திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா: 2668 அடி உயர அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது

By ஆர்.தினேஷ் குமார்

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி 2668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில் இன்று மாலை மகா தீபம் ஏற்றப்பட்டது.

நினைக்க முக்தி தரும் தலமாக வீற்றிருக்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் கார்த்திகைத் தீபத் திருவிழா கடந்த மாதம் 28-ம் தேதி தொடங்கியது. பின்னர், கோயில் உள்ள தங்கக் கொடி மரத்தில் கடந்த 1-ம் தேதி கொடியேற்றம் நடைபெற்றதும், 10 நாள் உற்சவம் ஆரம்பமானது. 63 நாயன்மார்கள், வெள்ளித் தேரோட்டம், மகா தேரோட்டம் மற்றும் பல்வேறு வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் மாட வீதியுலா வந்தனர்.

கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான 10 நாள் உற்சவத்தில் பரணி தீபம் மற்றும் மகா தீபம் இன்று (டிச.10) ஏற்றப்பட்டது. 'ஏகன் அநேகன்' தத்துவத்தை உணர்த்தும் வகையில் அண்ணாமலையார் கோயில் மூலவர் சன்னதி முன்பு அதிகாலை 4 மணியளவில் மகா தீபம் ஏற்றப்பட்டது. பின்னர், பிரம்மத்தீர்த்தக் குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.

இதையடுத்து, சிறப்பு அலங்காரத்துடன் பஞ்சமூர்த்திகள் ஒவ்வொருவராக தீப தரிசன மண்டபத்தில் மாலை 5.30 மணிக்கு எழுந்தருளினர். பின்னர், 'ஆணும் பெணும் சமம்' என்ற தத்துவத்தை உலகுக்கு எடுத்துரைக்கும் வகையில், அர்த்தநாரீஸ்வரர் காட்சிக் கொடுத்தார். பார்வதி தேவிக்கு இடபாகம் வழங்கி அர்த்தநாரீஸ்வரராக காட்சிக் கொடுக்கும் நிகழ்வு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும். அதன் பிறகு, தங்கக் கொடி மரம் முன்பு உள்ள அகண்டத்தில் தீபம் ஏற்றப்பட்டது.

இதைத் தொடர்ந்து 2668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. அப்போது அண்ணாமலையாருக்கு 'அரோகரா' என்ற பக்தர்களின் பக்தி முழக்கம் விண்ணை முட்டியது.

அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டதும், ஜோதி வடிவமாக அண்ணாமலையாரே காட்சிக் கொடுப்பதால், கோயில் கருவறை மூடப்பட்டது. மகா தீபம் ஏற்றப்பட்டதும், கோபுரங்கள் உட்பட கோயில் முழுவதும் மின் விளக்குகளில் ஜோதிலித்தது. கோயில் மற்றும் வீடுகளில் அகல் விளக்கு ஏற்றி பக்தர்கள் வழிபாடு செய்தனர். பட்டாசுகள் வெடிக்கப்பட்டது. மகா தீப தரிசனத்தை 11 நாட்களுக்கு தொடர்ந்து காணலாம்.

கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி இன்று அதிகாலை 2 மணியில் இருந்து பக்தர்கள் கிரிவலம் செல்ல தொடங்கினர். 14 கி.மீ. தொலைவு அண்ணாமலையை, 'நம சிவாய' என்ற உச்சரிப்புடன் பக்தர்கள் கிரிவலம் சென்றனர். மகா தீபம் ஏற்றிய பிறகு, கிரிவலம் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை 'கிடுகிடு'வென அதிகரித்தது.

கிரிவல பாதையில் உள்ள ஆதி அண்ணாமலையார் கோயில், அஷ்ட லிங்க கோயில், துர்க்கை அம்மன் கோயில்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் கார்த்திருந்து தரிசனம் செய்தனர். 22 லட்சம் பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள் என காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர். நாளை (11-ம் தேதி) பவுர்ணமி என்பதால், பக்தர்களின் கிரிவலம் 2-வது நாளாக தொடரும்.

அண்ணாமலையார் கிரிவலம்

மகா தீபத்தைத் தொடர்ந்து ஐயங்குளத்தில் மூன்று நாள் தெப்பல் உற்சவம் நாளை இரவு தொடங்குகிறது. முதல் நாள் இரவு சந்திரசேகரர், நாளை இரவு பராசக்தி அம்மன், நாளை மறு தினம் இரவு முருகர் ஆகியோரது தெப்பல் உற்சவம் நடைபெற உள்ளது. இதற்கிடையில், பக்தர்களை போன்று உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார், வரும் 12-ம் தேதி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கிரிவலம் செல்ல உள்ளார். அவரை வழியெங்கும் கற்பூர தீபாராதனை காண்பித்து பக்தர்கள் வழிபடுவர். இதையடுத்து, வெள்ளி ரிஷப வாகனத்தில் வரும் 14-ம் தேதி இரவு நடைபெறும் சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் 17 நாள் கார்த்திகைத் தீபத் திருவிழா நிறைவு பெறுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

4 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

8 days ago

மேலும்