ஏழரை சனி, அஷ்டமத்து சனி; தேய்பிறை அஷ்டமியில் பைரவ வழிபாடு!  குளிரக் குளிர தயிர்சாதம் அன்னதானம்! 

By வி. ராம்ஜி

அஷ்டமச் சனி, ஏழரைச் சனி இருப்பவர்கள், அஷ்டமியில் பைரவ தரிசனம் செய்து வேண்டிக்கொண்டால், சகல தோஷங்களும் விலகும். சனியின் கருணை கிடைப்பது நிச்சயம். எதிர்ப்புகளும் விலகும். எதிரிகளும் பலமிழப்பார்கள் என்கிறார்கள் ஆச்சார்யர்கள். இன்று 14.5.2020 தேய்பிறை அஷ்டமி.

சிவபெருமானின் அவதாரங்களில் ஸ்ரீபைரவர் அவதாரமும் ஒன்று. சனிபகவானுக்கே குரு, பைரவர் மூர்த்தி என்கிறது சிவபுராணம். பைரவர் அவதாரத்திலேயே 64 வகைகள் உண்டு என்கின்றன சிவஞான நூல்கள். மேலும் பைரவரின் திருவடிவில் பனிரெண்டு ராசிகளும் அடக்கம்.

பைரவரின் தலை மேஷ ராசி, வாய் ரிஷப ராசி, கைகள் மிதுன ராசி, மார்பு கடக ராசி, வயிற்றில் சிம்ம ராசி, இடையில் (இடுப்பு) கன்னி ராசி, புட்டத்தில் துலாம் ராசி, பிறப்பு உறுப்பில் விருச்சிக ராசி, தொடையில் தனுசு ராசி, முழங்காலில் மகர ராசி, காலில் கீழ்ப்பகுதி கும்ப ராசி, காலின் அடியில் (பாதப் பகுதி) மீன ராசி என அமைந்துள்ளன என்கிறது புராணம்.

அந்தகாசுரன் என்னும் அசுரன், தேவர்களையெல்லாம் துன்புறுத்தி இன்பம் கண்டான். தேவர்களை மட்டுமல்லாமல் முப்போதும் சிவ சிந்தனையிலேயே இருக்கிற முனிவர்களையும் அவன் விட்டு வைக்கவில்லை.

தேவர்களையும், எப்போதும் தன்னையே நினைத்திருக்கும் முனிவர்களையும் துன்புறுத்தும் அந்தகாசுரனை அழிக்க திருவுளம் கொண்ட சிவனார், தம்முடைய திருமுகங்களில் ஒன்றான தத்புருஷத்தில் இருந்து மகா பைரவ மூர்த்தியைத் தோற்றுவித்தார். அவரே அந்தகாசுரனை வதம் செய்து தேவர்களையும் முனிவர்களையும் காப்பாற்றினார் என்கிறது புராணம். மேலும் கர்வம் கொண்ட பிரம்மதேவரின் தலையைக் கொய்தவரும் பைரவர்தான் என்றும் புராணம் சொல்கிறது.


அஷ்டமி வழிபாடு, ஆபத்திலிருந்து காக்கும் என்பார்கள். அஷ்டமி வழிபாடு பைரவருக்கு இஷ்டமானது என்கிறது புராணம். அதிலும் தேய்பிறை அஷ்டமி என்பது மரண பயத்தை நீக்கும் மகோன்னதமான வழிபாடு. தேய்பிறை அஷ்டமி குருவாரமான வியாழக்கிழமையில் வந்தால் இன்னும் விசேஷம். அன்றைய தினம் பைரவரை வணங்கினால், வேண்டும் கேட்ட வரங்கள் அனைத்தும் கிடைக்கும்.

அகங்காரத்தை அழிக்கும் கடவுளாகவும், சுக்கிர தோஷத்தை நீக்குபவராகவும் பைரவர் திகழ்கிறார். அஷ்டமி நாளில் இவரை வணங்கினால் எண்ணியது நடக்கும். தடைகள் அனைத்தும் தவிடுபொடியாகும் என்பது உறுதி..

ஏழரைச் சனி, அஷ்டமச் சனி இவையனைத்தும் பைரவரை வணங்கினால் சகலமும் நன்மையாகவே முடியும். தாமரை, வில்வம், தும்பை, செவ்வந்தி, சந்தன மாலைகள் பைரவருக்கு விருப்பமானவை. இதில் ஏதேனும் ஒன்றை அவருக்கு அணிவித்து வேண்டிக்கொள்ளலாம்.

பரணி நட்சத்திரத்தில் பைரவர் அவதரித்தார். எனவே பரணி நட்சத்திரக்காரர்கள் இவரை வணங்கினால் மிகவும் நல்லது. பைரவருக்கு நள்ளிரவு பூஜையே உகந்தது எனப்படுகிறது. எனினும் உச்சி காலம் எனப்படும் நண்பகல் பூஜை சிறப்பானது. மேலும் ராகுகால வேளையில் பைரவ தரிசனம், பயத்தைப் போக்கும். எதிரியை அழிக்கும். கடனில் இருந்து மீள்வீர்கள். வீட்டிலிருந்தபடியே விளக்கேற்றி, பைரவாஷ்டகம் பாராயணம் செய்து வழிபடுங்கள். தயிர்சாதம் நைவேத்தியம் செய்து வழிபடுங்கள்.


அஷ்டமி நாளில் உச்சி வேளையில் பைரவருக்கு சிவப்பு ஆடை அணிவித்து, நெய் விளக்கு ஏற்றி, மாலை சூட்டி, சிவப்பு நிற மலர்களால் அர்ச்சித்து, வழிபட்டால் சகல தோஷங்களும் நீங்கி நல்ல வாழ்வு கிடைப்பது உறுதி.

எலுமிச்சை பழத்தை பைரவமூர்த்தியின் திருவடியில் வைத்து அர்ச்சித்து வீட்டுக்கு எடுத்து வந்தால், தீராத வியாதிகள் தீரும். வீட்டை சூழ்ந்திருக்கும் பீடைகள் ஒழியும். கெட்ட அதிர்வுகள் விலகும். துர்தேவதைகள் தெறித்து ஓடுவார்கள்.

மன அமைதியே இல்லாதவர்களுக்கு பைரவரே நல்ல துணை. செல்வவளம் பெருக சொர்ணாகர்ஷண பைரவரை வணங்கலாம். வீட்டிலிருந்தே பைரவரை மனதார வேண்டிக்கொள்ளுங்கள்.

தொடர்ந்து, எட்டு தேய்பிறை அஷ்டமி நாட்களில் பைரவ வழிபாடு செய்தால் வாழ்வில் எத்தனை பெரிய துக்கமோ கஷ்டமோ இருந்தாலும் அவை பனி போல் விலகிவிடும். மனோபலம் தந்து உயரச் செய்துவிடும் என்பது நம்பிக்கை!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

3 hours ago

ஆன்மிகம்

6 hours ago

ஆன்மிகம்

14 hours ago

ஆன்மிகம்

23 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

மேலும்