‘உங்கள் விதியை மாற்றுவதற்கான பத்து வழிகள்’ என்று பாபா அருளியவை என்னென்ன தெரியுமா? இவற்றைக் கடைப்பிடித்து வாருங்கள். உங்கள் விதி நிச்சயமாக மாறும். முன் ஜென்மப் பாவங்கள் அனைத்தும் நீங்கும் என அருளியுள்ளார் சாயிபாபா.
‘எல்லாம் விதிப்படிதான் நடக்கும்’ என்று புலம்புகிற சராசரி மனிதர்கள்தான் நாம். ‘விதியை மாற்ற யாரால் முடியும்?’ என்று வருந்துகிறவர்கள்தான் மனிதர்கள். இப்படிப் புலம்பிக்கொண்டும் வருந்திக்கொண்டும் இருக்கிற இந்த உலகில், நம் வாழ்க்கையானது எப்போது சரியாகும் என்று பிரார்த்தனையிலும் வழிபாடுகளிலும் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறோம். அப்படியான பிரார்த்தனையின் மூலம் ஆத்ம திருப்தி கிடைத்துவிடுகிறது என்று சொல்லி நெகிழ்ந்துகொண்டிருக்கிறோம்.
‘நம்மையெல்லாம் படைத்த பிரம்மாதான் நம் நெற்றியில் விதியை எழுதியிருக்கிறார்’ என்கிறது புராணம். குரு பிரம்மாவை, குருவுக்குக் குருவாகத் திகழும் பிரம்மாவை, ஞானத்தந்தையான பிரம்மாவை வணங்கி வழிபட்டால், ‘விதியையே மாற்றி அருளுவார்’ என்கிறது திருச்சி திருப்பட்டூர் ஸ்தல புராணம். ‘விதி இருப்பின் விதி கூட்டி அருளுவாய்’ என பிரம்மாவுக்கு சிவபெருமான் கட்டளையிட்ட திருத்தலம்.
சென்னையில் இருந்து திருச்சி செல்லும் வழியில், பெரம்பலூருக்கு அடுத்து உள்ளது சிறுகனூர். இங்கிருந்து கிளை பிரிந்து செல்லும் சாலையில் உள்ளது திருப்பட்டூர் பிரம்மா கோயில்.
» கோவையின் பச்சை நாயகி... பாவமெல்லாம் தீர்ப்பாள்! மங்கல வாழ்வு தருவாள்; மங்காத செல்வம் தருவாள்!
தலையெழுத்தையே திருத்தி அருளும் திருத்தலம் என்று போற்றப்படுகிறது திருப்பட்டூர் திருத்தலம். இங்கே வாழ்வில் ஒருமுறையேனும் திருப்பட்டூருக்கு வந்து, தனிச்சந்நிதியில் பத்மாசனத்தில் அமர்ந்திருக்கும் பிரம்மாவைத் தரிசித்தால், விதியையே திருத்தி எழுதி அருளுவார் என்கிறது ஸ்தல புராணம்.
திருப்பட்டூரில் இருந்து திருச்சி செல்லும் வழியில் உள்ளது சமயபுரம் டோல்கேட். இங்கிருந்து கிளை பிரிந்து செல்லும் சாலையில் சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ளது அக்கரைப்பட்டி. இங்குதான் தென் ஷீர்டி என்று போற்றப்படுகிற தலத்தில், பிரமாண்ட கோயிலில் அமர்ந்து அருளாட்சி செய்துகொண்டிருக்கிறார் சாயிபாபா.
பகவான் ஷீர்டி சாயிபாபா, ‘உங்கள் விதியை மாற்ற முடியும்’ என அருளியுள்ளார்.
‘உங்கள் விதியை மாற்றுவதற்கான பத்து வழிகள்’ என்று பாபா அருளியவை என்னென்ன தெரியுமா?
தினமும் இறைவனைப் பிரார்த்தனை செய்யுங்கள். படைத்தவனை வணங்குவதை விட வேறென்ன வேலை இருக்கிறது நமக்கு? வேறெது முக்கியம் நமக்கு? கடவுளை வணங்குங்கள்.
‘எல்லாம் இறைவனின் அருளால் நடக்கிறது’ என்பதை முழுமையாக நம்புங்கள். இதை ஒப்புக்கொள்ளுங்கள். முழுமையான நம்பிக்கையுடன் இறைவனுக்கு தீப தூபமிடுங்கள். தீபாராதனை செலுத்துங்கள்.
மந்திரங்களுக்கு வலிமை உண்டு. ஸ்லோகங்களுக்கு அளப்பரிய சக்தி உண்டு. இறைவனை மந்திரங்களைக் கொண்டும் பூஜையைக் கொண்டும் ஆராதனை செய்யுங்கள்.
எண்ணம் போல்தான் வாழ்க்கை அமையும். நம் செயலும் எண்ணத்தின்படியே அமையும். எண்ணமும் செயலும் உண்மையாக இருக்கட்டும். உண்மை இருக்குமிடத்தில் இறைவன் வந்து உட்கார்ந்துகொள்வான்.
உங்கள் வருமானம் என்பது நேர்வழியில் கிடைப்பதாக இருக்கவேண்டும். நேர்மையுடன் கிடைப்பதாக இருக்கவேண்டும். அந்த வருமானப் பணம், உங்களுக்கு, உங்களின் வாழ்க்கைத் துணைக்கு, உங்களுடைய குழந்தைகளுக்குச் செல்லும் போது நேர்மையான வருமானமாக இருந்தால் இறையருள் கிடைக்கும். இல்லையெனில், பாபத்தைத்தான் அவர்களுக்கு நீங்கள் தருகிறீர்கள்.
முடிந்த போதெல்லாம் எவருக்கேனும் உதவி செய்யுங்கள். பாரபட்சம் இல்லாமல் உதவி செய்யுங்கள். எதிர்பார்ப்பு இல்லாமல் உதவி செய்யுங்கள்.
உலகில், பசி என்பதைப் போல் கொடுமை வேறு எதுவுமில்லை. பசியுடன் இருப்பவர்களைத் தேடிச் சென்று உதவுங்கள். உங்களுக்கு முன்னே கை நீட்டி கேட்கட்டும், வாசலுக்கு வந்து பசிக்கிறது என்று சொல்லட்டும் என்றெல்லாம் காத்திருக்காதீர்கள். தேடித்தேடி உணவு வழங்குங்கள்.
தேவையை விட சேவையே உன்னதமானது. போதும் என்று சொல்லுவதற்கும் எண்ணுவதற்கும் செயலாற்றுவதற்கும் பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது உணவுக்கு மட்டுமல்ல... தேவைக்கு மீறி ஆசைப்படுவதற்காகச் சொல்லப்பட்டது என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்.
தியாகம், வைராக்கியம், பொறுமை மூன்றும் மிக முக்கியமான, நல்ல குணங்கள். தியாக உணர்வுடன் இருங்கள். விட்டுக்கொடுங்கள். வைராக்கியத்துடன் இருங்கள். உறுதியுடன் இருங்கள். பொறுமையுடன் இருங்கள்.
நீங்கள் கோயிலுக்கு வந்தால்தான் கடவுள் உங்களைப் பார்க்கிறார் என்று நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள். உங்களுடைய ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு விநாடியும் கடவுளானவர், உங்களைப் பார்த்துக்கொண்டே இருக்கிறார். கவனித்துக்கொண்டே இருக்கிறார்.எனவே ஒரு விநாடியில் இருந்து அடுத்த விநாடிக்கு நீங்கள் செல்வதற்கும் கடப்பதற்கும் கடவுளே காரணம் என்பதில் உறுதியாக இருங்கள்.
இவற்றைக் கடைப்பிடித்து வாருங்கள். உங்கள் விதி நிச்சயமாக மாறும். முன் ஜென்மப் பாவங்கள் அனைத்தும் நீங்கும் என அருளியுள்ளார் சாயிபாபா.
சாய்ராம் சாய்ராம் சாய்ராம்!
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
26 mins ago
ஆன்மிகம்
22 hours ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
8 days ago