வள்ளியூர் நாயகி... மூன்று யுகம் கண்ட அம்மன்

By வி. ராம்ஜி

வள்ளியூர் மூன்று யுகம் கண்ட அம்மனை மனதார வேண்டுங்கள். மங்கல காரியங்களையெல்லாம் நடத்தித் தருவாள். மங்காத செல்வத்தைத் தந்தருள்வாள். வீடு மனை யோகங்களையெல்லாம் வழங்குவாள்.

வரம் தரும் நாயகி, மனதில் நினைத்தாலே அருள் மழை பொழியும் பரோபகாரி எனத் திகழ்கிறாள் மூன்று யுகம் கண்ட அம்மன். திருநெல்வேலியில் இருந்து நாகர்கோவில் சாலையில் உள்ளது வள்ளியூர். இந்த அம்மனை நினைத்து முயற்சி செய்யும் காரியங்கள் அனைத்திலும் பக்கத்துணையாக இருந்து வெற்றியைத் தருகிறாள் தேவி.

கோயிலில் அம்மன் இடது காலை மடித்து வைத்து, வலது காலை தொங்கவிட்டு, நான்கு திருக்கரங்களுடன் அமர்ந்த திருக்கோலத்தில் அற்புதமாகக் காட்சி தருகிறாள். சிவனும் சக்தியும் ஸ்ரீஜெயந்தீஸ்வரர், ஸ்ரீசௌந்தர்ய நாயகி எனும் பெயரில் அருள்கின்றனர். சிவனார் லிங்கத்திருமேனியராக அருள்பாலிக்கிறார். ஸ்ரீசௌந்தர்யநாயகி நின்ற திருக்கோலத்தில் அருளாட்சி செய்கிறார்.

காஞ்சிபுரத்தை ஆண்டு வந்த மன்னன் பாண்டியராஜாவுக்கும் அவரது மனைவி மாலையம்மாளுக்கும் பிள்ளை இல்லையே என்கிற ஒரே ஏக்கம்; ஒரே வருத்தம். ஜோதிடரின் ஆலோசனையின் பேரில் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலுக்குச் சென்று வழிபட்டார்கள். அங்கு நம்பூதிரி ஒருவர் மாலையம்மாள் கையைப் பார்த்து அடுத்து வரும் ஆவணி துவங்கி, உனக்கு ஐந்து ஆண் குழந்தைகள் ஆண்டுக்கு ஒன்று வீதம் பிறக்கும் என்று ஆரூடம் கணித்து வாழ்த்தினார்.

அதன்படி மாலையம்மாள் முதல் குழந்தையை ஈன்றெடுத்தாள். அவர் சொன்னபடி வரிசையாய் ஐந்து ஆண் குழந்தைகள் பிறந்தன. குலசேகரப் பாண்டியன், கூன் பாண்டியன், பொன்பாண்டியன், சேகரப் பாண்டியன், சேர்மப் பாண்டியன் என பெயரிட்டு வளர்த்து வந்தார்கள். பின்னாளில் இவர்கள்தான், ஐவர் ராஜாக்கள் என்றும் அஞ்சு ராஜாக்கள் என்றும் அழைக்கப்பட்டனர்.

பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து ஆரூடம் கணிக்க, திருவண்ணாமலையிலிருந்து ஜோதிடர் ஒருவர் வந்தார். அவர் மூத்தவன் குலசேகரப்பாண்டியனுக்கு பெண்ணொருத்தியால் தோஷம் உள்ளது என்றும் தோஷம் நிவர்த்தியாக, குமரியாக சக்திதேவி வீற்றிருக்கும் கன்னியாகுமரி சென்று கடலில் நீராடி, தான தர்மங்கள் செய்யவேண்டும் என்றும் கூறினார்.

இதையொட்டி, இந்தப் பரிகாரத்திற்காக குலசேகரப்பாண்டியன் தென்திசை நோக்கி பயணிக்கத் தயாரானார். அண்ணன் பிரிவை தாங்க முடியாதவர்கள் தாங்களும் உடன் வருவதாகச் சொன்னார்கள். ஐந்து பேரும் சேர்ந்தே புறப்பட்டார்கள். அவர்களை வழிநடத்தி அழைத்துச் சென்று வரும்படி மந்திரிகளையும் படையையும் அனுப்பி வைத்தார் மன்னன் பாண்டிய ராஜா.

குமரிக்கு வந்தார்கள். கடலில் தீர்த்தமாடினார்கள். ஏராளமானவர்களுக்கு தானங்களும் தர்மங்களும் செய்தார்கள். பின்னர், படை பரிவாரங்களுடன் காஞ்சிக்குத் திரும்பினார்கள். நெல்லைச் சீமைக்கு முன்பு தற்போதைய பணகுடி எனும் ஊருக்கு அருகில் உள்ள பாம்பன்குளம் வனப்பகுதியில் நள்ளிரவாகிவிட்டதால் தங்கி ஓய்வெடுத்தார்கள்.

அப்போது, படைவீரர்கள் சிலர் மன்னனின் உத்தரவுடன் நாய்களுடன் முயல் வேட்டைக்குச் சென்றனர். எட்டு முயல்களைக் கண்டார்கள். அதைக்கண்டு நாய்கள் துரத்தின. பின்னால் வீரர்களும் ஓடினார்கள்.

வள்ளியூர் அருகே ஊர் எல்லையில் ஓங்கி உயர்ந்த புற்று ஒன்று இருந்தது. அந்தப் புற்றின் அருகில் வந்ததும் முயல்கள் நின்றன.சுற்றிச்சுற்றி வந்தன. திடீரென ஒருவித வேகத்துடன் சத்தம் எழுப்பியபடி திரும்பி நாயைத் துரத்தின. அதிர்ந்துபோன வீரர்கள், மன்னனிடம் நடந்ததைத் தெரிவித்தார்கள். உடனே குலசேகரப் பாண்டியன் அங்கே வந்து பார்த்தான். வியந்தான். மலைத்தான். அதிர்ந்தான்.

அப்போது அந்தப் புற்றில் அம்மன் முகம் தெரிந்தது. வியந்து, மகிழ்ந்தான். வணங்கி வேண்டினான். அப்போது அசரீரி... ‘‘நான் ஆதி சக்தி, வையகம் தோன்றியது முதல் இங்கே உள்ளேன். நான்காவது யுகத்தில் என்னை இப்போது கண்டாய். எனக்கு இங்கே கோயில் கட்டு. வழிபடு. நீயும் இங்கேயொரு கோட்டையைக் கட்டி ஆட்சி செய்வாயாக!’ என்று கேட்டது. உன்னை மேம்படுத்துவேன் என்று சொல்லிற்று.

நெக்குருகிப் போன மன்னன் நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து வணங்கினான். பெற்றோர் ஆசியுடன் அம்மன் கூறியபடி கோயிலைக் கட்டினான். அம்பாளுக்கு மூன்று யுகம் கண்ட அம்மன் என்றே பெயர் அமைந்தது என்கிறது ஸ்தல புராணம்.

வள்ளியூர் பேருந்து நிலையத்தில் இருந்து ஒரு கி.மீ தூரத்தில் சித்தூர் செல்லும் சாலையில் உள்ள, மூன்று யுகம் கண்ட அம்மனுக்கு, ஆடி மாதம் முழுவதும் விசேஷ அலங்காரங்களும் ஆராதனைகளும் நடைபெறுகின்றன. செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் வந்து தரிசித்தால், நினைத்த காரியங்களை நிறைவேற்றித் தந்தருள்வாள்.

வள்ளியூர் மூன்று யுகம் கண்ட அம்மனை மனதார வேண்டுங்கள். மங்கல காரியங்களையெல்லாம் நடத்தித் தருவாள். மங்காத செல்வத்தைத் தந்தருள்வாள். வீடு மனை யோகங்களையெல்லாம் வழங்குவாள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

11 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

8 days ago

மேலும்