கடன் தொல்லை தீர்க்கும் பதிகம்;  திருப்பம் தரும் திருச்சேறை திருத்தலம்

By வி. ராம்ஜி

கும்பகோணத்துக்கு அருகில் உள்ளது நாச்சியார்கோவில். குத்துவிளக்கிற்கு பெயர்பெற்ற இந்த ஊருக்கு அருகில்தான் இருக்கிறது திருச்சேறை திருத்தலம். மிகச்சிறிய கிராமம்தான். ஆனாலும் இங்கே, சைவமும் வைணவமும் போற்றும் வகையிலான இரண்டு திருக்கோயில்களும் அமைந்துள்ளன. சிவன் கோயிலும் உள்ளது. பெருமாள் கோயிலும் உள்ளது.


பெருமாள் கோயிலில் உள்ள திருமாலின் திருநாமம் - ஸ்ரீசாரநாதபெருமாள். சிவன் கோயிலில் உள்ள ஈசனின் திருநாமம் ஸ்ரீசார பரமேஸ்வரர்.
சார பரமேஸ்வரர், நம் வாழ்க்கையில் உள்ள பொருளாதாரம் சம்பந்தப் பட்ட கடன் பிரச்சினைகளையும் இந்த இப்பிறவிக் கடனையும் தீர்த்தருளக்கூடியவர் என்கிறது ஸ்தல புராணம். அம்பாளின் திருநாமம் - ஞானாம்பிகை. ருண விமோசனர், கடன் நிவர்த்தி ஈஸ்வர். கடன் உள்ளிட்ட சிக்கல்களைத் தீர்க்கும் திருத்தலம்.


இந்தத் தலத்தில், திருஞானசம்பந்தர் அருளிய பதிகம் ரொம்பவே சிறப்பு வாய்ந்தது. எவரொருவர் இந்தப் பதிகங்களை மனமுருகப் பாடி, சிவனாரை வேண்டிக்கோள்கிறார்களோ அவர்களின் கடன் பிரச்சினைகளெல்லாம் தீரும் என்பது உறுதி என்கிறார் சுப்ரமணிய சாஸ்திரிகள்.


கடன் பிரச்சினைகள் தீர்க்கும் பதிகம் இதோ :

முறியுறு நிறமல்கு முகிழ்முலை மலைமகள் வெருவமுன்
வெறியுறு மதகரி அதள் பட உரிசெய்த விறலினர்
நறியுறும் இதழியின் மலரொடு நதிமதி நகுதலை
செறியுறு சடைமுடி அடிகள் தம் வளநகர் சேறையே.

இந்தப் பதிகத்தின் விளக்கம்‬:
சிவபெருமான், தளிர் நிறமும், அரும்பு போன்ற முலையும் உடைய உமையவள் அஞ்சும்படி, மதம் பிடித்த யானையின் தோலை உரித்த வலிமையுடையவர். நறுமணம் கமழும் இதழ்களை உடைய கொன்றைப் பூவோடு, கங்கை நதியையும், பிறைச் சந்திரனையும், மண்டையோட்டையும் தன் அடர்ந்த சடை முடியில் அணிந்துள்ள அவ்வடிகள் வீற்றிருந்து அருளும் வளமை மிக்க நகரம் திருச்சேறை.


புனமுடை நறுமலர் பலகொடு தொழுவதொர் புரிவினர்
மனமுடை அடியவர் படுதுயர் களைவதொர் வாய்மையர்
இனமுடை மணியினொடு அரசு இலை ஒளிபெற மிளிர்வதோர்
சினமுதிர் விடையுடை அடிகள் தம் வளநகர் சேறையே.

இந்தப் பதிகத்தின் விளக்கம் :
வனங்களிலுள்ள பல நறுமலர்களைப் பறித்து, தூவித் தொழுகின்ற அடியவர்களுக்கும் மனமொன்றி உருகி, தியானம் செய்யும் அடியவர்களுக்கும் துயர் களைந்து அருள் புரியும் நியமமுடைய சிவபெருமான் கழுத்தில் கட்டப்படும் மணியும், அரசிலை போன்ற அணியும் ஒளிர, மிக்க கோபமுடைய ரிஷபத்தை வாகனமாகக் கொண்டவராய் வீற்றிருந்து அருளும் வளமான நகரம் திருச்சேறை என்கிறார் ஞானசம்பந்தர்..


புரிதரு சடையினர் புலியதள அரையினர் பொடிபுல்கும்
எரிதரும் உருவினர் இடபம் அது ஏறுவர் ஈடு உலா
வரிதரு வளையினர் அவர் அவர் மகிழ்தர மனைதொறும்
திரிதரு சரிதையர் உறைதரு வளநகர் சேறையே.

இந்தப் பதிகத்துக்கான விளக்கம்‬:
சிவபெருமான் முறுக்குண்ட சடா முடியை உடையவர். புலியின் தோலை இடுப்பில் கட்டியவர். நீறுபூத்த நெருப்புப் போன்ற சிவந்த திருமேனியில் வெண்ணிறத் திருநீற்றினைப் பூசிக் கொண்டிருப்பவர். ரிஷப வாகனத்தில் ஏறி வலம் வருபவர். சரிந்த வரிகளையுடைய வளையல்களை அணிந்த, பெருமையுடைய மகளிர் மகிழும்படி வீடுகள்தோறும் திரிந்து பிச்சையேற்கும் பிட்சாடனர். அத்தகைய சிவபெருமான் வீற்றிருந்து அருளும் வளமை மிக்க நகரம் திருச்சேறை என்று போற்றுகிறார்.

துடிபடும் இடையுடை மடவரல் உடனொரு பாகமா
இடிபடு குரலுடை விடையினர் படமுடை அரவினர்
பொடிபடும் உருவினர் புலியுரி பொலிதரும் அரையினர்
செடிபடு சடைமுடி அடிகள் தம் வளநகர் சேறையே.

இந்தப் பதிகத்துக்கான விளக்கம்‬:
உடுக்கை போன்று குறுகிய இடையுடைய உமா தேவியை, சிவபெருமான் தம்மில் ஒரு பாகமாகக் கொண்டவர். இடி முழக்கம் போன்ற குரலுடைய ரிஷபத்தை வாகனமாகக் கொண்டவர். படமெடுத்தாடும் பாம்பையே அணிந்தவர். திருவெண்ணீறு அணிந்தவர். இடையில் புலித் தோலாடை அணிந்தவர். செடி போன்று அடர்த்தியான சடாமுடி கொண்டவர். அப்பேர்ப்பட்ட பெருமைமிகுந்த சிவனார், வீற்றிருந்து அருளும் நகரம் திருச்சேறை.

அந்தரம் உழிதரு திரிபுரம் ஒரு நொடி அளவினில்
மந்தர வரிசிலை அதன் இடை அரவு அரிவாளியால்
வெந்தழி தரவெய்த விடலையர் விடமணி மிடறினர்
செந்தழல் நிறமுடை அடிகள் தம் வளநகர் சேறையே.

இந்தப் பதிகத்துக்கான விளக்கம் :
சிவபெருமான் ஆகாயத்தில் சுற்றித் திரிந்த திரிபுரங்களை நொடிப்பொழுதில் மலையை வில்லாகவும், அதனிடை வாசுகி எனும் பாம்பை நாணாகவும் பூட்டியவர். திருமால், வாயு, அக்கினி இவற்றை அம்பாகக் கொண்டு எய்து வெந்தழியுமாறு செய்த வீரமிக்கவர். தேக்கிய விடம் மணி போன்று விளங்கும் கண்டத்தைக் கொண்டவர். செந்தழல் போன்ற மேனியுடைய சிவனார் வீற்றிருக்கும் திருச்சேறை.


மத்தரம் உறு திறல் மறவர் தம் வடிவுகொடு உருவுடைப்
பத்தொரு பெயருடை விசயனை அசைவு செய் பரிசினால்
அத்திரம் அருளும் நம் அடிகளது அணிகிளர் மணியணி
சித்திர வளநகர் செறிபொழில் தழுவிய சேறையே.

இந்தப் பதிகத்துக்கான விளக்கம்‬:
மந்தார மலை போன்ற வலிமையுடைய வேட்டுவ வடிவம் தாங்கி வந்து, பத்துப் பேர்களைச் சிறப்பாகக் கொண்ட விஜயனைப் பொருது தளரச்செய்து, அவன் கௌரவர்களைத் தோல்வியடையச் செய்யும் வண்ணம் பாசுபதம் எனும் அம்பைக் கொடுத்தருளிய சிவபெருமான் வீற்றிருந்தருளுவது ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட அழகிய வளமை மிக்க நகரம், அடர்ந்த சோலைகள் சூழப்பெற்ற திருச்சேறை என்று பாடிப் பரவுகிறார் ஞானசம்பந்தர்.


பாடினர் அருமறை முறைமுறை பொருளென அருநடம்
ஆடினர் உலகிடை அலர்கொடும் அடியவர் துதிசெய
வாடின படுதலை யிடுபலி யதுகொடு மகிழ்தரும்
சேடர்தம் வளநகர் செறிபொழில் தழுவிய சேறையே.

இந்தப் பதிகத்துக்கான விளக்கம்‬:
இறைவன் முறைப்படி வரிசையாக அரிய வேதங்களைப் பாடியருளியவர். ஐந்தொழில்களை ஆற்றுபவர். திருநடனம் புரிபவர். மலரும், பூஜைக்கு உரிய பிற பொருள்களும் கொண்டு உலகின் அடியவர்கள் போற்றித் துதிக்க அருள்செய்பவர். வாட்டமுற்ற பிரம்மனின் வறண்ட மண்டையோட்டில் பிச்சையேற்று மகிழ்பவர். அத்தகு பெருமை மிக்க சிவபெருமான் வீற்றிருந்தருளும் நகரம், திருச்சேறை.

கட்டுர மதுகொடு கயிலை நன்மலை நலி கரமுடை
நிட்டுரன் உடலொடு நெடுமுடி ஒருபதும் நெரிசெய்தார்
மட்டுர மலரடி அடியவர் தொழுதெழ அருள் செயும்
சிட்டர் தம் வளநகர் செறிபொழில் தழுவிய சேறையே.

இந்தப் பதிகத்துக்கான விளக்கம்‬:
தன்னுடைய உறுதியான உடல் வலிமை கொண்டு கயிலை மலையைத் தன் மிகுதியான கரங்களால் பெயர்த்தெடுக்க முயன்ற கொடியவனான ராவணனின் உடலும், பெரிய தலைகள் பத்தும் நெரித்தவர் சிவபெருமான். அவருடைய நறுமணம் கமழும் மலர் போன்ற திருவடிகளை அடியவர்கள் தொழுது போற்ற அருள் செய்யும் நல்லியல்பு கொண்டவர். அவர் எழுந்தருளும் அற்புத நகரம் திருச்சேறை என்கிறார் ஞானசம்பந்தர்.


பன்றியர் பறவையர் பரிசுடை வடிவொடு படர்தர
அன்றிய அவர் அவர் அடியொடு முடியவை அறிகிலார்
நின்றிரு புடைபட நெடுவெரி நடுவே ஒர் நிகழ்தரச்
சென்றுயர் வெளிபட அருளிய அவர் நகர் சேறையே.

இந்தப் பதிகத்துக்கான விளக்கம்‬:
திருமால் பன்றி உருவெடுத்தார். பிரம்மன் அன்னப்பறவை உருவெடுத்தார். இறைவனைக் காணமுயன்றனர். அவ்விருவரும் தன் அடியையும், முடியையும் அறியாவண்ணம் அவர்கள் நடுவே நெடிய நெருப்புப் பிழம்பாய்த் தோன்றி, ஓங்கி, அருளிய சிவபெருமான் எழுந்தருளியுள்ள திருச்சேறை.

துகடுறு விரிதுகில் உடையவர் அமணெனும் வடிவினர்
விகடம் அது உறு சிறுமொழி அவை நலமில வினவிடல்
முகிழ்தரும் இளமதி அரவொடும் அழகுற முதுநதி
திகழ்தரு சடைமுடி அடிகள் தம் வளநகர் சேறையே.

இந்தப் பதிகத்துக்கான விளக்கம்‬:
அழுக்கு மிகுந்த ஆடையை உடுத்திக் கொள்வோரும் தோற்றத்தாலேயே இவர்கள் அமணர்கள் என்று கண்டு கொள்ளத்தக்க வடிவுடையவர்களும் குறும்புத்தனமாகக் கூறும் அற்ப மொழிகள் நன்மை தராது. எனவே அவற்றைக் கேட்காமல், அரும்பையொத்த இளம்பிறைச் சந்திரனையும், பாம்பையும், கங்கையையும் அழகுற அணிந்த சடைமுடியுடைய அடிகளான சிவனார் வீற்றிருக்கும் திருச்சேறை என்கிறார் ஞானசம்பந்தப் பெருமான்.

’’திருஞானசம்பந்தப் பெருமான், உருகி உருகிப் பாடியுள்ள இந்தப் பதிகங்களை மனமுருகப் பாடினால், இல்லறத்தின் பொருளாதாரப் பிரச்சினைகள் அனைத்தும் நிவர்த்தியாகும். உத்தியோகம் நிலைக்கப் பெறும். வழக்கின் மூலமாக வரவேண்டிய சொத்து இத்யாதிகள் வந்துசேரும்’’ என்கிறார் சுப்ரமணிய சாஸ்திரிகள்.


திருச்சேறை சிவனாரின் இந்தப் பதிகங்களை பூஜையறையில் அமர்ந்து, ஆத்மார்த்தமாகப் பாடி வந்தால், சிவனாருக்கு வில்வம் சார்த்தி வேண்டிக்கொண்டால், கடன் தொல்லைகள் அனைத்தும் தீரும். வீட்டின் தரித்திர நிலை விலகும். ஐஸ்வர்யம் குடிகொள்ளச் செய்வார் சார பரமேஸ்வரர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

16 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

மேலும்