நலம் தரும் கணபதி

By வே.முத்துக்குமார்

செப்டம்பர் 17: விநாயக சதுர்த்தி

தாமிரபரணி ஆற்றங்கரையில் எழுந்தருளியிருக்கிறது மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட கணபதி ஆலயம். இத்திருக்கோயில், சுமார் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இப்புராதனத் திருக்கோயிலில், விநாயகர் தன்னுடைய முப்பத்திரண்டு திருத்தோற்றங்களில் எட்டாவது வடிவமாக போற்றப்படுகின்ற உச்சிஷ்ட கணபதியாக அவதரித்து அருள்பாலித்துவருகிறார்.

ஜீவநதியான ஆசியாவிலேயே ராஜகோபுரத்துடன் எட்டு நிலை மண்டபங்கள், மூன்று பிராகாரங்கள், கொடிமரத்துடன் கூடிய சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் மூலவராக விநாயகர் எழுந்தருளியுள்ள தனித்திருக்கோயில் இது.

ஹேரண்ட மகரிஷி

கலியுகத்தில் விநாயகரைப் பற்றிப் போதிக்க முக்தல மகரிஷியைத் தென்நாட்டுக்கு அனுப்பிய சீடர்களில் ஒருவராகிய ஹேரண்ட மகரிஷியால் பிரதிஷ்டை செய்யப்பட்ட பெருமையும் இத்திருத்தல மூலவர் உச்சிஷ்ட கணபதிக்கு உண்டு. இங்கு அவர், கருவறையில் அம்பாளை மடியில் தாங்கிக் காட்சி தருகிறார். மும்மூர்த்திகளை விட முதன்மை யான கடவுளாக விநாயகப் பெருமான் விளங்குவதால், அவரது மடியில் வீற்றிருக்கும் ‘நீலவாணி' அம்பாளும் முப்பெரும் தேவியரின் அம்சமாகக் கருதப்படுகிறார்.

கொழுக்கட்டை, சர்க்கரைப் பொங்கல்

திருமணத் தடை நீங்குவதற்கும், தம்பதியரிடையே மன ஒற்றுமை ஏற்படுவதற்கும் பக்தர்கள் இவரை நம்பிக்கையுடன் வழிபடுகின்றனர். செல்வம் பெருகுவதற்குக் கொழுக்கட்டையையும், குழந்தை வரத்திற்குச் சர்க்கரைப் பொங்கலையும், நோய்கள் தீர்வதற்குக் கரும்புச் சாற்றையும் இங்கு நைவேத்தியம் செய்கிறார்கள்.

முற்காலத்தில் பாண்டிய மன்னர்கள் முதல் நாயக்க மன்னர்கள் வரையிலும், அதன் பின்பு நகரத்தார்களும் வணங்கி அருள் பெற்ற இத்திருத்தலத்திற்கு அருகில் பைரவ தீர்த்தக் குளம் உள்ளது. இதில் புனித நீராடி உச்சிஷ்ட கணபதியை வழிபட்டால் சகல தோஷங்களும் நிவர்த்தியாகும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. வருடந்தோறும் சித்திரை மாதத்தின் முதல் தினத்தன்று சூரிய ஒளி உச்சிஷ்ட கணபதியின் மீது பரவும் அதிசய நிகழ்வும் இங்கு நடைபெறுகிறது. அந்நாளில் சூரிய பகவான் விநாயகரை வணங்குவதாகச் சொல்லப்படுகிறது.

மூர்த்தி, தலம், தீர்த்தம், வரலாறு ஆகியவற்றால் சிறந்து விளங்கும் மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட கண்பதி திருத்தலத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாகத் திருப்பணிகள் நடைபெற்றுவருகின்றன.

விநாயகர் சதுர்த்தித் திருநாளை முன்னிட்டு, அன்றைய தினம் உச்சிஷ்ட கணபதிக்கு விசேஷ அபிஷேகங்களும், சிறப்பு தீபராதனைகளும் நடைபெறுகின்றன. அதிகாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை திருக்கோயில் நடை திறந்திருக்கும்.

உச்சிஷ்ட கணபதியை வணங்க உள்ளம் மகிழும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

4 hours ago

ஆன்மிகம்

5 hours ago

ஆன்மிகம்

5 hours ago

ஆன்மிகம்

7 hours ago

ஆன்மிகம்

20 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

மேலும்