ஆண்டாள் பிறந்த கதை அபூர்வமானது. அர்ஜூனனுக்கு பகவத் கீதையை கூறிய கிருஷ்ண பகவான், வைகுந்தம் சென்றுவிடுகிறார். ஆனால் தான் சொன்ன பாடம் அர்ஜூனன் உட்பட பலருக்கும் புரியவில்லையே என்று நினைத்தார். அப்பா அறிவுரையைக் கேட்காத குழந்தைகளும் அம்மா தாஜா செய்தால் கேட்டுக் கொள்வார்கள். அது போல தனது பகவத் கீதையை இவ்வுலக மக்களான பெருமாளின் குழந்தைகள் ஏற்றுக் கொள்ளச் செய்ய வேண்டும் என்று விரும்பிய பகவான், மஹாலஷ்மி தாயாரிடம் “நீ சென்று குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடேன்” என்று கூறுகிறார். “நீங்கள் அவதாரம் எடுத்தபொழுதெல்லாம் உங்களுடன் பிறவி எடுத்து எடுத்து இளைத்தேன். என்னால் ஆகாது” என்று கூறிவிடுகிறாராம் மஹாலஷ்மித் தாயார். “அப்போது நான் சென்று குழந்தைகளை கரை சேர்க்கிறேன்” என்று பூமித் தாயார் வைகுண்டத்தில் இருந்து பூலோகத்திற்கு வந்து பிறந்து கோதை என்ற நாமகரணம் பெற்றாள் என்பர் ஆன்மீக சொற்பொழிவாளர்கள்.
விஷ்ணு சித்தர் என்பவர் ஸ்ரீவில்லிப்புத்தூரில், ஒரு மலர் தோட்டம் அமைத்து இருந்தார். அத்தோட்டத்தில் செண்பகம், வகுளம், மல்லிகை, முல்லை ஆகிய மலர் செடி, கொடிகளுடன் துளசிச் செடியையும் வளர்த்து வந்தார். இவற்றைக் கொண்டு பின்னல், கண்ணி, கோவை ஆகிய அழகிய வடிவங்களில் மாலை கட்டி அவ்வூரில் உள்ள வடபத்திரசாயிக்கு மாலை அணிவித்து வந்தார். ஒரு நாள் அத்தோட்டத்தில் நன்கு வளர்ந்து இருந்த துளசிச் செடியின் அடியில் பெண் குழந்தை ஒன்றைக் கண்டெடுத்தார். அக்குழந்தைக்கு கோதை என நாம கரணம் சூட்டினார் விஷ்ணு சித்தர். அக்குழந்தைக்கு தானே தந்தையுமானார்.
கண்ணனின் அவதாரக் கதைகளைக் கேட்டுக் கேட்டே வளர்ந்த கோதையோ, கண்ணன்பால் ஈர்ப்புக் கொண்டாள். கண்ணனையே கணவனாக வரித்தும் கொண்டாள். பிஞ்சில் பழுத்தாளைச் சொல்லு என்றபடிக்கு அவள் பிஞ்சு மனம் கண்ணன்பால் சென்றது. அவனையே மணாளனாக வரித்த பின் அவனுக்கு தான் ஈடாக இருக்கிறோமா என்பதை அறிய, வடபத்திரசாயிக்கு மாலை போடும் முன் தான் போட்டு அழகு பார்ப்பாளாம் கோதை. இதனை ஒரு நாள் கையும் களவுமாகப் பிடித்துவிடுகிறார் விஷ்ணு சித்தர். அன்பு மகளிடம் என்றும் இல்லாத திருநாளாகக் கோபித்துக் கொண்டு விடுகிறார் விஷ்ணு சித்தர்.
மலர்களை எல்லாம் பறித்து ஒரே மாலையாகக் கட்டிவிட்டதால், புது மாலை கட்டி விடலாம் என்று பார்த்தால் இன்று தோட்டத்தில் எஞ்சிய மலர்களும் மாலை கட்டப் போதாது. கோதை போட்டுக் கழித்த மாலையையும் பெருமாளுக்குப் போட முடியாதே.
இவ்வாறு எண்ணியபடி இரவில் வெதும்பிய மனதுடனேயே தூங்கிவிட்டார் விஷ்ணு சித்தர். அவரது கனவில் தோன்றிய பெருமாள், ஒன்றும் அறியாதது போல, வழக்கமாகத் தனக்கு அணிவிக்கும் மாலை எங்கே எனக் கேட்கிறார். விஷ்ணு சித்தரோ நடந்த கதையைக் கூறி, நிர்மால்யமான மாலையை அணிவிக்க தன் மனம் ஒப்பவில்லை என்று பதிலளித்தார். அதற்கு கனவில் வந்த பெருமாள், பல நாட்களாக இப்படித்தான் நடக்கிறது. ஆண்டாள் சூடிக் களைந்த மாலையின் நறுமணமே தனக்கு மிகவும் விருப்பமானது என்கிறார்.
அதன் பிறகு ஆண்டவனின் மனதையே கவர்ந்து ஆண்டுவிட்டதால், கோதை ஆண்டாள் என அழைக்கப்பட்டாள். இது இப்படியே தொடர, தன் பெண்ணுக்கு மணம் முடிக்கும் காலமும் வந்துவிட்டது என அறிந்த விஷ்ணு சித்தர், இதனை ஆண்டாளிடம் தெரிவிக்கிறார். அவளோ கண்ணாளனாகக் கண்ணனைத் தேர்ந்தெடுத்துவிட்டதால், “மானிடர்க்கென்று வாழ்க்கைப்பட்டால் உயிர் வாழமாட்டேன்” என்று கூறிவிடுகிறாள். வளர்ப்புத் தந்தையோ என்ன செய்வார்? அவள் மனக் கண் முன் 108 திவ்ய தேசப் பெருமாளையும் கொண்டு வந்து நிறுத்தி சுயம்வரம் நடத்துகிறார். அவர்களில் ஆண்டாள் தேர்ந்தெடுத்தது ஸ்ரீரங்கத்து திருவரங்கனையே.
திருவரங்கனும் ஒப்புதல் அளித்து நாள் குறிக்க, ஒரு சிறந்த பல்லக்கில் ஆண்டாளை ஏற்றி மேளதாளத்துடன் திருவரங்கம் அழைத்துச் சென்றார் விஷ்ணு சித்தர். அங்கே அரங்கன் அனந்த சயனத்தில் ஆதிசேஷன் மேல் கிடந்த வண்ணத்தில் காட்சி அளித்தார். ஆதிசேஷனின் உடல் படி போல் சுற்றிச் சுற்றிக் கிடந்ததால், அதில் தன் பிஞ்சுப் பாதங்களை பதித்து ஏறிய ஆண்டாள் பெருமாளுடன் ஒன்றெனக் கலந்தாள் என்கிறது புராணம்.
வைகுண்ட வாசனுடனே இருந்திருக்கலாமே - எதற்காக வந்தாள்? எதற்காகக் கலந்தாள்? இடைப்பட்ட காலத்தில் அவள் செய்து வைத்த பாடல்கள் திருப்பாவை என்ற 30 பாடல்கள் கொண்ட தொகுப்பும், பக்தி மேலீட்டால் ஏற்ப்படும் பரவசத்தைக் கொட்டும் 143 பாடல்களைக் கொண்ட நாச்சியார் திருமொழியும்தான். என்னையே சரணடை என்று பகவத் கீதையில் கண்ணன் சொன்னான். அதனை வலியுறுத்தும் வகையில் ` பறை தருவான்’ என்று அறுதியிட்டு கூறியே தனது படைப்புகளைத் தொடங்குகிறாள்.
அவளது பாடல்கள் தெய்வீகத்தன்மை கொண்டவை என நம்பப்படுவதால், மழை வேண்டி பாடப்படும் ஆழிமழைக் கண்ணா என்ற திருப்பாவைப் பாடல் இன்றும் பள்ளிகளில் மாணவர்களால் கோடைக் காலங்களில் பாடப்படுகிறது. தெலுங்கினைத் தாய்மொழியாகக் கொண்ட மக்கள் வாழும் ஆந்திரத் திருமலையில் திருக்கல்யாண உற்சவத்தின்பொழுது, ஆண்டாளின் வாரணமாயிரம் என்ற தமிழ் பாசுரம் பாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
11 hours ago
ஆன்மிகம்
17 hours ago
ஆன்மிகம்
21 hours ago
ஆன்மிகம்
23 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago