ஆன்மிக நூலகம: மனதின் சர்வ வல்லமையே கனவுகள்
நான் எதையோ சாப்பிட்டு, ஒரு குவளைப் பாலும் அருந்துகிறேன். என் பசியும் தாகமும் போய்விட்டது. நான் திருப்தியடைந்தவனாக உணர்கிறேன். என்னுடைய திருப்திக்கு என்ன காரணம்? உணவா? நினைவில் வையுங்கள், நான் கனவு கண்டுகொண்டிருக்கிறேன். என்னைத் திருப்தியடைந்த மாதிரி உணரச் செய்தது வெறும் ஓர் எண்ண மாற்றமே இல்லையா? நான் கனவு கண்டுகொண்டிருப்பதால் என் மனம்தான் அது உணவை உட்கொண்டதாக நினைத்தது. பசி, உணவு மற்றும் பால் ஆகியவை எனது கனவில் இருந்த எண்ணங்களே.
எல்லாமே அதே மன-மூலப்பொருளால் ஆக்கப்பட்டவை. நான் விழித்துக்கொள்ளும் பொழுது எனது அனுபவங்களெல்லாம் எண்ணங்களின் ஒரு தொடர் மட்டுமே என்று அறிகிறேன். வெறும் ஓர் எண்ண மாற்றம் விரும்பத்தகாத பசியுணர்வை நீக்கி, உணவு அருந்துவதும், பால் குடிப்பதுமான இன்பமான உணர்வை அதற்குப் பதிலாக வைத்துள்ளது.
ஆகையால் எண்ணம் தானாகவே எதையும் செய்யவல்லது என்பதைக் காண்கிறீர்கள். ஒருமுறை வெப்பம் கடுமையாக இருந்த சமயத்தில் நான் ரயிலில் பிரயாணம் செய்து கொண்டிருந்தேன். காற்று உலையிலிருந்து வரும் அனல் போல் இருந்தது. என்னைச் சுற்றியிருந்த அனைவரும் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால் நான் உள்ளூர நகைத்துக் கொண்டிருந்தேன்.
ஏனென்றால் வெப்பம் என்ற எண்ணத்திலிருந்து என் மனம் தொடர்பற்று விலகியிருந்தது. நான் எனக்குள் கூறிக்கொண்டேன்: “இறைவா, மின் அடுப்பில் சூட்டை உண்டாக்கும் அதே மின்சாரம்தான் குளிர்சாதனப் பெட்டியில் பனிக்கட்டியை உண்டாக்குகிறது.
ஆகவே நான் ஏன் இப்பொழுதே குளிரை ஏற்படுத்துவதற்கு உனது மின்சாரத்தைத் திசைதிருப்பக் கூடாதா?” அக்கணமே ஒரு பனியாலான போர்வை என்னைச் சூழ்ந்ததுபோல் உணர்ந்தேன்.
மனிதனின் நிரந்தரத் தேடல்ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தர், ஜெய்கோ பதிப்பகம்.