சித்ரா பெளர்ணமியன்று (7.5.2020 வியாழக்கிழமை) சித்ரகுப்தனை மனதார வழிபடுங்கள். அவரை வேண்டிக்கொண்டு தான தருமங்கள் செய்தால், சித்ரகுப்தனின் அருள் கிடைக்கப்பெறலாம். எம பயம் விலகி நீண்ட ஆயுளுடன் வாழலாம் என்பது ஐதீகம்!
திருக்கயிலாயத்தில், பார்வதிதேவி, தோழியருடன் இருந்தாள். அப்போது பொற்பலகையில் சித்திரம் ஒன்றை வரைந்தாள். மிகவும் அழகாக இருந்த சித்திரம் உயிர் பெற்றால் எப்படியிருக்கும் என்று ஆவலுடன் பேசிக்கொண்டார்கள். அதன்படி பார்வதிதேவி தான் வரைந்த ஓவியத்துக்கு உயிர் கொடுத்தாள்.
அந்தச் சித்திரத்தில் இருந்து வெளிப்பட்டான் ஒருவன். அதனால்தான் அவனுக்கு சித்ரகுப்தன் எனப் பெயர் சூட்டினாள் தேவி. பின்னர், பரம்பொருளான சிவபெருமானிடம் சித்ரகுப்தனை அழைத்துச் சென்றவள், நடந்தவற்றையெல்லாம் விளக்கிச் சொன்னாள். சித்ரகுப்தனுக்கு ஏதாவது ஒரு பொறுப்பைக் கொடுத்து வாழ்த்தி அருள வேண்டும் என வேண்டினாள். சிவனாரும் அவ்வாறே அருளினார். இப்படி சித்ரகுப்தன் தோன்றிய நாள் சித்ரா பௌர்ணமி எனப் போற்றுகிறது புராணம்.
அதேசமயம் யமதருமராஜன், ‘தனியொரு நபராக கோடானுகோடி மக்களின் பாவ, புண்ணிய கணக்குகளை பராமரித்து மேற்கொள்ளும் பணி கஷ்டமாக இருக்கிறது. எனக்கு உதவிக்கு ஒரு ஆள் இருந்தால் நன்றாக இருக்கும்’ என்று இந்திரனிடம் முறையிட்டான். இருவரும் இறைவனிடம் வந்தனர். சிவனாரும் அவர்களின் கோரிக்கையை ஏற்றார். சித்ரகுப்தனை காமதேனுவின் வயிற்றில் பிறக்கச் செய்தருளினார். காமதேனுவின் வயிற்றில் பிறந்த சித்ர குப்தனை இந்திராணி வளர்த்து ஆளாக்கினாள்.
இளமையில் சித்ரகுப்தர் காஞ்சியம்பதியில், சிவபெருமானை நோக்கி கடும் தவம் புரிந்தார். அப்போது சிவனார் தோன்றி, ஏடும் எழுத்தாணியும் வழங்கி, சித்ரகுப்தனை யமனின் உதவியாளனாக நியமித்தார். உயிர்களின் பாவ புண்ணிய கணக்குகளை எழுதிப் பராமரிக்கும் பொறுப்பை ஒப்படைத்தார். தக்க பருவம் அடைந்த சித்ரகுப்தனுக்கு மயனின் மகள்களான - நீலாவதி, கர்ணவதி ஆகிய இருவரையும் மணமுடித்து வைத்தார். சித்ரகுப்தனின் பொறுப்புகளை விளக்கி எமதர்மனுக்கு உதவி புரிய அனுப்பி வைத்தார்.
தன் மனைவியருடன் யமபுரிக்குப் புறப்பட்ட சித்ரகுப்தர், அங்கே அமர்ந்து உலகத்து மக்களின் பாவ, புண்ணிய கணக்குகளை எந்தத் தவறும் வராதபடி இன்றுவரை கணக்கெடுத்து எழுதிக் கொண்டிருக்கிறார் என்பதாக விவரிக்கிறது புராணம். நாம் இறந்ததும் சொர்க்கத்துக்குப் போவோமா நரகத்தில் உழல்வோமா என்பதை நம் பாவ புண்ணியங்களைக் கொண்டு எழுதும் சித்ரகுப்தனின் கையில்தான் எல்லாமே இருக்கிறது என்கின்றன தர்மசாஸ்திர நூல்கள்.
முன்பெல்லாம், சித்ரா பெளர்ணமி நாளன்று, இரவில் சித்ரகுப்த நாயனாரின் சரிதத்தைக் கேட்பது வழக்கம். கதையை நிறைவு செய்யும்போது, கொழுக்கட்டை, சர்க்கரைப் பொங்கல், பாயசம், பணியாரம் முதலானவற்றை நைவேத்தியமாகப் படைப்பார்கள். பின்னர் எல்லோருக்கும் வழங்குவார்கள்.
சித்ரா பௌர்ணமியன்று சித்ரகுப்தனை நினைத்து - பசும்பால், தயிர், நெய் இவற்றை விலக்கி விரதம் இருந்து வழிபட்டால் பாவங்கள் தொலையும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.
காலையில் விரதத்தை ஆரம்பிக்கவேண்டும். மாலையில் நிலவு உதயமானதும் சித்ர குப்தனுக்குப் பூஜைகள் செய்ய வேண்டும். மாக்கோலம் இட்டு ஏடு எழுத்தாணி வைத்து விளக்கேற்றுங்கள். பூஜை செய்து சர்க்கரைப் பொங்கலிட்டு பயத்தம்பருப்பும், எருமைப் பாலும் கலந்த பாயசத்தை நைவேத்தியம் செய்து வழிபடலாம்.
சித்ரகுப்தனுக்கு காஞ்சிபுரத்தில் தனிக்கோயிலே அமைந்திருக்கிறது. முடிந்தால், காஞ்சிபுரத்தில் மட்டுமே உள்ள சித்ரகுப்தனுக்கு உரிய ஆலயத்துக்குச் சென்று வழிபடலாம்!
ஏழைகளுக்கு முடிந்த அளவிற்கு தானம் செய்யுங்கள். அன்னதானம் செய்வது பாவங்களையெல்லாம் போக்கிவிடும். ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவலாம். பேனா முதலான பொருட்களை கொடுக்கலாம்.
சித்ரா பௌர்ணமி அன்று அன்னதானம் செய்வதுதான் நம் பாவங்களையெல்லாம் போக்குவதற்கான முதல்வழி. உப்பு சேர்க்காமல் உணவு உண்டு விரதமிருந்தால் சித்ரகுப்தன் மகிழ்ந்து, நம் பாவ புண்ணிய கணக்கை எழுதும்போது புண்ணியத்தை அதிகப்படுத்தியும் பாவத்தைக் குறைத்தும் எழுதுவார். இதனால் மரணத்திற்குப் பின் நாம் நரக வேதனையிலிருந்து விலகி சொர்க்கத்தில் வாழலாம் என்கின்றன சாஸ்திரங்கள்.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
13 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
10 days ago
ஆன்மிகம்
11 days ago
ஆன்மிகம்
12 days ago