவார். எதிரிகளை பலமிழக்கச் செய்துவிடுவார். நீண்டகாலமாக இழுபறியாக இருக்கும் வழக்குகளில் வெற்றியைத் தேடித்தருவார் பைரவர் என்று போற்றுகிறார்கள் பக்தர்கள்.

பைரவ வழிபாட்டில், தீப வழிபாடு என்பது முக்கியத்துவம் பெறுகிறது. தீப வழிபாட்டில், பஞ்ச தீப வழிபாடு இன்னும் மகிமை மிக்கதாகச் சொல்லப்படுகிறது. இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணய், விளக்கெண்ணெய், பசு நெய் என ஆகியவற்றைக் கொண்டு தனித்தனி தீபங்கள் ஏற்றுங்கள். மனதார வழிபடுங்கள். மங்கல காரியங்கள் அனைத்தையும் அருளிச்செய்வார் பைரவர்.

தேய்பிறை அஷ்டமி நன்னாளில், தனித்தனியே இந்த எண்ணெய்களைக் கொண்டு தீபமேற்றுங்கள். பைரவரிடம் உங்கள் வேண்டுதல்களை வையுங்கள். கோரிக்கைகளை வையுங்கள். சகல நன்மைகளையும் தந்தருள்வார் பைரவர். காரியத்தில், தொழிலில், வேலையில் இருந்த தடைகளையெல்லாம் தகர்த்தி முன்னேற்றப் பாதையைக் காட்டி அருளுவார். வழக்கு முதலான விஷயங்களில், வெற்றியைத் தேடித்தந்தருளுவார் பைரவர்.

பஞ்ச தீப வழிபாட்டைச் செய்யச் செய்ய, நினைத்த காரியங்கள் நடந்தேறும். தீர்க்க முடியாத தொல்லைகளையும் தீர்த்துத் தருவார். அதேபோல், தேய்பிறை அஷ்டமி மட்டுமின்றி, ஆயில்யம் நட்சத்திரம், சுவாதி நட்சத்திரம், மிருகசீரிஷம் முதலான நட்சத்திர நாளில் பஞ்ச தீபமேற்றி பைரவரை வணங்கினால், உத்தியோகத்தில் பதவி உயர்வும் சம்பள உயர்வும் ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும்.

தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு தயிர்சாதம் நைவேத்தியம் செய்து, செவ்வரளி மாலை சார்த்தி வேண்டிக்கொண்டால், வீட்டின் தரித்திர நிலை மாறும். சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கப் பெறலாம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். முக்கியமாக, சொர்ணாகர்ஷ்ண பைரவரை வணங்கிப் பிரார்த்தித்தால், கடன் தொல்லையில் இருந்து மீளலாம். பொருள் சேர்க்கை நிகழும் என்பது ஐதீகம்.

இன்று 8ம் தேதி தேய்பிறை அஷ்டமி. பைரவரை வணங்குவோம். சகல சுபிட்சங்கள் பெற்று இனிதே வாழ்வோம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE