முருகனுக்கு ஓர் எம்பாவை, ஒரு திருப்பள்ளியெழுச்சி

By வா.ரவிக்குமார்

வையமும் வானமும் வாழ்வுற வந்துதித்த

ஐயன்க ணேசனுமை அண்டர் புகழ்குகனை

மெய்யாக நாமெண்ணி மேன்மை பலபெறவே

மையணி மங்கையெழு மார்கழித் திங்களின்று

வெய்யோன் வரவுணர்த்தும் வெள்ளி எழுந்ததுகாண்

துய்ய தொழுகுலத்தோர் தொன்மறை சொல்வதுகேள்

உய்யநினை யாதே உறங்கும் மனோன்மணி

வையைநீ ராட வருகேலோ ரெம்பாவாய்….

- என்ன இது, ஆண்டாளின் திருப்பாவையா? வார்த்தைகளெல்லாம் வேறாக இருக்கின்றனவே எனத் தோன்றும். இது `திருமுருகன் எம்பாவை’. ஏ.ஆர். சுப்பைய்யர் என்பவரால் 1958-ல் எழுதப்பட்டு நூல் வடிவில் வெளிவந்தது.

ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்குப் பின்பு, தன் தந்தை எழுதிய முருகன் திருவெம்பாவை, திருப்பள்ளி எழுச்சிப் பாடல்களைத் தொகுத்து சமீபத்தில் இதை மறுபதிப்பு செய்து வெளியிட்டிருக்கிறார் ஏ.ஆர். சுப்பைய்யரின் மகனும் மதுரைக் கல்வி நிறுவனங்களின் முன்னாள் செயலரும், வழக்கறிஞருமான எம்.எஸ். மீனாட்சிசுந்தரம். இப்புத்தகம் மதுரைக் கல்லூரித் (தன்னாட்சி) தமிழ்த்துறை முதுகலைப் பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளது. நித்ய மகாதேவன் பாடி `திருமுருகன் எம்பாவை’ என்னும் பெயரில் ஓர் இசைக் குறுந்தகடும் அண்மையில் வெளியிடப்பட்டிருக்கிறது.

வாரியாரின் சாத்துக்கவி

திருநெல்வேலியில் ஓர் எளிய குடும்பத்தில் பிறந்து உழைப்பால் உயர்ந்து தொழில் அதிபரானவர் ஏ.ஆர். சுப்பைய்யர். தமிழில் இலக்கணம் மீறாமல் பாடல்களை இயற்றுவதோடு, இசையிலும் தன்னுடைய திறனை வளர்த்துக் கொண்டார் சுப்பைய்யர். பாடல்களை நினைத்த பொழுதில் கொடுக்கும் தலைப்புகளில் உடனே பாடுபவர்களுக்கு ஆசுகவி என்று பெயர். அப்படிப்பட்ட ஆசுகவியாக சுப்பைய்யர் விளங்கினார். அவருடைய திருமுருகன் எம்பாவை பாடல்களுக்கு திருமுருக கிருபானந்த வாரியார் சாத்துக்கவி வழங்கியதிலேயே சுப்பைய்யரின் பெருமையை உணர்ந்துகொள்ளலாம்.

பாவை மரபின் தொடர்ச்சி

பெரியாழ்வாரின் மகள் சூடிக்கொடுத்த சுடர்க்கொடியான ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவையிலும், மாணிக்கவாசகரால் அருளப்பெற்ற திருவெம்பாவையிலும்தான் பாவை நோன்பு குறித்த செய்திகளை விரிவாகக் காண முடியும். ஆண்டாளின் திருப்பாவையை அடியொட்டி ஏ.ஆர். சுப்பையர் தான் எழுதிய திருமுருகன் எம்பாவையிலும் மரபை மீறாது நுட்பமான பல கருத்துகளைப் பதித்துள்ளார்.

திருப்பாவையில் தோழிகளைத் தானே சென்று எழுப்புவதாக ஆண்டாள் எழுதியிருப்பார். மாணிக்கவாசகர் தன்னைப் பெண்ணாகப் பாவித்து தோழிகளை அழைக்கச் செல்வார். சுப்பைய்யரோ, மகேஸ்வர தத்துவத்திலே சக்தி மண்டலத்திலிருந்து முதற் சக்தியாகிய மனோன்மணியையும் அம்மனோன்மணி சர்வபூத தமனி என்ற தோழியையும், அவள் பலப்ரதமனி என்னும் தோழியையும், அத்தோழி பலவிகரணி என்னும் பெண்ணையும் எழுப்புவாள். அவளோ பைரவி என்னும் காளியை எழுப்புவதாகப் படைத்துக்காட்டி, முதல் எட்டுப் பாடல்களில் பல்வேறு தோழியரைத் துயிலெழுப்பும் காட்சிகளைக் காணலாம்.

பாடலுக்குள் ராகத்தின் குறிப்பு

ஒவ்வொரு பாடலுக்கும் இன்ன ராகம் இன்ன தாளம் என்பதைப் பாடலின் நடுவிலே குறித்துச் சொல்வதும் சிறப்பு. `பங்கயம் வாய்விள்ளப் பைங்குமுதம் மூடினவால்’ எனும் பாடலில்,

“துங்கமாய் நோற்போம் வேர் சூழ்பரங் குன்றில்பால்

பொங்கப் பிலஹரியால் போற்றேலோ ரெம்பாவாய்”

- என்று இன்ன படைவீட்டில் இத்தகைய ராகத்தில் பாடுவோம் எனப் பாடலுக்குரிய ராகத்தைப் பாட்டின் உள்ளேயே பொதிந்து வைத்திருப்பது நூலாசிரியரின் திறமைக்குச் சான்று.

அடுத்து வரும் மாதங்களில் தொடங்கும் இசை விழாக்களின்போது, பிரபல பாடகர்கள், இந்த திருமுருகன் எம்பாவையிலிருந்தும் பாடல்களைப் பாடினால் முருகனின் அருள் கேட்பவர்களின் காதுகளிலும் தேன் பாய்ச்சும்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

2 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

மேலும்