வெக்காளியம்மனுக்கு பிரார்த்தனைச் சீட்டு;  வீட்டு பூஜையறையில் எழுதிவையுங்கள்

By வி. ராம்ஜி

உங்களின் குறைகளை, வேண்டுதல்களை, பிரார்த்தனைகளை, கண்ணீரை ஒரு சீட்டில் எழுதி, பூஜையறையில் வைத்து வேண்டிக் கொள்ளுங்கள். விரைவிலேயே அவற்றை நிவர்த்தித்து அருளுவாள் வெக்காளித்தாய்.


’’முதல் படம் இயக்கினேன். ஆனால் அது வெற்றிபெறவில்லை. அதன் பிறகு பட வாய்ப்புகள் வரவில்லை. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள், பட வாய்ப்பு கிடைக்காமல், சாப்பாட்டுக்கு வழியில்லாமல் தவித்துக்கொண்டிருந்தேன். அடுத்து என்ன செய்யவேண்டும், வாழ்க்கை எப்படிப் போகும் என்று எதுவும் தெரியாமல் திக்குத்திசை தெரியாமல் இருந்தேன்.


மிகவும் கலங்கிப் போயிருந்த நிலையில், அந்த ஊருக்குச் சென்றேன். கோயிலுக்குப் போனேன். அம்மனின் எதிரே உள்ள சூலத்தில், பிரார்த்தனைச் சீட்டு எழுதிக் கட்டிக்கொண்டிருந்தார்கள் பலரும்! நானும் என் எதிர்காலம் குறித்தும் எனக்கு பட வாய்ப்பு கிடைக்கவேண்டும் என்றும் அம்மனை வேண்டிக்கொண்டு, பிரார்த்தனைச் சீட்டு எழுதினேன். பிறகு சென்னைக்கு வந்தேன். தி.நகரில் உள்ள கையேந்திபவனில் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, ‘டைரக்டரே...’ என்று ஒரு குரல் கேட்டது. படத்தை இயக்கும் வாய்ப்பும் கிடைத்தது. அப்படி அழைத்தவர் கலைமணி. படத்தின் நாயகன் நடிகர் மோகன். அந்தப் படம் ‘பிள்ளைநிலா’.


நான் அம்மனை தரிசிக்கச் சென்ற ஊர் திருச்சி. அம்மன் எதிரே உள்ள சூலத்தில் பிரார்த்தனைச் சீட்டு எழுதினேன் அல்லவா. அந்த அம்மன் வெக்காளியம்மன்’’ என்று நடிகரும் இயக்குநருமான மனோபாலா ஒருமுறை பேட்டியில் நெகிழ்ந்து குறிப்பிட்டார்.


வெக்காளியம்மன் உண்மையிலேயே வரப்பிரசாதிதான்.


ஒருகாலத்தில், சோழர்களின் தலைநகரமாகத் திகழ்ந்தது உறையூர். திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்குதான் சக்தி மிக்க அருள் மழை பொழியக் கூடிய வெக்காளியம்மன் கோயில் கொண்டிருக்கிறாள்.


சோழர்களின் இஷ்ட தெய்வம் இவள். உறையூரின் எல்லையில் அமைந்திருப்பதால் எல்லைத் தெய்வமாகவும் கோலோச்சினாள். வடக்கு நோக்கிய பெண் தெய்வங்கள் எப்போதுமே எதிர்ப்புகளை விலக்கி, வெற்றியைத் தந்தருளும் என்பது ஐதீகம். இன்றைக்கும் பக்தர்களின் இஷ்ட தெய்வமாகவும் வெற்றியைத் தரும் தேவியாகவும் போற்றப்படுகிறாள் வெக்காளியம்மன்.


இங்கே... அம்மன் சந்நிதிக்கு எதிரில் சூலம் ஒன்று உள்ளது. பக்தர்கள் தங்களின் வேண்டுதல்களை, கவலைகளை, கண்ணீரை, பிரார்த்தனைகளை ஒரு சீட்டில் எழுதி, இந்த சூலத்தில் கட்டிவைக்கின்றனர். அந்தச் சீட்டில் உள்ள வேண்டுதல்களை அன்னை பார்த்து, அவர்களின் துயரங்களையெல்லாம் போக்கியருள்கிறாள் என்பதாக ஐதீகம். அவர்களின் வேண்டுதல்களையெல்லாம் நிறைவேற்றித் தருகிறாள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.


திருச்சி மட்டுமின்றி, பக்கத்து ஊர்களில் இருந்தும் கூட பக்தர்கள் வந்து பிரார்த்தனைச் சீட்டு கட்டி, வேண்டிக்கொள்கின்றனர். வெளிமாநிலங்களில், வெளிநாட்டில் இருப்பவர்கள், செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை, அமாவாசை, பெளர்ணமி முதலான நாட்களில், வீட்டில் விளக்கேற்றி, வெக்காளியம்மனை மனதார நினைத்துக் கொண்டு, ஒரு சீட்டில் தங்களின் பிரார்த்தனையை எழுதி, அதை பத்திரமாக பூஜையறையிலேயே வைக்கின்றனர்.


பின்னர், அவர்களின் வேண்டுதல் நிறைவேறியதும், திருச்சிக்கு வந்து வெக்காளித்தாயை தரிசித்து, தங்களது சீட்டைக் கட்டிவிடுவதுடன், தாங்கள் வேண்டிக்கொண்ட நேர்த்திக்கடனைச் செலுத்திச் செல்கின்றனர்.


வெக்காளியம்மன், கருணையே வடிவானவள். கனிவும் அன்பும் கொண்டவள். பக்தர்களுக்குத் தாயாக இருந்து அரவணைப்பவள். உங்களின் வேண்டுதல்களை அவளிடம் முறையிடுங்கள். வீட்டில் விளக்கேற்றி, பூஜையறையில் அமர்ந்து, உங்களின் வேண்டுதல்களை, துக்கங்களை, கஷ்டங்களை ஒரு துண்டுச் சீட்டில் எழுதி, அதில் கொஞ்சம் மஞ்சளும் குங்குமமும் சேர்த்து, எண்ணெய்ப் பிசுக்கு படாமல், பத்திரமாக வைத்துவிடுங்கள்.


செவ்வாய், வெள்ளி என்றில்லாமல், வீட்டில் விளக்கேற்றும்போதெல்லாம் வெக்காளியம்மனை நினைத்துக்கொண்டு, அந்தப் பிரார்த்தனைச் சீட்டுக்கு தீப தூபம் காட்டுங்கள். மனதார வேண்டிக் கொள்ளுங்கள்.


உங்கள் கவலைகளைப் போக்கியருள்வாள் வெக்காளியம்மன். துக்கங்களை நிவர்த்தி செய்வாள் அன்னை. பிரார்த்தனைகளை நிறைவேற்றித் தந்தருள்வாள் உறையூர் நாயகி!


வெக்காளித்தாயைச் சரணடையுங்கள். ‘தாயே நீயே சரணம்’ என அவளைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள். காவல் தெய்வமாகத் திகழும் வெக்காளியம்மன், ஒருபோதும் நம்மைக் கைவிடமாட்டாள்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

13 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

9 days ago

மேலும்