வாடகை வீட்டில் கணபதி ஹோம பூஜை; கடன் தொல்லை தீரும்; வீடு யோகம் கிடைக்கும்!

By வி. ராம்ஜி

எந்த ஹோமம் செய்கிறோமோ இல்லையோ... ஆனால் வருடந்தோறும் ஒருமுறையாவது கணபதி ஹோமம் செய்யவேண்டும் என வலியுறுத்துகிறார்கள் ஆச்சார்யர்கள்.

புது வீட்டில் பால் காய்ச்சுவது அதாவது புதுமனைப் புகுவிழா நடத்துவது மாதிரியான விஷயங்களில் மட்டும்தான் கணபதி ஹோமம் நடத்தவேண்டும் என பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் எப்படி சாம்பிராணி புகையிட்டு, தீப ஆராதனைகள் செய்கிறோம். வாரந்தோறும் வீட்டில் இருப்பவர்களை நடு ஹாலில் அமரச் செய்து, திருஷ்டி சுற்றிப் போடுகிறோம் அல்லவா. மாதந்தோறும் வீட்டுப் பூஜையறையில் உள்ள பித்தளைத் தட்டு, விளக்கு, ஊதுபத்தி ஸ்டாண்ட் முதலானவற்றை கழுவி சுத்தம் செய்கிறோம்தானே. இதேபோல், வீட்டில் உள்ள தெய்வங்களுக்கு சாந்நித்தியம் திகழவும் இல்லத்தில் உள்ள தீயசக்திகள் துரத்தியடிக்கப்பட வேண்டும் என்பதற்காகவும் வருடத்துக்கு ஒருமுறையேனும் கணபதி ஹோமம் செய்யவேண்டும் என்கிறது தர்ம சாஸ்திரம்.

குடும்பத்தில் யாருக்கேனும் ஏதேனும் உடலில் கோளாறு ஏற்பட்டு, மருந்து, சிகிச்சை என மருத்துவமனைக்குப் போய்க்கொண்டே இருக்கும் நிலை ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். இருபத்து நான்குமணி நேரமும் வேலை வேலை என்றிருப்பார்கள். எந்நேரமும் தொழிலில் கவனம் செலுத்தி வருவார்கள். ஆனால் உத்தியோகத்தில் உயர்வு இல்லாமல் போராடிக்கொண்டே இருப்பார்கள். தொழிலில் நஷ்டம், நஷ்டத்துக்கு மேல் நஷ்டம் என்று படுத்தி எடுத்துக்கொண்டே இருக்கும்.

வேலை நன்றாகவே இருக்கும். வியாபாரம் சிறப்பாகவே போய்க்கொண்டிருக்கும். ஆனாலும் ஏதோவொரு மனக்குழப்பம், மனதில் பயம் என்று நிம்மதி இல்லாத நிலையைக் கொடுத்துக் கொண்டே இருக்கும். ஒரு குடும்பத்துக்குத் தேவையான பொருளாதாரம் சிறப்பாகவே வந்துகொண்டிருக்கும். பணப்பிரச்சினை இல்லாமல் மகிழ்ச்சியாகத்தான் இருக்கும் வாழ்க்கை. ஆனாலும் மனதில் எப்போதும் எதிர்மறையாகவே எண்ணங்கள் விஸ்வரூபமெடுக்கும். வேதனைக்கு உள்ளாக்கிக் கொண்டே இருக்கும்.

இல்லத்தில் கணவனுக்கும் மனைவிக்கும் இடையே பரஸ்பரம் புரிதல் இருக்கும். இருவரும் விட்டுக்கொடுத்து, ஒருவரையொருவர் அனுசரித்து குடும்பத்தை நடத்துவார்கள். ஆனால், யாரோவொரு தூரத்து உறவால் முட்டிக்கொள்ள நேரிடும். பக்கத்து வீட்டு மரக்கிளை, நம் வீட்டில் உதிர்ந்து குப்பையாகிக் கிடக்கிறது என்று வேண்டாத பிரச்சினைகளெல்லாம் வந்து இருவருக்கும் சண்டை சச்சரவு என மோதிக்கொண்டே இருப்பார்கள். வீட்டில் எப்போது பார்த்தாலும் சந்தைக்கடை மாதிரி சண்டைக் கூச்சல் நிகழ்ந்துகொண்டே இருக்கும்.

இப்படியான விஷயங்கள் அனைத்தையும் சரி செய்யும் சக்தியும் வலிமையும் கணபதி ஹோமத்திற்கு உண்டு என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
வீட்டில், கணபதி ஹோமம் செய்தால், வீட்டில் உள்ளவர்களுக்கு ஆரோக்கியம் மேம்படும். நோய்த்தாக்கத்தில் இருந்து விடுபடுவார்கள். மருந்து மாத்திரை செலவுகள் குறையத் தொடங்கும். வேலையில் உயர்வு, பதவியில் உயர்வு, சம்பளத்தில் உயர்வு என்ற நிலை தடதடவென நடந்தேறும். அதேபோல் வியாபாரத்தில் விருத்தி ஏற்படும். உறவுகளால் ஏற்படக் கூடிய பூசல்கள் குறையும். பரஸ்பரம் குடும்பத்தில் ஒற்றுமை மேம்படும்.

மனதில் உள்ள குழப்பங்கள் அனைத்தையும் நிவர்த்தி செய்து தருவார் கணபதி பெருமான். கேது திசை நடப்பவர்களுக்கு பாதிப்பு குறையும். திருமணம் முதலான சுப விசேஷத் தடைகள் அனைத்தும் விலகும். மங்கல காரியங்கள் நடக்கத் தொடங்கும்.

கணபதி ஹோமத்தில், அக்னியில் இருந்து வெளியேறும் புகையானது இல்லத்தில் இருக்கிற தீயசக்திகளைத் துரத்தியடிக்கும். மனக் கிலேசத்தைப் போக்கும். புத்தியிலும் மனதிலும் புத்துணர்ச்சியை உண்டாக்கும். அக்கம்பக்கத்தாரின் திருஷ்டியில் இருந்து பாதுகாக்கப்படலாம். இல்லத்தில் சுபிட்சம் நிலவும். தனம், தானியச் சேர்க்கை நிகழும்.

சொந்த வீட்டில் தான் கணபதி ஹோமம் செய்யவேண்டும் என்பதோ புதுமனைப் புகுவிழாவின் போதுதான் செய்யவேண்டும் என்பதோ இல்லை. வாடகை வீட்டில் இருப்பவர்கள் கூட கணபதி ஹோமம் செய்யலாம். சொல்லப்போனால், வாடகை வீட்டில் கணபதி ஹோமம் செய்து, மனதாரப் பிரார்த்தனை செய்துகொண்டால், விரைவில் வீடு மனை வாங்கும் யோகமும் கிடைக்கப் பெறலாம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

13 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

மேலும்