நாகையில் ஒரு ஸ்ரீரங்கம்

By வா.ரவிக்குமார்

குடதிசை முடியை வைத்து

குணதிசை பாதம் நீட்டி

வடதிசை பின்பு காட்டி

தென்திசை இலங்கை நோக்கி

கடல்நிறக் கடவுள் எந்தை

அரவணைத் துயிலுமா கண்டு

உடலெனக் குருகுமாலோ

என் செய்கேன் உலகத்தீரே!

- என தொண்டரடிப்பொடி ஆழ்வாரால் பாடல்பெற்றது, நாகப்பட்டினத்திலிருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் வழியில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் கீழையூர் ஸ்ரீ பூர்வரங்கநாதப் பெருமாள் ஆலயம். 9-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த ஆலயத்தில் மூலவர்களாக ரங்கநாதரும், ரங்கநாயகியும் அருள்பாலிக்கின்றனர். உற்சவராக ஆயனாரும் அதிரூபவல்லித் தாயாரும் உள்ளனர். இந்த ஆலயம் ஸ்ரீ ரங்கத்துக்கு அபிமான ஆலயம் என்பது கூடுதல் சிறப்பு.

ஆலய வரலாறு

காவிரியின் சந்திர நதிக்கரையில் தவம் செய்து கொண்டிருந்தார் மார்கண்டேய மகரிஷி. மாடுகளை மேய்க்கும் இடையனாக பெருமாள் அவர் முன் தோன்றி குழலிசைக்கிறார். மகரிஷியின் காதில் அந்த தேவகானம் விழுகிறது. வந்திருப்பது பரந்தாமனே என்பதை அவர் தம் ஞான திருஷ்டியால் உணர்ந்தார். பரந்தாமனின் பாதங்களைப் பணிந்தார். கருடாரூடராய் பெருமாள் மகரிஷிக்கு தரிசனம் தருகிறார்.

உமக்கு என்ன வேண்டும் என்றார் பரந்தாமன்.

“அடியேனுக்கு திருவரங்கத்தைப் போலவே இங்கும் சேவை சாதிக்க வேண்டும்” என்னும் மகரிஷியின் பிரார்த்தனையை நிறைவேற்றினார் பெருமாள்.

பள்ளிகொண்ட பரந்தாமனை தரிசித்ததும் மார்கண்டேய மகரிஷி, “இந்தப் பூர்வ ரங்க ஷேத்ரத்தில் சயனத்தில் உள்ள எம்பெருமானைப் பார்த்து அமிர்தம் கிட்டியது போன்ற சந்தோஷத்தை அடைந்தேன் என்பதை ஸ்லோகமாக எழுதி மங்களாசாசனம் செய்தார்.

பரிகாரத் தலம்

பெருமாளின் சயனத் திருக்கோலங்களை சாஸ்திரங்கள் நான்காக வரையறுத்துள்ளன. அவை, யோகம், போகம், வீரம், விரகம். இந்த ஆலயத்தில் பூர்வரங்கநாதப் பெருமாள் யோக சயனமாக ஆதிசேஷன் மேல் பள்ளி கொண்டு பூமிதேவியுடனும் மார்க்கண்டேய மகரிஷியுடனும் காட்சி அளிக்கிறார். இப்பெருமாளை நவக்கிரக தோஷம் உள்ளவர்கள் சேவித்தால், தோஷம் அகலும். ஆதிசேஷனுக்கு அமாவாசை அன்று நெய் தீபம் ஏற்றி, ராகு தோஷ நிவர்த்தி செய்யலாம்.

திருமணம் கைகூட, மகப்பேறு உண்டாக இங்குள்ள புஷ்கரணியில் நீராடி ஆதிசேஷனை வழிபட்டு நீலவஸ்திர தானம், உளுந்து தானம் செய்து, உளுந்து சாதம் நைவேத்யம் செய்தும், இந்த ஆலயத்தில் உள்ள சந்தான கிருஷ்ணனுக்கு கல்கண்டும், வெண்ணையும் நைவேத்யம் செய்தும் வழிபட்டு, குழந்தைச் செல்வத்தை பக்தர்கள் பெறுகின்றனர்.

ஆலயத்தின் சிறப்பு

`ஆயனாய் அன்று குன்றமொன் றெடுத்தான்’ என்னும் பாசுரத்தின் பயனாக உற்சவருக்கு ஆயனார் என்ற திருநாமம் உண்டானது என்கிறார்கள் சிலர். ஸ்ரீ ரங்கத்தைப் போலவே இந்த ஆலயமும் தெற்கு திசையில் கோபுர வாசலுடன் இருப்பது சிறப்பாகும்.

பெருமாள் ஆலயம் சுமார் 15 அடி உயரத்தில் திருவெண்ணாழி பிராகாரத்துடன் கூடியதாக உள்ளது. இந்த திருவெண்ணாழி பிராகாரத்தில் அத்யயன உற்சவ பகல்பத்து நாட்களில் முதல் சுற்றாகவும், இராப்பத்து நாட்களில் இறுதி சுற்றாகவும், பெருமாள் பத்தி உலாவுதல் சிறப்பாகும்.

ராமர், கிருஷ்ணர், கோபால கிருஷ்ணன், நர்த்தன கிருஷ்ணன், சந்தான கிருஷ்ணன் ஆகியோர் சன்னதியில் எழுந்தருளியுள்ளனர். கோபால கிருஷ்ணன் பொன் ஓலையை ஒரு காதில் ஆபரணமாக சூடிக்கொண்டு, கைகளைப் பின்னை மரத்தைப் பிடிக்கச் செல்லும் கோலத்தில் அருள் பாலிக்கிறார். இந்த ஆலயத்தில் நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், ராமானுஜர், தேசிகன் ஆகிய உற்சவ மூர்த்திகளும் எழுந்தருளியுள்ளனர். வாயிலில் ஏழு அடி உயரத்தில் துவார பாலகர்கள் கம்பீரமாக பக்தர்களை வரவேற்கின்றனர்.

திருமண வரம் அருளும் தலம்

ஆலயத்தின் வடக்கே உள்ள புஷ்கரணியில் தாயார் தவம் இருந்து, இங்கிருந்து 1 கி.மீ. தொலைவில் உள்ள திருமணங்குடி என்னும் ஊரில் பெருமாளைத் திருமணம் செய்துகொண்டதாக ஐதீகம். எனவே, திருமணம் கைகூடுவதற்கும் குழந்தைப் பேறு பெற வேண்டியும் பிரார்த்தனை செய்துகொண்டு, வளைகாப்பு செய்யும் நேரத்தில் தாயாருக்கு வளையல்கள் சமர்ப்பிக்கப்படுகின்றன. குழந்தை பிறந்தபின் தொட்டில் கட்டி வழிபடுவதும் தொன்றுதொட்டு இந்த ஆலயத்தில் நடந்துவருகிறது.

மகாகும்பாபிஷேகம்

தாயார் சன்னதி முன்னுள்ள மண்டபத்தின் அருகில் ஸ்ரீ ஆஞ்சநேயர், பால ஆஞ்சநேயராக அருள்பாலிக்கிறார். இந்த ஆஞ்சநேயருக்கு 108 குடம் தீர்த்தம் திருமஞ்சனம் செய்து, வருண ஜபம் செய்தால், மழை பெய்யும் என்பது இந்தப் பகுதி மக்களின் நம்பிக்கை. இங்குள்ள தும்பிக்கை ஆழ்வார் சன்னதியில், தும்பிக்கையில் ஒற்றைப் பழம் வைத்திருப்பது சிறப்பு. கீழையூர் ஸ்ரீ பூர்வரங்கநாதப் பெருமாள் ஆலயத்துக்கு கடந்த 2000-வது ஆண்டில் கும்பாபிஷேகம் நடந்தது. பதினான்கு ஆண்டுகள் கழித்து, இம்மாதம் 27-அன்று மகா கும்பாபிஷேகம் நடக்கவிருக்கின்றது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

10 hours ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

9 days ago

மேலும்