ஊடல் இல்லாத உறவுகளே இல்லை. ஊடலும் அதற்குப் பிறகான சமாதானமும் இன்னும் புரிதலையும் நெருக்கத்தையும் பிரியத்தையும் ஏற்படுத்தும். இந்த ஊடல் இறைவனுக்குள்ளேயே நிகழ்ந்திருக்கிறது. ஸ்ரீரங்கத்தில் குடிகொண்டிருக்கும் ரங்கனுக்கும் தாயாருக்கும் நடந்த ஊடலும் அதன் பிறகான புரிதலும் விவரிக்கும் புராணம், நாம் அறிந்ததுதானே.
அந்தக் காலத்தில் பரந்துவிரிந்த சோழ தேசத்தின் தலைநகரம் உறையூர். இந்தப் பகுதியில், நந்தசோழன் எனும் மன்னன் ஆட்சி செய்துவந்தான். குறைவற நல்லாட்சி புரிந்து வந்தான். இறைப்பணியிலும் ஈடுபட்டு, சிறந்த பக்திமான் என்று பேரெடுத்தான். ஆனால் என்ன, அள்ளியெடுத்துக் கொஞ்சி மகிழ, ஒரு வாரிசு இல்லை அவனுக்கு.
திருமாலின் மீது மாறா பக்தி கொண்டிருந்த மன்னனின் மனநிலையை, ஏக்கத்தை அறியாமலா இருப்பார் மகாவிஷ்ணு? அவனின் பக்தியில் மகிழ்ந்த பரமன், தன் இல்லாள் மகாலக்ஷ்மியையே மன்னனுக்கு மகளென அவதரிக்கச் செய்தார். தாமரைத் தடாகத்தில், தாமரை மலர் மீது தங்கமென ஜொலித்த குழந்தையைக் கண்டான். குதூகலமானான். அரண்மனைக்குக் கொண்டு வந்தான். ராணியிடம் கொடுத்து மகிழ்ந்தான். நெகிழ்ந்து போனாள் அரசி. ‘கமலவல்லி’ எனப் பெயர் சூட்டி வளர்த்தார்கள்.
உலகத்துக்கே நாயகியான மகாலக்ஷ்மி, சோழ தேசத்தின் இளவரசியாக வளர்ந்தாள். வலம் வந்தாள். தன் துணைவனான பரம்பொருளுடன் மகாலக்ஷ்மியும் சேரும் தருணமும் வந்தது.
வேட்டைக்காரனைப் போல் வந்தான் அரங்கன். அதுவொரு பலாச வனம். அங்கே தன் தோழியருடன் இருந்த கமலவல்லி, அரங்கனைக் கண்டாள். அவனழகில் தேஜஸில் மயங்கினாள். மகளின் கலக்கத்தையும் வாட்டத்தையும் காதலையும் கண்டு செய்வதறியாது தவித்தான் மன்னன்.
ஆட்டத்தை முடித்துக்கொள்ள திருவுளம் கொண்டான் அரங்கன். அன்றிரவு... மன்னனின் கனவில் அரங்கன் வந்தான். தன் தேவியையே மகளாக வளர்த்து வந்தாய் எனும் உண்மையைச் சொல்லியருளினார் அரங்கன். ’சந்நிதிக்கு அழைத்து வா’ எனப் பணித்தார். இதைக் கேட்டு நெகிழ்ந்து போனான் மன்னன். திருவரங்கம் இருக்கும் திசை நோக்கி, நெடுஞ்சாண்கிடையாக விழுந்து நமஸ்கரித்தான்.
விடிந்ததும் பரந்தாமனின் அருளுரைப்படி, மணமகள் போல் மகளை, மகாலக்ஷ்மியை அலங்கரித்து, அரங்கநகருக்கு ஊர்வலமாய் அழைத்து வந்தான். சந்நிதியில் நின்ற கமலவல்லியை, தனக்குள் ஐக்கியப்படுத்தி, மன்னனுக்கு அருளினார் அரங்கன். தன் பக்திக்கும் குணத்துக்கும் இறைவன் வழங்கிய கொடை என்று நெக்குருகிய மன்னன், உறையூர் வந்த கையுடன்... ஓர் ஆலயம் அமைக்கத் தீர்மானித்தான்.
மகாலக்ஷ்மியே மகள் கமலவல்லியாக அவதரித்ததால், அவளின் நினைவாகவே ஆலயம் அமைத்தான் மன்னன். மகாலக்ஷ்மியை மகளாக வளர்த்தவனாயிற்றே. அரங்கனை தன் மாப்பிள்ளையாகவே பாவித்து பூஜித்தான். அதனால்தான், இங்கே உள்ள பெருமாளுக்கு அழகிய மணவாளன் என்றே திருநாமம் சூட்டி மகிழ்ந்தான். தாயாரின் திருநாமம்... சொல்லவா வேண்டும். கமலவல்லி நாச்சியார்.
திருச்சி உறையூரில் அழகுற அமைந்திருக்கிறது கமலவல்லி நாச்சியார் கோயில். அரங்கனையே கைப்பிடித்த பூரிப்புடனும் கனிவுடனும் அழகு ததும்பக் காட்சி தருகிறாள் தாயார்.
உரிய வயது வந்தும், இன்னும் திருமணமாகவில்லையே என்று கலங்கித் தவிப்பவர்களுக்கு, கமலவல்லித் தாயார் கல்யாண வரத்தைத் தந்தருள்கிறார். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில், மாதந்தோறும் வருகிற ஆயில்யம் நட்சத்திர நாளில், வீட்டில் விளக்கேற்றி சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து அக்கம்பக்கத்தாருக்கு வழங்கி, மனதார வேண்டிக்கொள்ளுங்கள். வீட்டில் தடைப்பட்ட மங்கல காரியங்கள் அனைத்தையும் நடத்தித் தருவார் கமலவல்லித் தாயார்.
தொடர்ந்து, கமலவல்லித் தாயாரை வணங்குங்கள். மணமாலை தோள் சேரும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
20 hours ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
9 days ago