வலையில் சிக்கிய பரம்பொருள்

காட்டில் ஒரு வேடன். கடுமையான உழைப்பாளி, பாமரன். எது தேவையோ அதை முயற்சி செய்து பெற்று, மனநிறைவுடன் வாழ்ந்து வந்தான்.

அங்கு ஒரு முனிவர். இறைவனை தரிசிப்பதே அவர் லட்சியம். கடுமையான தவத்தில் அவர் ஈடுபட்டுவந்தார். பல மாதங்கள் சரியாகச் சாப்பிடாமல் நீரையும் சிறிது பழங்களையும் மட்டுமே சாப்பிட்டுவந்தார்.

எவ்வளவோ கடுமையாகத் தவம் செய்தும் அவரால் தன் லட்சியத்தை அடைய முடியவில்லை. தன் முயற்சியில் வெற்றி காணாமல் தளர்ந்த நடையுடன் காட்டின் வழியே போய்க்கொண்டிருந்தார்.

வேடன் அவரைப் பார்த்தான். மிகவும் களைப்பாக இருந்த அவரைப் பார்த்து அவனுக்குப் பரிதாபம் ஏற்பட்டது. அவரிடம் சென்று வணங்கினான். “முனிவரே உங்களுக்கு என்ன தேவை? எதையாவது தேடிக்கொண்டிருக்கிறீர்களா? நான் உங்களுக்கு ஏதாவது உதவி செய்யலாமா? இந்தக் காட்டின் மூலை முடுக்கெல்லாம் எனக்கு அத்துப்படி. இங்கே எதைக் கேட்டாலும் என்னால் கொண்டு வர முடியும். உங்களுக்கு என்ன வேண்டும் என்று சொல்லுங்கள். நான் செய்கிறேன்” என்றான்.

முனிவர் அவனை அன்புடன் பார்த்து, “மகனே, நான் தேடுவது பரம்பொருளை. அவன் எங்கும் நிறைந்திருப்பவன். ஆனால், யார் கண்ணுக்கும் தெரிய மாட்டான். உன்னால் எனக்கு உதவ முடியாது” என்றார்.

“யாராக இருந்தால் என்ன? இந்தக் காட்டிலே இருப்பாரா? பார்க்க எப்படி இருப்பார், எந்த மிருகத்தைப் போல இருப்பார்? மான் போலவா? முயல் போலவா? சிங்கம், புலி, கரடி... இப்படி எதைப் போல இருப்பார்? எனக்கு அடையாளத்தை மட்டும் சொல்லுங்கள், அவரைப் பிடித்துக்கொண்டு வந்து உங்கள் முன்னால் நிறுத்துகிறேன். என்னால் முடியுமா என்று சந்தேகப்படாதீர்கள். தயவு செய்து சொல்லுங்கள்” என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கேட்டான் வேடன்.

அவனுடைய அறியாமையை நினைத்து முனிவருக்குச் சிரிப்பு வந்தது. அவனுக்கு எப்படிப் புரிய வைப்பது எனறு யோசித்தார்.

“அடையாளம் மட்டும் சொல்லுங்கள்” என்று மீண்டும் கேட்டான் வேடன்.

அவனுடைய அன்புத் தொல்லையிலிருந்து மீள முனிவருக்கு ஒரு யோசனை தோன்றியது. “மகனே, கேள். நான் தேடும் பரமன், சிங்கத்தின் தலையுடனும், மனித உடலுடனும் இருப்பார். நிச்சயமாக இந்தக் காட்டிலும் இருப்பார். உன்னால் முடிந்தால், தேடிக் கண்டுபிடி” என்றார்.

“அவ்வளவுதானே? நீங்கள் ஓய்வெடுங்கள். நான் எப்படியாவது தேடிக் கண்டுபிடிக்கிறேன்” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினான் வேடன்.

காடு முழுவதும் அலைந்து திரிந்தான். சாப்பாடு, தூக்கம், உற்றார், உறவினர் எதுவும் நினைவில்லை. அவன் உடல், மனம், ஆன்மா அனைத்தும் அந்த மிருகத்தைத் தேடி அலைந்தது.

“சிங்கத்தின் தலை... மனித உடல்...” திரும்பத் திரும்ப அதையே சொல்லிக்கொண்டிருந்தான்.

“இந்தக் காட்டில், எனக்குத் தெரியாமல், இத்தனை நாளாய் இந்த மிருகம் ஒளிந்துகொண்டிருக்கிறது. எப்படியும் அதைக் கண்டுபிடித்தே தீருவேன்.. கடவுளே எப்போது எதைத் தேடினாலும் எனக்கு உதவுவாயே, இப்போது ஏன் எனக்கு உதவ மறுக்கிறாய்?” என்று வருந்தினான்.

நாட்கள் கடந்தன. அவனுக்கு அந்த நினைவே இல்லை. “சிங்கத்தின் தலை... மனித உடல்..., சிங்கத்தின் தலை... மனித உடல்... , சிங்கத்தின் தலை... மனித உடல்...” அவன் உடலின் ஒவ்வொரு அணுவிலும் அதே எண்ணம்...

கடைசியில் ஒரு நாள்... அந்த மிருகம் அவன் கண்ணில் தென்பட்டது. அவனது தேடலின் தீவிரத்தால் கவரப்பட்ட கடவுள் சிங்கத்தின் தலையுடனும் மனித உடலுடனும் அவன் கண் முன்னே காட்சி அளித்தார்.

“ஆஹா.. மாட்டிக்கொண்டாயா, உன்னை விட மாட்டேன்” என்று அலறியபடி தன் வலையை வீசினான். பரம்பொருள் அந்த வலையில் கட்டுண்டார். அவரைப் பிடித்து இழுத்தவாறே, முனிவரிடம் ஓடினான்.

“முனிவரே, இதோ நீங்கள் கேட்ட பரம்பொருள். நீங்கள் சொன்ன அதே அடையாளம். சிங்கத்தின் தலை, மனித உடல். என் வலையில் சிக்க வைத்துவிட்டேன்...” என்று கூத்தாடினான்.

முனிவருக்கு அதிர்ச்சி. அவனையும் அவன் வலையையும் பார்த்தார். வலை ஒரு உருவத்தைச் சுற்றியிருப்பது போன்ற தோற்றம் தெரிந்தது. அந்த வலைக்குள் இருக்கும் உருவம் அவர் கண்ணுக்குத் தெரியவில்லை. ஆனால் அவருக்குப் புரிந்துவிட்டது. வலைக்குள் இருக்கும் உருவம் எது என்பது அவருக்குப் புரிந்துவிட்டது.

வேடனைப் பார்த்தார், அவன் இத்தனை நாட்களும் குளிக்கவில்லை, பூஜை செய்யவில்லை, சாப்பிடவில்லை, தண்ணீர்கூடக் குடித்திருப்பானா என்பது சந்தேகம்தான். அவன் முழு உடலும், ஒவ்வொரு அணுவும் தான் சொன்ன பரம்பொருளைத் தேடுவதிலேயே ஈடுபட்டது என்பதைப் புரிந்துகொண்டார்.

வேடனின் கண்ணுக்குக் கடவுள் தெரிகிறார். அவனுக்காகக் கடவுள் சிங்க முகம், மனிதத் தலையுடன் காட்சி தந்துவிட்டார் என்பது அவருக்குப் புரிந்தது. அவனுடைய தவம் தன்னுடைய தவத்தைவிட மேலானது என்பதும் புரிந்தது.

முனிவரின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. அவர் வேடனின் கால்களில் விழுந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE