ஓஷோ சொன்ன கதை: கடவுள் சாப்பிடச் சொன்ன அல்வா

By சங்கர்

முல்லா நஸ்ரூதினும் அவருடன் இரண்டு ஞானிகளும் மக்காவுக்குப் பயணம் செய்தார்கள். அவர்கள் தங்கள் பயணத்தின் கடைசி நிறுத்தமான ஒரு கிராமத்தை வந்தடைந்திருந்தனர். அவர்களிடமிருந்த பணமும் காலியாகிவிட்டது. மிகச் சொற்பமான பணமே அவர்களிடம் கைவசம் இருந்தது.

அந்தக் கிராமத்தில் பிரபலமான அல்வாவை அந்தப் பணத்தில் வாங்கிக்கொண்டனர். மூன்றுபேரும் சாப்பிடும் அளவில் அவர்களால் வாங்க முடியவில்லை. பங்குபோட்டாலும் எல்லாரும் பசியாகத்தான் தூங்கவேண்டியிருக்கும். என்ன செய்வது? ஒருவர் மட்டும் சாப்பிட்டால் பசியாறலாம் என்ற எண்ணத்தில் மூன்றுபேரும் தங்களது பசியே முக்கியமானது என்று சண்டைபோடத் தொடங்கினார்கள்.

முதல் துறவி சொன்னார். “ நான் நோன்பு இருப்பவன். பல ஆண்டுகளாகப் பிரார்த்தனையிலும் ஈடுபட்டுவருபவன். என்னைவிட இங்கே யாரும் புனிதமான மனிதர்கள் இல்லை. அதனால் கடவுள் எனக்கே இந்த அல்வாவைத் தர விரும்புவார்” என்றார்.

இரண்டாமவரோ மிகவும் படித்தவர். “நீங்களோ பல தவங்களைச் செய்தவர். நானோ அறிஞன். எனது வாழ்நாள் முழுவதும் அறிவைச் சேகரிப்பதிலேயே செலவழித்தவன். விரதமும் பிரார்த்தனையும் செய்பவர்களால் இந்த உலகத்தவர்களுக்கு உண்டாகும் பயனைவிட என்னுடைய அறிவு மேலானது. அதனால் இந்த அல்வா எனக்கே உரியது” என்றார்.

முல்லா நஸ்ரூதின் சொன்னார். “நான் துறவியும் அல்ல. அறிஞனும் அல்ல. நான் சாதாரண பாவி. கடவுள் பாவிகளிடம் மிகவும் அன்புள்ளவர் என்றே நான் இதுவரை கேள்விப்பட்டிருக்கிறேன். அதனால் அல்வா எனக்கே” என்றார்.

அவர்களால் ஒரு முடிவுக்கும் வர முடியவில்லை. கடைசியாக ஒரு முடிவுக்கு வந்தனர். அல்வாவைச் சாப்பிடாமலேயே இரவு உறங்கச் செல்வதென்றும், கடவுளே அதை முடிவுசெய்யட்டும் என்றும் தூங்கப்போனார்கள்.

காலையில் எழுந்து துறவி சொன்னார். “இனிமேல் இந்த அல்வாவுக்காக என்னுடன் யாரும் போட்டிபோட முடியாது. எனது கனவில் கடவுள் வந்தார். அவரது பாதங்களை நான் முத்தமிட்டேன். இதைவிட எனக்கு வேறென்ன தகுதி வேண்டும்? கொடுங்கள் அல்வாவை” என்றார்.

அறிஞரோ உரத்துச் சிரித்தார். “நீங்கள் கடவுளின் பாதங்களைத் தான் முத்தமிட்டீர்கள். என்னைக் கடவுள் முத்தமிட்டு கட்டிப்பிடிக்கவும் செய்தார். அல்வா எங்கே? அது எனக்குத்தான்” என்றார்.

அவர்கள் முல்லா நஸ்ரூதினைப் பார்த்து, “ நீ என்ன கனவு கண்டாய்?” என்று கேட்டனர்.

“நான் ஒரு பாவி. எனது கனவும் ரொம்ப சாதாரணமானது. அதை உங்களிடம் சொல்வதற்குக்கூட எனக்கு வெட்கமாக உள்ளது. நீங்கள் கேட்டதால் சொல்கிறேன். எனது கனவில் கடவுள் வந்து ஆணையிட்டார். ‘ஏய், முட்டாளே, இன்னுமா அல்வாவை வைத்துக் கொண்டு காத்திருக்கிறாய். சாப்பிடு’ என்று உத்தரவிட்டார். நான் சாப்பிட்டுவிட்டேன்” என்றார் முல்லா நஸ்ரூதின்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

10 hours ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

9 days ago

மேலும்