ஆன்மிக வாசிப்பு: தத்துவங்களின் சாரம்

By அரவிந்தன்

இந்தியத் தத்துவம் என்று சொல்வதே சரியல்ல. இந்தியத் தத்துவங்கள் என்றுதான் சொல்ல வேண்டும். கிட்டத்தட்ட நேர் எதிரான கருத்து நிலைகள், பார்வைகள், அணுகுமுறைகள் கொண்ட பல்வேறு தத்துவங்கள் இந்தியாவில் தோன்றியிருக்கின்றன. கடவுளைக் காண விழையும் தத்துவங்களுக்கு மத்தியில் கடவுளே இல்லை என்று சொல்லும் தத்துவங்களும் உண்டு.

கடவுளை ஏற்பவர்கள், ஏற்காதவர்கள் ஆகிய தரப்பினருக்குள்ளே இருக்கும் முரண்கள் எண்ணற்றவை. இத்தகைய சிக்கலான ஒரு துறை குறித்த அறிமுகத்தை ஒரே நூலில் அடக்கும் சாகசத்தை காலம் சென்ற எழுத்தாளர் ர.சு. நல்லபெருமாள் நேர்த்தியாகச் செய்திருக்கிறார். அவரது ‘பிரும்ம ரகசியம்’ என்னும் நூல் படைப்பின் விளக்கத்தைப் பல்வேறு தத்துவங்களின் வெளிச்சத்தில் கூற முயல்கிறது.

தத்துவம் என்று சொன்னதும் அடுக்கடுக்காக வரும் கொட்டாவிகளுக்கு நல்லபெருமாளின் நூலில் வேலையே இருக்காது. எளிமையாகவும் சுவையாகவும் எழுதிச் செல்கிறார் ஆசிரியர். நசிகேதன் என்னும் சிறுவன் யமதர்மனிடம் ஆன்மாவின் ரகசியத்தைப் பற்றிக் கேள்வி கேட்டதாக கடோபநிஷதத்தில் வருகிறது.

அந்த நசிகேதனை ஒவ்வொரு தத்துவத்திற்கும் முக்கியமான ஒரு அறிஞரைச் சந்தித்துப் பேசவைக்கிறார் நல்லபெருமாள். கார்க்கி, சார்வாகர், பதஞ்சலி, ஆதிசங்கரர் முதலான தத்துவ ஞானிகளிடம் நசிகேதன் கேள்விகள் கேட்டு விளக்கம் பெறும் வகையில் இந்த நூலை அமைத்திருக்கிறார். ஆன்மா, படைப்பு, பிரும்மம் எனத் தத்துவ விளக்கங்கள் எல்லாமே எளிமையான கேள்வி பதில் வடிவில் அமைந்திருக்கின்றன. ஒரு உதாரணம் பாருங்கள்:

நசிகேதன்: வாழ்க்கை முறையை வகுப்பதுதான் உபநிஷதமா?

கார்க்கி: அது மட்டுமல்ல. உண்மை எது என்பதையும் உபநிஷதம் ஆராய்கிறது.

நசிகேதன்: எதைப் பற்றிய உண்மையை?

கார்க்கி: நான் யார்? மூலப் பரம்பொருள் எது? என்பவற்றைப் பற்றிய உண்மைகளை.

நசிகேதன்: என்னில், நான் என்பது எது?

கார்க்கி: ஆன்மா!

நசிகேதன்: மூலப் பரம்பொருள் எது?

கார்க்கி: பிரும்மம்!

இப்படிப் போகிறது உரையாடல். சில இடங்களில் சற்றே நீண்ட விளக்கங்கள், குறுக்குக் கேள்விகள், மறு விளக்கங்கள் என இந்த உரையாடல் விறுவிறுவென்று நிகழ்கிறது. சாங்கியம், யோகம், நியாயம், வைசேஷிகம், மீமாம்சை, பவுத்தம், சமணம், சைவ சித்தாந்தம், சார்வாகம், அத்வைதம், துவைதம், விசிஷ்டாத்வைதம் என ஒவ்வொரு தத்துவத்தைச் சேர்ந்த ஞானியும் படைப்பை, படைப்பின் மூலத்தைத் தனது பார்வையில் விளக்குகிறார்.

அறிவின் எல்லைகள் விரியும்

இந்த உலகையும் பிரபஞ்சத்தையும் இவற்றின் ஆதாரமான அம்சங்களையும் ஆராய்வதற்கான கருவிகளைப் பிரமாணங்கள் என்று சொல்வார்கள். பிரத்யட்சம் (கண்ணால் / புலன்களால் அறிவது), யூகம் (தர்க்க ரீதியாக யூகித்தல்), அனுபவ வாக்கு (ஏற்கனவே அறிந்தவர்களின் வாக்கு) முதலான சில வழிமுறைகளை அடிப்படையாகக் கொண்டு தத்துவவாதிகள் தங்கள் தேடல்களை மேற்கொள்கிறார்கள்.

இந்த உலகை அறிய பார்த்தல், கேட்டல், நுகரல் என்று புலனறிவு அடிப்படையாக இருக்கிறது. புகை இருந்தால் நெருப்பு இருக்கும் என்பது போன்ற யூகமும் பயன்படுகிறது. பள்ளத்தாக்குச் சென்று வந்த ஒருவர், அல்லது காண்டாமிருகத்தைப் பார்த்த ஒருவர் சொல்லும் செய்தி அனுபவ வாக்காக நமது அறிவின் எல்லைகளை விரிவுபடுத்துகிறது.

இப்படிப்பட்ட கருவிகளை பிரமாணங்கள் என்பார்கள். கிட்டத்தட்ட எல்லாத் தத்துவங்களுமே இந்தப் பிரமாணங்களை ஏற்கின்றன. இந்தப் பிரமாணங்களை நல்லபெருமாள் விளக்குகிகிறார். சில பிரமாணங்களைத் தத்துவவாதிகளின் வாயிலாகவே புரியவைக்கிறார். ஒவ்வொரு விஷயம் பற்றியும் எளிய உரையாடல்கள் மூலம் விரித்துக்கொண்டே போகிறார் நல்லபெருமாள். தத்துவங்களுக்கு எதிரான விமர்சனங்களை முன்வைத்து அவற்றின் போதாமைகளைக் கோடிகாட்டுகிறான் நசிகேதன். தத்துவ ஞானிகள் யாரையும் சிறுமைப்படுத்தாமல் இந்தக் காரியத்தை நாசுக்காக நசிகேதன் மூலம் செய்கிறார் ஆசிரியர்.

பதஞ்சலி, ஆதிசங்கரர் ஆகியோரிடம் மிகுந்த மரியாதையுடன் கேள்விகள் கேட்கும் நசிகேதன் நாத்திகம் பேசும் சார்வாகரிடம் சற்றே அலட்சியமாகக் கேட்கிறான். சார்வாகத் தத்துவத்தின் போதாமைகளைச் சொல்லிவிட வேண்டும் என்னும் ஆசிரியரின் துடிப்பே இதில் அதிகம் தெரிகிறது. இதே அணுகுமுறை மற்ற தத்துவங்களின் விஷயத்தில் இல்லாததால் இது உறுத்துகிறது.

இப்படி ஓரிரு உறுத்தல்கள் இருந்தாலும் அவற்றைப் புறந்தள்ளிவிட்டு மிக அரிதான நூல் என இதைத் தயங்காமல் சொல்லலாம். எத்தனையோ நூல்களைப் படித்துத் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்களை ஒரே நூலில் தந்திருக்கும் சாதனை சாதாரணமானதல்ல. இந்த நூலைத் தமிழில் இந்தியத் தத்துவத்தை அறிமுகப்படுத்தும் சிறந்த நூல் என்று சொல்லலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

5 hours ago

ஆன்மிகம்

10 hours ago

ஆன்மிகம்

17 hours ago

ஆன்மிகம்

18 hours ago

ஆன்மிகம்

18 hours ago

ஆன்மிகம்

19 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

மேலும்