கணவர் நீண்ட ஆயுளுடன் வாழவேண்டும் என்று வேண்டிக்கொள்ளும் நன்னாள்... காரடையான் நோன்பு விரத நாள். நாளைய தினம் 14.3.2020 சனிக்கிழமை காரடையான் நோன்பு. இந்தநாளில், விரதம் மேற்கொண்டு பிரார்த்தனை செய்தால், கணவரின் ஆயுள் பெருகும். ஆரோக்கியம் சீராகும். கன்னிப்பெண்களுக்கு, நினைத்தபடியான நல்ல வாழ்க்கைத்துணை அமையும்.
‘காரடையான் நோன்பு’ குறித்து புராணம் சொல்லும் சரிதம் இது.
அசுபதி என்ற மன்னனுக்குத் திருமணம் ஆகி பல ஆண்டுகள் ஆன பின்னும், பிள்ளைப் பேறு ஏற்படவில்லை. யாகங்கள், விரதங்கள், பூஜைகள் செய்த பின், அவனுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. சாவித்திரி என்று பெயர் சூட்டினார்கள்.
அவளது திருமண எதிர்காலம் குறித்து மன்னன் அறிய விரும்பினான். அந்த நேரத்தில் அங்கு வந்த நாரதர், தாய், தந்தையரே தெய்வம் எனப் போற்றும் குணம் கொண்ட சத்தியவான் என்பவனை அவள் மணப்பாள் என்று சொன்னார். ஆனால் குறைந்த அவன் ஆயுளைக் கொண்டவன் என்பதையும் சொன்னார்.
விதியை எதிர்கொள்ளும் துணிவுடன் சாவித்திரியும் அவள் பெற்றோரும் இருந்தனர். அசுபதி மன்னனின் மகள் சாவித்திரிக்கும், சத்தியவானுக்கும் திருமணம் சிறப்பாக நிகழ்ந்தேறியது. பின்னர் கணவனுடன் வாழ சாவித்திரி அவன் வசிக்கும் நாட்டிற்குச் சென்றாள். கண் பார்வை அற்ற கணவனின் தாய், தந்தையரைப் பேணிக் காத்தாள். இந்நிலையில், அந்நாட்டு மன்னன் சத்தியவானை நாடு கடத்திவிட்டான்.
சத்தியவான் தாய், தந்தை மற்றும் மனைவி சாவித்திரியுடன் காட்டில் குடிசை அமைத்து வாழ்ந்துவந்தான். காட்டில் மரம் வெட்டி, நாட்டிற்குள் சென்று விற்றுப் பிழைப்பு நடத்திவந்தான். சாவித்திரிக்கு மட்டுமே அவனது வாழ்நாளின் இறுதி நாள் தெரியும்.
» பங்குனி மாத தர்ப்பணம் மறக்காதீங்க!
» கணவரின் ஆயுள் காக்கும் ‘காரடையான் நோன்பு’! - விரதமுறைகள் இப்படித்தான்!
அதனால் அன்றைய தினம் அவன், மரம் வெட்டக் கிளம்பும்பொழுது தானும் கூடவே வர விரும்புவதாகக் கூறினாள். பார்வை இழந்த தனது மாமியார், மாமனாருக்கு மதிய உணவு தயாரித்து வைத்துவிட்டுக் கணவனுடன் கிளம்பிச் சென்றாள்.
காட்டில் நல்ல முதிர்ந்த மரத்தைத் தேர்ந்தெடுத்த சத்தியவான் அதனை வெட்டத் தொடங்கினான். அருகே இறை தியானத்தில் இருந்தாள் சாவித்திரி. மதிய வேளை வந்தது. உணவு உண்ட சத்தியவான், சாவித்திரி மடியில் தலை வைத்துப் படுத்தான். அப்படியே தூங்கியவன் ஒரேயடியாகக் கண் மூடிவிட்டான். சாவித்திரியின் கண்களுக்கு யம தர்மன், சத்தியவானின் உயிரைக் கொண்டுசெல்வது தெரிந்தது.
மடியில் தலை வைத்து இருந்த சத்தியவானின் தலையை இறக்கித் தரையில் வைத்துவிட்டு, கண்ணில் தெரிந்த யமனின் பின் சென்றாள் சாவித்திரி. பின் தொடரும் காலடிச் சத்தம் கேட்ட யமன் திரும்பிப் பார்த்தான். சாவித்திரி கை கூப்பிய வண்ணம் இருந்தாள்.
பத்தினிப் பெண்களால் மட்டுமே தன்னைக் காண முடியும் என்பதால், என்னைக் காணும் வல்லமை பெற்ற நீ தீர்க்க சுமங்கலியாக வாழ்க என வாழ்த்திவிட்டான் யமதர்மன். கணவன் உயிர் மீள இந்த வரம் ஒன்றே போதும். ஆனாலும் தனது மாமியார், மாமனாருக்கு பார்வை திரும்ப வேண்டும் என்றும், தனக்கும் சத்தியவானுக்கும் நூறு பிள்ளைகள் பிறக்க வேண்டும் என்றும் வரம் பெற்றாள் சாவித்திரி.
கண் அயர்ந்தவன் போல், விழித்தெழுந்தான் சத்தியவான். இருவரும் வீட்டிற்குத் திரும்பிய தருணத்தில், இருட்டத் தொடங்கியது. அன்றைய தினம் மாசி மாதத்தின் கடைசி நாள். பங்குனி மாதமும் பிறக்கத் தொடங்கியிருந்தது. இரு மாதமும் கூடும் நேரம் அது. சாவித்திரியின் மாமியார், மாமனாருக்குக் கண் பார்வை மீண்டிருந்தது. யம தர்மனுக்கு ஆத்மார்த்தமாக நன்றி தெரிவித்த சாவித்திரி, இறைவனுக்கு நைவேத்தியம் செய்ய நினைத்தாள்.
இல்லத்தில் இருந்த கார் அரிசியையும், காராமணியையும் கொண்டு இனிப்பு அடையும் உப்பு அடையும் செய்தாள். கடைந்த வெண்ணெயை உருகாமல் இருந்தது. தூய்மையான நுனி வாழை இலையில் அதனை வைத்து, ஓரடைய நோன்பும், உருக்காத வெண்ணெயும், படைக்கிறேன் ஒருக்காலும் என் கணவன் என்னைப் பிரியாமல் இருக்க வேண்டும் என்று வேண்டினாள். நைவேத்யம் செய்தாள். பிரசாதத்தை அனைவருக்கும் வழங்கினாள்.
சாவித்திரியின் இந்த நோன்பை இன்றும் பெண்கள் கடைபிடித்துவருகின்றனர். அதுவே காரடையான் நோன்பு.
நோன்பு நாளில், காலையில் தலைக்குக் குளித்து பூஜையறையில் அமர்ந்து, தெரிந்த ஸ்லோகங்களைச் சொல்லுங்கள். மெல்லிய நோன்புக் கயிற்றில் ஒரு சில பூக்களைக்கட்டித் தயார் செய்துகொள்ளுங்கள். இல்லத்தில் உள்ள சிறுமியர் முதல் வயதான முதிர்ந்த பெண்கள் வரை அனைவருக்கும் ஒவ்வொன்று வீதமும், இல்லத்தில் உள்ள அம்பாள் மற்றும் தாயார் படங்களுக்கு ஒவ்வொன்று என எடுத்துக்கொள்ளுங்கள்.
தரையில் கோலமிடுங்கள். பூஜையறையில் விளக்கேற்றுங்கள். அதன் மீது நுனி வாழை இலை வைத்து, இரண்டு அடையும், உருக்காத வெண்ணையும் வைக்க வேண்டும். இலையில், வெற்றிலை, பாக்கு, இரண்டு வாழைப்பழம் வைக்க வேண்டும். அதன் மீதே நோன்புக் கயிற்றையும், புது தாலிச் சரடையும் வைக்க வேண்டும். அதன் முன் அமர்ந்து, இலையைச் சுற்றி நீர் தெளித்து நைவேத்தியம் செய்து பிரார்த்தனை செய்யுங்கள். பிறகு தாலிச்சரடையும் நோன்புச் சரடையும் கழுத்தில் கட்டிக்கொள்ளுங்கள்.
உங்கள் கணவர் ஆரோக்கியத்துடனும் ஆயுளுடனும் வாழ்வார். கன்னிப்பெண்களுக்கு நல்ல கணவன் அமைவார். இனிய குடும்பமாக உங்கள் குடும்பம் மாறும்!
நாளை 14.3.2020 காரடையான் நோன்பு... மறக்காதீர்கள்!
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
20 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago