‘கச்சி மூதூர்’ என்று சங்க இலக்கியமான ‘பெரும் பாணாற்றுப்படை‘ முதலியவற்றிலேயே சொல்லப்படும் அந்தப் புராதனமான நகரம் மகாக்ஷேத்ரம் என்பதாக மட்டுமின்றி பெரிய வித்யா ராஜதானியாகவும் இருந்திருக்கிறது.
வடக்கே காசி மாதிரி தெற்கே காஞ்சி. “சான்றோர் உடைத்து” என்று சிறப்பிக்கப்படும் ‘தொண்டை நன்னாட்டின்‘ தலைநகரம் அதுதான். “கடிகா ஸ்தானம்” எனப்படும் சமஸ்கிருத யுனிவர்சிடி இருந்த நகரம் அது. அப்பர் சுவாமிகள் “கல்வியைக் கரையில்லாத காஞ்சி மாநகர்” என்கிறார். பல மத சித்தாந்திகளும் கூடியிருந்த இடம் அது என்று ‘மணிமேகலை‘யிலிருந்து தெரிகிறது.
பௌத்தம், ஜைனம், காபாலிகம் முதலான எல்லா மதங்களும் அங்கே பிற்காலத்தில் இருந்ததென்று மகேந்திர பல்லவனின் ‘மத்த விலாஸ ப்ரஹஸன‘ நாடகத்திலிருந்து தெரிகிறது. சரித்திரத்தில் சக்கரம் ஒரு முழு சுற்றுச் சுற்றிப் பழையபடியே மறுபடி நடக்கும்போது எந்த வட்டாரத்தில் எப்படியிருந்ததோ அப்படித்தான் திரும்பவும் நடக்கும்.
அதனால் ஆசார்யாள் காலத்திலும் அங்கே பல மதங்கள் இருந்திருக்க வேண்டும். இப்போதும் பௌத்த சிற்பங்கள் பல அங்கே அகப்படுகின்றன. காஞ்சி மண்டலத்துக்குள்ளேயே இருக்கும் திருப்பருத்திக்குன்றம் ஜைனகாஞ்சி என்கிற சமண தலமாகப் பேர் பெற்றிருக்கிறது.
க்ஷேத்ரம் என்று பார்க்கும்போது, ‘ரத்ன த்ரயம்‘ என்கிற ஈச்வரன், அம்பாள், பெருமாள் ஆகிய மூன்று பேருக்கும் முக்கியமான தலமாயிருப்பது அது. எண்ணி முடியாத கோவில்கள் சகல தெய்வங்களுக்கும் அங்கே இருப்பதில் ஏகம்பம் பரமேச்வரனின் பஞ்சபூத தலங்களில் ப்ருத்வீ க்ஷேத்ரமாயிருக்கிறது.
அம்பாள் காமாக்ஷியின் காமகோஷ்டம் - ‘காமகோட்டம்‘ என்பது- அத்தனை அம்மன் சந்நிதிகளுக்கும் மூல சக்தி பீடமாயிருக்கிற பெருமாள் வரதராஜாவாக உள்ள விஷ்ணு காஞ்சியை - ‘அத்தியூர்‘ என்று வைஷ்ணவர்களின் திவ்ய தேசங்களில் சொல்வது. அதை மூன்று முக்கியமான க்ஷேத்ரங்களில் ஒன்றாகச் சொல்கிறார்கள். ரங்கமும், திருப்பதியும் மற்ற இரண்டு.
விஷ்ணு காஞ்சியைத் தற்போது சின்ன காஞ்சிபுரம் என்கிறோம். பெரிய காஞ்சிபுரம் என்பது சிவகாஞ்சி. கச்சி ஏகம்பமும் காமகோட்டமும் உள்ள இடம். ரத்ன த்ரயம் மட்டுமில்லாமல் ஷண்மத தெய்வங்களுக்குமே முக்கியமான க்ஷேத்ரம் காஞ்சி.
பிள்ளையார் கோவில்கள் இல்லாத ஊரே தமிழ்நாட்டில் கிடையாது. அப்படிக் காஞ்சிபுரத்திலும் அநேகம் உண்டு. அங்கே ஒரு பேட்டைக்கே பிள்ளையார் பாளையம் என்று பேர். காமாக்ஷி ஆலயத்திலேயே ஆறு, ஏழு விக்நேச்வர மூர்த்திகள் உண்டு.
கஞ்சி வரதர்
காஞ்சீபுரத்தில் வரதராஜா ‘பேரருளாளப் பெருமாள்‘ என்று விசேஷமாக, விளங்கிக் கொண்டிருக்கிறார். அவரைப் பற்றி ரசித்தமாக இரு சொல்லலங்கார ஹாஸ்யத் துணுக்கு இருக்கிறது.
“கஞ்சி வரதப்பா!” என்று காஞ்சீபுர வரதராஜாவை நினைத்து, வியாதியில் அவதிப்பட்டுக்கொண்டிருந்த ஒருத்தர் வாய்விட்டு அரற்றினாராம்.
பக்கத்திலே ஒரு சாப்பாட்டு ராமன் இருந்தான். அவனுக்குக் கொஞ்ச நாளாக ஜ்வரம். டாக்டர், ‘சாதம் சாப்பிடக்கூடாது. கஞ்சி வேண்டுமானால் கொஞ்சம் குடிக்கலாம்‘ என்று கண்டிப்புப் பண்ணியிருந்தார். “கஞ்சி எப்போ வரும்? எப்போ வரும்?” என்று அவன் தவித்துக் கொண்டிருந்தான்.
அதனாலே, பக்கத்திலே இருந்தவர், “கஞ்சி வரதப்பா” என்று சொன்னதை, “கஞ்சி வருகிறது அப்பா” என்று அவர் சொல்லுகிறாரென்று நினைத்துவிட்டான். ஆள் யாரும் வரக்காணோமே என்பதால், “எங்கே வரதப்பா?” என்றானாம்.
பிள்ளையார் கோவில்கள் இல்லாத ஊரே தமிழ்நாட்டில் கிடையாது. அப்படிக் காஞ்சிபுரத்திலும் அநேகம் உண்டு. அங்கே ஒரு பேட்டைக்கே பிள்ளையார் பாளையம் என்று பேர். காமாக்ஷி ஆலயத்திலேயே ஆறு, ஏழு விக்நேச்வர மூர்த்திகள் உண்டு.
சுப்ரமண்யருக்கு குமரக் கோட்டம் என்று தனிக் கோயில் இருக்கிறது. கச்சியப்ப சிவாசாரியார் கந்த புராணம் எழுதி அரங்கேற்றியதே அங்கேதான்.
கச்சபேச்வரர் கோவிலில் சூரியன் சந்நிதியில் “மயூர சதகம்” என்று நூறு சுலோகம் கொண்ட சூரிய துதி கல்வெட்டில் பொறித்திருப்பதிலிருந்து அது ஒரு முக்கியமான சூரிய க்ஷேத்ரமாகத் தெரிகிறது.
இப்படி ஷண்மதங்களுக்கும் முக்கியம் வாய்ந்ததாகக் காஞ்சிபுரம் இருக்கிறது. ஆசார்யாளுக்கு முந்தியே அப்படியிருந்து அவர் அதனாலேயே அங்கே வந்து தங்கியிருக்கலாம். அல்லது ஷண்மத ஸ்தாபனா சார்யாளாகிய அவர் வந்து தங்கியதாலேயே அது இப்படிப் பெருமை பெற்றிருக்கலாம்.
சப்த மோக்ஷபுரிகளில் தக்ஷிணத்தில் உள்ள ஒன்றே ஒன்று காஞ்சீபுரம்தான் என்பது அதன் தலையாய சிறப்பாகும். சமய முக்கியத்துவம், வித்யா ஸ்தான முக்கியத்துவம், ராஜரீக முக்கியத்துவம், வியாபார முக்கியத்துவம் எல்லாமே அந்த ஊருக்கு இருந்ததால்தான் “நகரேஷு காஞ்சி” என்று புகழப்பட்டிருக்கிறது.
- தெய்வத்தின் குரல் ஐந்தாம் பகுதி
(ஸ்ரீ சங்கர சரிதம்)
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
3 hours ago
ஆன்மிகம்
10 hours ago
ஆன்மிகம்
11 hours ago
ஆன்மிகம்
11 hours ago
ஆன்மிகம்
13 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago