ஆனித் திருமஞ்சனம் ; அகிலத்து நன்மைக்காக ஆடல்வல்லானை வேண்டுவோம்; - சிதம்பரம் தீட்சிதர் வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

- சிதம்பரம் வெங்கடேச தீட்சிதர்


அபிஷேகப் பிரியரான சிவனாருக்கு ஆனி மாதம் உத்திரம் நட்சத்தித்தில் சிறப்பு அபிஷேகங்கள் செய்து பூஜிக்கும் நாள். ஆடல்நாயகன் நடராஜ பெருமானை அலங்காரங்கள் செய்து, அவருடைய நடனத் திருக்கோலத்தை தரிசிக்கும் திருநாள்.

தேவர்கள் தினமும் ஆறு முறை நடராஜருக்கு அபிஷேகம் செய்து வழிபடுவதாக ஐதீகம். அதாவது அவர்களுக்கு ஒருநாள் என்பது, பூலோகத்தில் ஒரு ஆண்டுக்குச் சமம். இதன் அடிப்படையில், சிவாலயங்களில் ஆண்டுக்கு ஆறு முறை நடராஜருக்கு விமரிசையாக அபிஷேகம் நடக்கிறது.

ஆடல் வல்லான் நடராஜப் பெருமானுக்கு ஒரு ஆண்டில் ஆறு முறை அபிஷேகம் செய்ய வேண்டும் என்று ஆகம விதிகள் எடுத்துரைக்கின்றன. மூன்று முறை திதியிலும், மூன்று முறை நட்சத்திர நாளிலும் அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. இதில் மிகச்சிறப்பானவை மார்கழி திருவாதிரை, சித்திரை திருவோணம் மற்றும் ஆனி உத்திர நட்சத்திர நாட்கள். அதன்படி, வருகிற ஞாயிற்றுக்கிழமை 27ம் தேதி தில்லைக்கூத்தனுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது.
ஆவணி, புரட்டாசி, மாசி மாத வளர்பிறை சதுர்த்தசி முதலான திதிகளிள் நடராஜருக்கு அவருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. அதாவது மனிதக் கணக்கில், ஒரு வருடத்துக்கு ஆறு அபிஷேகங்கள். தேவர்களின் கணக்கில் ஒருநாளில் ஆறுகாலத்தில் அபிஷேகங்கள் என அவை கணக்கிடப்படுகின்றன.

ஒரு ஆண்டில் ஆறு நாட்கள், நடராஜருக்கு அபிஷேகம் நடத்தப்படும். இதில், மூன்று நட்சத்திர நாட்கள், மூன்று திதி நாட்கள். ஏன் ஆறு நாட்கள் அபிஷேகம் நடத்த வேண்டும்… ஏழு நாட்களோ, 10 நாட்களோ, 70 நாட்களோ நடத்தலாமே?

பொதுவாக, ஆலயங்கள் பலவற்றிலும் தினமும் ஆறுகால பூஜை நடைபெறும். அதாவது, அதிகாலை, 4:00 மணிக்கு, திருவனந்தல் எனும் அதிகாலை பூஜையும், 6:00 மணிக்கு, காலசந்தி எனப்படும் காலை பூஜையும் நடக்கும். பகல், 12:00 மணிக்கு உச்சிகாலம் எனப்படும் மதிய பூஜையும், மாலை, 4:00 மணிக்கு சாயரட்சை எனப்படும் சாயங்கால பூஜையும், இரவு, 7:00 மணிக்கு ராக்காலம் எனப்படும் இரவு பூஜையும், 9:00 மணிக்கு அர்த்தஜாமம் எனப்படும் பள்ளியறை பூஜையும் நடைபெறுவது வழக்கம்.

தேவர்களும் இதேபோல, ஆறுகால பூஜையை நடத்துதாகச் சொல்கிறது புராணம். ஆனால், அவர்களுக்கு ஒருநாள் என்பது, நமக்கு ஒரு ஆண்டு. அவர்களுக்கு தட்சிணாயனம், உத்ராயனம் என்ற இருவகை காலப்பிரிவுகள் உண்டு.
தை முதல் ஆனி வரை (காலை, 6:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரை) உத்ராயனம்; ஆடி முதல் மார்கழி வரை (மாலை, 6:00 மணி முதல் அதிகாலை, 6:00 மணி வரை) தட்சிணாயனம்.
அதாவது, அவர்களது அதிகாலைப் பொழுது, நமக்கு மார்கழி. காலைப் பொழுதோ, மாசி மாதம்; மதியம் – சித்திரை திருவோணம்; மாலைப்பொழுது – ஆனி; ராக்காலம் – ஆவணி; அர்த்தஜாமம் – புரட்டாசி.

இதனால்தான், தேவர்களின் அதிகாலைப் பொழுதான மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில், நடராஜருக்கு அபிஷேகம் நடத்துகிறோம். இதை, ஆருத்ரா தரிசனம் என்போம். அடுத்து, மாசி மாதம் வளர்பிறை சதுர்த்தசியன்று காலை, 6:00 மணிக்கும், சித்திரை மாதம் திருவோண நட்சத்திரத்தன்று மதியம், 12:00 மணிக்கும் அபிஷேகம் செய்யப்படுகிறது.
இதையடுத்து, ஆனி உத்திரத்தன்று மாலை, 4:00 மணியளவிலும், அடுத்து, ஆவணி வளர்பிறை சதுர்த்தசியன்று இரவு 7:00 மணிக்கும், புரட்டாசி வளர்பிறை சதுர்த்தசியன்று இரவு 9:00 மணிக்கும் அபிஷேகம் செய்யப்படுகிறது.

இந்த அபிஷேக நிகழ்ச்சிகளில் மிக முக்கியமானது மார்கழி திருவாதிரையும், ஆனி உத்திரமும் தான் என்பது குறிப்பிடத் தக்கது. மார்கழி காலைப்பொழுதில் அபிஷேகம் காண வாய்ப்பில்லாதவர்கள், ஆனி, மாலைப்பொழுதில் இந்த அபிஷேகத்தைத் தரிசிக்கலாம்.

பொன்னம்பலமான சிதம்பரத்தில், பத்துநாட்கள் நடைபெறுவது ஆனி உத்திரத்திருவிழா.
எட்டாம் நாள் வரை உற்ஸவமூர்த்திகளான விநாயகர், சுப்பிரமணியர், சோமாஸ்கந்தர், சிவானந்த நாயகி, சண்டேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் தனித்தனியாக வெள்ளி மற்றும் தங்க வாகனங்களில் வீதியுலா வருவார்கள். ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா நடைபெறும். அன்று பஞ்சமூர்த்திகளும் ஐந்து தேர்களில் எழுந்தருளி உலா வருவார்கள்.
மேலும் அப்போது ஆடலரசனே தேரில் எழுந்தருளி நான்கு மாட வீதிகளிலும் உலா வரும் அதிசயம் நடைபெறும்.
இதைத் தொடர்ந்து நடராஜரையும், அன்னை சிவகாமியையும் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளச் செய்து திருமஞ்சன அபிஷேகங்கள் நடைபெறும். அதன்பின் இருவரும் ஆனந்த நடனம் புரியும் அற்புதக் காட்சி அரங்கேறும். ஆனந்த நடனம் புரிந்தவாறு ஞானாகாச சித்சபையில் எழுந்தருள்வார்கள். தீபாராதனை முடிந்ததும், இரவு அபிஷேகம் முடிந்து கொடியிறக்கப்படும்.
சிவனாரின் ஆனந்த நடனத்தைக் காண வியாக்ரபாதர், பதஞ்சலி முனிவர் இருவரும் சிதம்பரத்தில் தவம் செய்து வந்தனர். அவர்களுக்கு நடன தரிசனம் அருள சிவன் இசைந்தார். இதனை அறிந்த இந்திராதிதேவர்கள், பிரம்மா, விஷ்ணு, லட்சுமி, சரஸ்வதி, திரிசகஸ்ர முனிவர்கள், உபமன்யு முனிவர் என்று அனைவரும் கூடினார்கள். .
அங்கே பேரொளி ஒன்று தோன்றியதும், தேவதுந்துபி வேகமாக முழங்கியது. நந்தீகேஸ்வரர் தன் பொற்பிரம்புடன் வந்தருளினார். கருணையே வடிவான சிவன் நடராஜராகவும், தாய் பார்வதி சிவகாமசுந்தரியாகவும் காட்சியளித்ததும் சிவசிவ என்று கோஷமெழுப்பி அனைவரும் கரம்குவித்து நின்றனர்.

நடராஜர் புலித்தோல் உடுத்தி, உடுக்கை, அனல், மான், மழு, நாகாபரணம் அணிந்து நின்றார். வலக்கையால் டமருகத்தை அடித்தும், இடக்கையில் அக்னி ஏந்தியும், ஒருகையால் அபயம் அளித்தும், மறுகையால் பாதத்தைக் காட்டியும் நடனமாடினார். அவரின் சிவந்த சடைகள் எட்டுத்திக்கும் அசைந்தாடின. அந்த நடன தரிசனத்தை இன்றும் நமக்கு சிதம்பரத்தில் வழங்கிக் கொண்டிருக்கிறார் ஆடல்வல்லான்.
இதயம் என்னும் கோயிலில் இறைவன் இடைவிடாமல் திருநடனம் ஆடிக்கொண்டே இருக்கிறார். இதை தரிசித்தால் வாழ்வில் எப்போதும் நமக்கு ஆனந்தமே!

பஞ்ச சபைகளான திருவாலங்காடு ரத்தின சபை, சிதம்பரம் பொன்னம்பலம், மதுரை வெள்ளியம்பலம், திருநெல்வேலி தாமிர சபை, குற்றாலம் சித்திர சபை இவற்றில் இந்த அபிஷேகங்களைத் தரிசிப்பது மிகவும் சிறப்புமிக்கவை.

தில்லைக்கு செல்லமுடிந்தவர்கள் பாக்கியவான்கள் .இயலாதவர்கள் அருகில் உள்ள கோயில்களில் ஸ்ரீ நடராஜ பெருமான் அபிஷேகம் கண்டு களித்து வாழ்வில் வளம் பெறலாம்.

இப்போதைய சூழலில், ஆனந்தக் கூத்தனை வீட்டிலிருந்தே பிரார்த்திப்போம். உலக நன்மைக்காக, மக்களின் நலனுக்காக தில்லைக்கூத்தனை மனதாரப் பிரார்த்திப்போம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

7 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

9 days ago

மேலும்