காவிரியின் வடகரை ஸ்தலம், தேவாரப் பாடல் பெற்ற திருக்கோயில்களில் 37வது ஸ்தலம் எனும் பெருமை கொண்டது திருக்கோடிக்காவல் திருத்தலம். இவை மட்டுமின்றி எண்ணற்ற அற்புதங்களை உள்ளடக்கிக் கொண்டிருக்கிறது திருக்கோடிக்காவல் திருக்கோயில். பனிரெண்டாயிரம் ரிஷிகளும் மூன்று கோடி மந்திர தேவதைகளும் வணங்கி வழிபட்ட அற்புதமான கோயில் இது என்கிறார்கள் சிவாச்சார்யர்கள்.
கும்பகோணத்தில் இருந்து குத்தாலம் செல்லும் சாலையில், நவக்கிரக ஸ்தலங்களில் ஒன்றான சூரியனார் கோவில் அமைந்துள்ளது. இங்கிருந்து கஞ்சனூர் கடந்து, ஆடுதுறையில் இருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ளது திருக்கோடி வாசல்.
தலம், மூர்த்தம், தீர்த்தம் எனும் பெருமைகளைக் கொண்ட தலம் என்று சொல்லுவார்கள். திருக்கோடிவாசல் இந்த மூன்றும் கொண்ட பெருமைக்கு உரிய தலம். அத்துடன் புராணச் சிறப்பு கொண்ட தலம். சமயக்குரவரால் பாடப்பட்ட திருத்தலம். சரித்திரப் பெருமைகளைப் பறைசாற்றும் கல்வெட்டுகள் கொண்ட தலம்.
திருக்கோடிக்கா என்று பெயர் அமைந்ததற்குக் காரணம் உண்டு. திரிகோடி என்பதுதான் திருக்கோடி என மருவியுள்ளது. திரிகோடி என்றால், மூன்று கோடி. மூன்று கோடி மந்திரதேவதைகளுக்கு ஏற்பட்ட சாபம் நீங்கப் பெற்று, அவை சாயுஜ்யம் எனும் ஞானமுக்தியை இந்தத் தலத்து இறைவனை வணங்கி வரம் பெற்றதால் திருக்கோடிக்காவல் எனும் பெயர், இந்தத் தலத்துக்கு அமைந்ததாகச் சொல்கிறது ஸ்தல புராணம்.
» ஜடாயுவுக்கு மோட்சம்; அழகு ராமர்; கம்பீர யோக நரசிம்மர்!
» சாயிபாபாவை நினைத்து தெருநாய்களுக்கு உணவு; நிம்மதியும் நிறைவும் தருவார் ஷீர்டி பாபா!
இறைவனின் திருநாமம் - திருக்கோடீஸ்வரர். அம்பாளின் திருநாமம் - ஸ்ரீதிரிபுரசுந்தரி. ஆதிசைவ ருத்ரகோயி சம்ஹிதை எனும் சிவபுராணத்தில் சாயுஜ்ய காண்டத்தில், 33 அத்தியாங்களில், இந்தத் தலம் குறித்து விவரிக்கப்பட்டுள்ளது. நைமிசாரண்யத்தில், சூதபெளராணிகர், சனகாதி முனிவர்களிடம் இதனையெல்லாம் விவரிப்பதாக அமைந்துள்ளது.
ஒருமுறை, பனிரெண்டாயிரம் ரிஷிகளும் மூன்று கோடி மந்திர தேவதைகளும் சாயுஜ்யம் எனும் ஞானமுக்தியை அடையும் பொருட்டு, திருவேங்கடத்தில் ஏழுமலையான் சந்நிதியில் மந்திரம் ஜபித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, அங்கே... துர்வாச முனிவர் வந்தார். ’தவமும் மந்திரமும் மட்டுமே ஞானத்தை அடைய போதாது. குருவின் ஆசி வேண்டும். பிரம்ம ஞானம் பெறவேண்டும். இவற்றையெல்லாம் அடைய பரமேஸ்வரன் அருளவேண்டும். அப்போதுதான் ஞானமுக்தி கிடைக்கப் பெறலாம்’ என அருளினார்.
இதைக் கேட்டு, மூன்று கோடி மந்திர தேவதைகளும் துர்வாசரைப் பரிகசித்தனர். ‘தவ வலிமையாலும் மந்திர சக்தியாலும் ஞானத்தை அடைவோம்’ என கர்வத்துடன் சொன்னார்கள். நல்லநாளிலே கோபப்படும் துர்வாசர், இன்னும் கோபமானார். ’இன்னும் பலப்பல ஜென்மங்கள் துன்பத்தை அனுபவித்து, இறுதியாகவே ஞானத்தைப் பெறுவீர்கள்’ என சாபமிட்டார்.
சாபத்தைக் கேட்டு, பனிரெண்டாயிரம் ரிஷிகளும் ஆடிப்போனார்கள். துர்வாசரை சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தனர். பின்னர் அவருடன் காசியம்பதிக்குச் சென்றனர். காசி விஸ்வநாதரைத் தொழுதனர். அங்கே, அந்த ரிஷிகளுக்கு பஞ்சாட்சர மந்திரோபதசத்தைச் செய்தருளினார். பின்னர், ‘திருக்கோடிக்காவுக்கு வாருங்கள். அத்யாத்ம வித்தையை போதிக்கிறேன்’ என அருளி மறைந்தார்.
அதன்படி, துர்வாச பனிரெண்டாயிரம் ரிஷிகளுடன் திருக்கோடிக்கா க்ஷேத்திரத்துக்கு வந்தார்கள். இறைவனை வழிபட்டார்கள். நந்திதேவர் தன் சிருங்கம் எனும் கொம்பினால் பூமியைக் கீறி உண்டாக்கிய தீர்த்தம், சிருங்கோத்பவ தீர்த்தம் எனப்படுகிறது. அந்தத் தீர்த்தத்தில், முனிவர்கள் நீராடினார்கள். அங்கே, ஜோதிரூபனாகக் காட்சி அளித்தார். பின்னர், ஞான முக்தி அளித்தார் சிவனார் என்கிறது திருக்கோடிக்கா ஸ்தல புராணம்.
ஆனால், மூன்று கோடி மந்திர தேவதைகள், ரிஷிகளின் வழியைப் பின்பற்றவில்லை. தவத்தைத் தொடர்ந்தார்கள். ஆனால் திருக்கோடிக்கா இறைவனை தரிசிக்கவில்லை. அவர்களுக்கு ஏழுமலையில் தரிசனம் தந்தார் வேங்கடவன். ‘துர்வாசரின் கோபத்துக்கு ஆளானது தவறு. அங்கே செல்லுங்கள். ஞானமும் முக்தியும் நிச்சயம்’ என அருளினார்.
நாரதரும் இதை விரிவாக எடுத்துரைக்க, மூன்று கோடி தேவதைகளும் திருக்கோடிக்கா வந்தார்க்ள். உத்திரவாகினி எனும் பெருமை கொண்ட காவிரியில் அப்போது வெள்ளம் பெருக்கெடுத்திருந்தது. அவர்களால், ஒரு கரையில் இருந்து மறு கரைக்கு செல்லமுடியவில்லை. தவித்தனர். மருகினர். கலங்கினர். துர்வாசரின் ஆலோசனைப்படி, விநாயக பூஜை மேற்கொண்டனர்.
காவிரிக்கரையில் ஒதுங்கியிருந்த கிளிஞ்சல்களையும் மண்ணையும் கொண்டு பிள்ளையாரைப் பிடித்து பூஜித்தார்கள். அப்போது விநாயகரின் அருளால், வெள்ளம் நின்றது. வழியைக் காட்டினார் விநாயகர். இங்கே... திருக்கோடிக்கா தலத்தில் கரையேற்று விநாயகர் எனும் திருநாமத்துடன், இன்றைக்கும் நம் வாழ்க்கைக்கான கரையை, வழியைக் காட்டிக் கொண்டிருக்கிறார் பிள்ளையார்.
அவர்களுக்கு, அகத்தியர் பெருமான், அத்யாத்ம வித்தையை உபதேசித்தார். அதைக் கற்றறிந்த மந்திர தேவதைகள், நாதேஸ்வரர் கஹோனேஸ்வரர், சண்டபீடேஸ்வரர் எனும் மூன்று லிங்கங்களை கிழக்கே பிரதிஷ்டை செய்து பூஜித்தனர். இதில் மகிழ்ந்த பரமேஸ்வரனின் திருவுளப்படி சிருங்கோத்பவ தீர்த்தத்தில் நீராடி இறைவனின் ஜோதியிலே கலந்து சாயுஜ்ய முக்தி அடைந்தனர் என்கிறது புராணம்.
இப்படியாக மூன்றுகோடி மந்திர தேவதைகள் சாபம் நீங்கி சாயுஜ்யம் என்ற ஞானமுக்தி அடைந்ததால் இங்கே இறைவன் திருநாமம் திருக்கோடீஸ்வரர் என்றும் ஊருக்கு திருக்கோடிக்காவல் என்றும் அமைந்ததாகச் சொல்கிறது ஸ்தல புராணம்.
திருக்கோடிக்கா எனும் புண்ணியத்தலத்துக்கு வந்து தரிசித்து வேண்டிக்கொண்டால், தவ, மந்திர யோகங்களைப் பெறலாம். குழந்தைகள் கல்வியில் ஞானமும் யோகமும் பெறுவார்கள். எல்லா வளமும் நலமும் தந்து வாழ்க்கைக்கு வழிகாட்டுவார்; சகல ஐஸ்வரியமும் தந்து அருளுவார் திருக்கோடீஸ்வரர்!
- ராஜா மகாலிங்கம், கும்பகோணம்
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
21 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago