சாந்தமனசுக்காரி... பட்டீஸ்வரம் துர்கை;  தீப வழிபாட்டில் ஓடோடி வருவாள்! 

By வி. ராம்ஜி

கும்பகோணத்தை கோயில் நகரம் என்பார்கள். கும்பகோணத்துக்கு அருகில் உள்ளது தாராசுரம். இதையடுத்து உள்ளது பட்டீஸ்வரம். சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த அற்புதத் திருத்தலம்.


காமதேனுவின் மகள் பசு பட்டி. உமையவள், சாப விமோசனம் பெறுவதற்காக, இங்கே தவமிருந்தாள். சிவபூஜை செய்தாள். பார்வதிதேவிக்கு உதவுவதற்காக பட்டியும் வந்து பணிவிடைகள் செய்தாள். பால் சுரந்து தந்தாள். மண்ணால் செய்யப்பட்ட சிவலிங்கத் திருமேனிக்கு பாலபிஷேகம் செய்து, பூஜித்து வந்தாள் பார்வதி. பட்டி வழிபட்ட தலம் என்பதால், இந்த ஊருக்கு பட்டீஸ்வரம் எனப்பெயர் அமைந்தது. காமதேனு உள்ளிட்ட பசுக்கள் வழிபட்டதால், சிவபெருமானுக்கு தேனுபுரீஸ்வரர் எனும் திருநாமம் அமைந்தது.


பிரமாண்டமான சிவாலயம் என்றாலும் இங்கே துர்கையின் ராஜ்ஜியம்தான். பொதுவாகவே, எல்லா சிவாலயங்களிலும் கோஷ்டத்தில்தான் தரிசனம் தருவாள் துர்கை. மகாவிஷ்ணு ஆலயங்களிலும் கோஷ்டத்தில்தான் இருப்பாள். அங்கே அவளுக்கு விஷ்ணு துர்கை என திருநாமம் உண்டு.


ஆனால் இங்கே, தனிச்சந்நிதியில், அற்புதமாகக் காட்சி தருகிறாள். நின்ற திருக்கோலத்தில் ஒய்யாரமாக அழகு ததும்பக் காட்சி தருகிறாள். மூன்று கண்களைக் கொண்டிருக்கிறாள் துர்கை. எட்டு திருக்கரங்களுடன், எருமை முகமுடைய மகிஷாசுரனைக் காலில் மிதித்தபடி காட்சி தருகிறாள். நிமிர்ந்த கோலம், நின்றகோலம்.
எட்டு திருக்கரங்களின் ஒன்றில் அபயஹஸ்தம் காட்டுகிறாள். மற்றொரு கரத்தை இடுப்பில் ஒயிலாக வைத்திருக்கிறாள். ஆறு கரங்களில் சங்கு, சக்கரம், வில், அம்பு, வாள், கேடயம் ஆகிய ஆயுதங்களைக் கொண்டிருக்கிறாள். ஆனால், சாந்தமாக காட்சி தருகிறாள். அவளின் இதழோரம் ததும்பும் புன்னகையே அவளை சாந்த சொரூபினி எனச் சொல்கிறது.


மிகுந்த வரப்பிரசாதி இந்த பட்டீஸ்வரம் துர்கை. ஆதித்த கரிகாலனுக்கு இஷ்ட தெய்வமாகவும் சோழர்களின் குலதெய்வமாகவும் திகழ்ந்தாள் என்றும் ஸ்தல வரலாறு விவரிக்கிறது. தேனுபுரீஸ்வரர் ஆலயம் எழுப்பப்பட்ட போது, துர்கைக்கு இப்படியான சந்நிதி இல்லை என்றும் சொல்வார்கள். பின்னர் அடுத்தடுத்து வந்த காலகட்டங்களில், துர்கையை இங்கே ஸ்தாபித்து, தனிக்கோயிலாகவே எழுப்பி வழிபடத் தொடங்கினார்கள்.


பட்டீஸ்வரமும் இதனைச் சுற்றியுள்ள பகுதிகளும் காய்ந்த பூமியாகிவிட்டதாம். மழை தப்பியதால் இந்த நிலையாம். எல்லோரும் வறுமையில் தவித்து மருகினார்கள். ஊரே கூடிப் பேசியது. பின்னர், பட்டீஸ்வரம் துர்கையின் சந்நிதிக்கு ஓடிவந்து, அவளிடம் முறையிட்டது. அன்றிரவே, நல்ல மழை பெய்தது. காடுகரையெல்லாம் நிறைந்தது. மக்கள் மகிழ்ந்துபோனார்கள். அன்று முதல், துர்கையின் சாந்நித்தியத்தை, சோழ தேசம் முழுவதும் தெரிந்து தரிசிக்க வந்தது. கேட்டதைத் தரும் அன்னை பட்டீஸ்வரம் துர்கை என்று இன்றைக்கும் கொண்டாடுகிறார்கள் பக்தர்கள்.


பட்டீஸ்வரம் துர்கைக்கு,தாமரை ரொம்பவே இஷ்டம். தாமரை மலர்கள் அல்லது அரளி மாலை கொண்டு துர்கைக்கு சார்த்துவது மிகச் சிறந்தது. வீட்டில் ஏதேனும் கவலை, பிரச்சினை, சிக்கல், குழப்பம் என்றிருந்தால், உடனே பட்டீஸ்வரம் துர்கையை மனதார நினைத்து தீபமேற்றினால் போதும். நெய் தீபம் அல்லது எலுமிச்சை தீபம் ஏற்றுங்கள். அந்த தீபத்தையே துர்கையாக நினைத்து வழிபடுங்கள். சர்க்கரைப் பொங்கல் அல்லது பால் பாயசம் நைவேத்தியம் செய்து பிரார்த்தனை செய்யுங்கள். குடும்பத்தில் உள்ள குழப்பங்கள் அனைத்தும் தீர்ந்துவிடும். பிரிந்த கணவனும் மனைவியும் ஒன்றுசேருவார்கள். இதுவரை இருந்த அமைதியற்ற சூழல் மாறி, அமைதியும் ஆனந்தமும் இல்லத்தில் குடிகொள்ளும். தனம், தானியம் பெருக்கித் தருவாள் துர்கை.


மகளுக்கோ மகனுக்கோ திருமணம் நடக்க வேண்டும் என்றோ வீடு வாசல் வாங்கவேண்டும் என்றோ குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் என்றோ...உங்கள் பிரார்த்தனை இருந்தால் வீட்டில், ராகுகாலவேளையில், செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ராகுகால வேளையில் தீபமேற்றுங்கள். மஞ்சள் துணியில் ஒருரூபாய் முடிந்து வைத்துக்கொள்ளுங்கள். அதை பூஜையறையில் வைத்து, தினமும் குங்கும அர்ச்சனை செய்து மனதார வேண்டிக்கொள்ளுங்கள். திருமணம் இனிதே நடந்தேறும். வீடு வாசல் வாங்கும் நிலை அமையும். குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறுவீர்கள்.


பின்னர், பட்டீஸ்வரம் செல்லும்போது, துர்கைக்கு அந்தக் காணிக்கையை, மஞ்சள் துணியை அப்படியே உண்டியலில் செலுத்திவிடுங்கள்.


சாந்த மனசுக்காரி துர்கையை வழிபடுங்கள்; சந்தோஷ வாழ்வைத் தந்திடுவாள் பட்டீஸ்வரம் நாயகி!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

19 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

மேலும்