ஆன்மிகம்

சோம வார சஷ்டியில் முருக வழிபாடு

வி. ராம்ஜி

சோம வார சஷ்டியில் முருகப்பெருமானை வழிபடுவோம். மாலையில் விளக்கேற்றி, கந்தனை மனதாரப் பிரார்த்திப்போம். நம் கவலைகளையெல்லாம் பறந்தோடச் செய்வான் வடிவேலன்.

முருகக்கடவுளை வணங்குவதற்கு எத்தனையோ நாட்கள் உகந்த நாட்களாகப் போற்றப்பட்டு வருகின்றன. வணங்கப்பட்டு வருகின்றன. வாரந்தோறும் வருகிற செவ்வாய்க்கிழமையும் வெள்ளிக்கிழமையும் கந்தனை வணங்குவதற்கு உண்டான அற்புதமான நாட்கள். இந்த நாட்களில் முருக தரிசனம் செய்வதும் முருக வழிபாடுகள் மேற்கொள்வதும் விசேஷமானவை.

அதேபோல், மாதந்தோறும் வருகிற கிருத்திகை நட்சத்திர நாளும் கார்த்திகேயனுக்கு உரிய நாள். இந்த நாளில் மாத கிருத்திகை விரதம் மேற்கொள்வார்கள் முருக பக்தர்கள். காலையில் இருந்தே விரதம் மேற்கொண்டு, முருகப்பெருமானுக்கு நைவேத்தியங்கள் செய்தும் பூஜைகள் மேற்கொண்டும் விரதத்தை நிறைவு செய்வார்கள்.

இதேபோல், மாதந்தோறும் வருகிற சஷ்டி திதி என்பது வேலவனுக்கு மிக மிக விசேஷமான நாள். இந்த நாளிலும் விரதம் இருக்கும் பக்தர்களும் உண்டு. சஷ்டியில் முருக வழிபாடு மேற்கொண்டால், நம் கஷ்டத்தையெல்லாம் தீர்த்தருள்வான் வெற்றிவேலன் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

இன்று சஷ்டி. ஆவணி மாத சஷ்டி. இன்னும் குறிப்பாகச் சொல்லவேண்டுமெனில், சோம வார சஷ்டி. திங்கட்கிழமையை சோம வாரம் என்பார்கள். சோம வாரம் என்பது சிவபெருமானுக்கு உரிய நாள். அப்பன் சிவனுக்கு உரிய நாளில், மைந்தன் முருகப்பெருமானுக்கு உரிய சஷ்டியும் இணைந்து வருவது இன்னும் சிறப்பு வாய்ந்தது.

எனவே, இந்தநாளில் (24.8.2020 திங்கட்கிழமை), மாலையில் முருகப்பெருமானை நினைத்து விளக்கேற்றுங்கள். கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்யுங்கள். முருகப்பெருமானுக்கு செந்நிற மலர்களைச் சூட்டி மனதார வேண்டிக்கொள்ளுங்கள். மங்காத செல்வத்தையெல்லாம் வழங்கி அருளுவான். நம் கவலைகளையெல்லாம் தீர்த்தருள்வான் சிவமைந்தன்.

SCROLL FOR NEXT