ஆனைமலை,திருமோகூர், திருவாதவூர்; சிவாலயத்தில் மகாவிஷ்ணுவின் புருஷாமிருகம்

By வி. ராம்ஜி

மதுரையில் இருந்து மேலூர் செல்லும் வழியில் உள்ளது ஒத்தக்கடை. இங்கிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ளது திருவாதவூர்.
மாணிக்கவாசகர் அவதரித்த திருத்தலம். இங்கே அவர் அவதரித்த இல்லமானது, மாணிக்கவாசகரின் கோயிலாக அமைத்து வழிபட்டு வருகிறது.
இங்கே உள்ள பிரமாண்ட கோயிலில் குடிகொண்டிருக்கிறார் சிவனார். இவரின் திருநாமம் திருமறைநாதர். அம்பாளின் திருநாமம் வேதநாயகி.
மிகப்பெரிய திருக்கோயில் இது. மாணிக்கவாசகருக்கு சிவனார் அருளிய தலம். சனி பகவானுக்கு அருளிய தலம். சனிபகவான் தவமிருந்து வழிபட்டு வரம் பெற்ற தலம். பைரவர் வழிபட்ட தலம். மேலும் தீர்த்தக்குளம் உருவாக்கி தவமிருந்த தலம்.
கலைநயத்துடனும் சிற்ப நுட்பங்களுடனும் அழகுற அமைந்திருக்கிறது ஆலயம். கோயிலில், நூற்றுக்கால் மண்டபமும் வெகு நேர்த்தியுடன் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தத் தலத்தின் இன்னொரு அம்சம்... மகாவிஷ்ணுவின் காவல் தெய்வம் என்று போற்றப்படும் புருஷா மிருகத்தை இந்தத் தலத்தில் தரிசிக்கலாம்.
இங்கே வரும் பக்தர்கள் பலரும், அந்த நூற்றுக்கால் மண்டபத்தில் சிறிதுநேரம் நின்றுவிட்டோ அமர்ந்துவிட்டோதான் செல்வார்கள். இந்த நூற்றுக்கால் மண்டபம், மாணிக்கவாசகரால் அமைக்கப்பட்டது என்கிறது ஸ்தல புராணம்.
நூற்றுக்கால் மண்டபம் போலவே, மூலவரின் கருவறைச் சுவர்களும் சிற்ப வேலைப்பாடுகளுடன் பிரமிக்கவைக்கின்றன.
ஆறுகால் மண்டபத்தில், அனுக்ஞை விநாயகர் அழகு ததும்பக் காட்சி தருகிறார். விநாயகரிடம் தங்கள் வேண்டுதல்களையெல்லாம் சொல்லிவிட்டுத்தான் சிவனாரிடம் தங்கள் பிரார்த்தனைகளைத் தெரிவிக்கின்றனர்.
அம்பாள் சந்நிதியும் அதற்கு முன்னதாக உள்ள மண்டபத்தூண்களும் பிரமிக்க வைக்கின்றன. இதேபோல், இங்கே உள்ள ஆடல்வல்லான் நடராஜரை கண்குளிரத் தரிசித்துக் கொண்டே இருக்கலாம்.
‘தெற்கே மதுரையம்பதியில், மகிழ மரங்கள் சூழ்ந்த வனப்பகுதியில், தவமிருப்பாயாக. உன் வாத நோய் தீர்த்தருள்வேன்’ என்று சிவபெருமான், சனீஸ்வரரிடம் அருளினார். அதன்படி மகிழவனத்துக்கு வந்து கடும் தவம் மேற்கொண்டார் சனீஸ்வரர். வாத நோய் நீங்கப் பெற்றார். அந்தத் திருத்தலமே திருவாதவூர் என பின்னர் அழைக்கப்பட்டது. ஒருகாலத்தில், மகிழமரங்கள் சூழ்ந்த வனமாக இருந்ததால், இந்தத் தலத்தின் ஸ்தல விருட்சம் மகிழ மரம்.
கோயிலுக்குள்ளேயே தீர்த்தம் உள்ளது. இதனை கபில தீர்த்தம் என்றும் சொல்கிறார்கள். திருமறைநாதருக்கு இந்தத் தீர்த்தம்தான் தினமும் அபிஷேகத்துக்கு பயன்படுத்தப்படுகிறது.
திருவாதவூர் திருத்தலத்தை மனதில் நினைத்துக் கொண்டு, வேதநாயகி சமேத திருமறைநாதரையும், சனீஸ்வர பகவானையும் பைரவரையும் மாணிக்கவாசகரையும் புருஷா மிருகத்தையும் வேண்டிக்கொள்ளுங்கள்.
மதுரை ஒத்தக்கடையில் இருந்து இந்த ஆலயத்துக்கு வரும் வழியிலேயே அமைந்துள்ளது திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில். ஒத்தக்கடையில் இருந்து அந்தப் பக்கம் சென்றால், ஆனைமலை யோக நரசிம்மர் ஆலயம் உள்ளது. இந்தப் பக்கம் வந்தால், ஆனமலை யோக நரசிம்மர், திருமோகூர் காளமேகப் பெருமாள், திருவாதவூர் திருமறைநாதர் என மூன்று திருத்தலங்களையும் தரிசிக்கலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

20 hours ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

9 days ago

மேலும்