ஓஷோ சொன்ன கதை: திருடன் அடைந்த புத்தநிலை

By சங்கர்

பவுத்த ஞானி நாகார்ஜூனர் பரிநிர்வாணமாக, ஒரேயொரு மரப்பிச்சைப் பாத்திரத்துடன் வாழ்ந்தவர். அவரை பேரரசர்களும் அரசிகளும் போற்றினர்.

அவர் ஒருமுறை தலைநகரத்துக்குச் சென்றபோது, நாட்டின் அரசி, அவரது கால்களைப் பணிந்து, நீங்கள் வைத்திருக்கும் மரப்பிச்சைப்பாத்திரத்தைப் பார்த்து எனக்கு மிகுந்த சங்கடமாக இருக்கிறது. நீங்கள் ஞானிகளுக்கெல்லாம் ஞானி. உங்களுக்குப் பரிசளிப்பதற்காகவே நான் தங்கத்தில் செய்த திருவோட்டைப் பரிசளிக்கிறேன். வைரங்களும் வைடூரியங்களும் பதிக்கப்பட்ட பாத்திரம் அது. தயவுசெய்து எனது பரிசை மறுதலிக்காதீர் என்றார்.

நாகார்ஜூனர் அந்தப் பரிசை ஏற்றுக்கொண்டார். ராணிக்கோ அதிர்ச்சியும் மகிழ்ச்சியும் ஏற்பட்டது. நாகார்ஜூனர், தனது மரப்பிச்சைப்பாத்திரத்தை அரசிக்குக் கொடுத்து இதை வைத்துக்கொள் என்று ஆணையிட்டார்.

நாகார்ஜூனா அந்தப் பொன்னாலான திருவோட்டை வாங்கி வைத்துக்கொண்டார். அதன் மகத்துவத்தைக் கூர்ந்து கூடப் பார்க்கவில்லை. அரண்மனையை விட்டு வெளியே வந்த நாகார்ஜூனரின் தங்கப் பாத்திரத்தை ஒரு திருடன் பார்த்தான். அவன் தந்திரமும் புத்திசாலித்தனமும் வாய்ந்த தேசமே வியக்கும் திருடன்.

தூக்கி எறியப்பட்ட பொன் திருவோடு

அந்தத் திருடன் மனதுக்குள் சொல்லிக்கொண்டான்.

“ எத்தனை அரிதான பரிசு இது. வைரம், வைடூரியம் எல்லாம் பதித்த பிச்சைப்பாத்திரம் . எனது வாழ்க்கையில் எத்தனையோ அழகிய பொருட்களைப் பார்த்துள்ளேன். ஆனால் இதுபோன்ற அபூர்வத்தைப் பார்த்ததேயில்லை. இந்த நிர்வாணத் துறவியால் இதை எப்படிப் பாதுக்காக்க முடியும். யாரோ ஒருவருக்குப் போகப்போவதை நானே திருடினால் என்ன?” என்று நினைத்தான்.

நாகார்ஜூனரை அந்தத் திருடன் பின்தொடர்ந்தான். நாகார்ஜூனருக்குத் தன்னைத் தொடரும் திருடனின் காலடிச் சத்தம் கேட்டது. நாகார்ஜூனர் ஒரு பாழடைந்த கோயிலை அடைந்தார். அதற்கு சரியான கூரையும் இல்லை. கதவுகளும் இல்லை. பல சுவர்கள் குட்டிச்சுவர்களாக இருந்தன.

திருடன் கோயிலுக்கு வெளியே காத்திருந்தான். சில மணி நேரங்களிலேயே பொன்னாலான பாத்திரம் தன் கைவசப்பட்டு விடும் என்று நினைத்தான். திருடன் ஆசைப்பட்ட பொன்னாலான பாத்திரம் கோயிலுக்கு வெளியே தொப்பென்று வந்து விழுந்தது. திருடனுக்கோ அதிர்ச்சி.

நாகார்ஜூனர்தான் அந்த திருவோட்டை எறிந்திருந்தார். திருடனால் நம்பவே முடியவில்லை. இந்தத் துறவிக்குப் புத்தி பேதலித்துவிட்டதா என்று திருடன் நினைத்தான். அவன் திருடர்களிலேயே பலே திருடன். கவுரவமாக நடந்துகொள்ள வேண்டும் என்று எண்ணினான். நாகார்ஜூனரிடம் சென்று, “ ஐயா, உங்களிடம் எனது நன்றியைத் தெரிவிக்க வேண்டும். இவ்வளவு அரிதான, விலைமதிப்பற்ற ஒரு பொருளைத் தூக்கி எறிந்துவிட்டீர்களே. உங்களது கால்களை நான் தொட்டு வணங்க ஆசைப்படுகிறேன்” என்றான்.

நாகார்ஜூனர் சொன்னார். “உள்ளே வா. நான் அந்த பிச்சைப் பாத்திரத்தை வெளியே தூக்கிப்போட்டதனால்தான் நீ உள்ளே வர முடிந்தது.” என்றார்.

திருடன் விதித்த நிபந்தனை

அந்தத் திருடனுக்கு அவர் சொன்னது புரியவில்லை. அவன் நாகார்ஜூனரை உற்றுப் பார்த்தான். அவரது அமைதியை, அவரது ஆனந்த மனோநிலையைப் பார்த்து அவனுக்கு விந்தையாக இருந்தது. “ஐயா, உங்களைப் பார்த்தால் பொறாமையாக உள்ளது. உங்களைப் போன்ற ஒருவரை நான் பார்த்ததேயில்லை. எவ்வளவு நிம்மதியுடன் இருக்கிறீர்கள். உங்களது மன ஒருமையை அடைவதற்கு எனக்கு சாத்தியம் உண்டா. உங்களது தனித்துவத்தையும், கருணையையும், விடுபட்ட நிலையையும் அடைவது எப்படி?” என்று கேட்டான். அத்துடன் ஒரு நிபந்தனையையும் திருடன் விதித்தான்.

“இதுவரை பார்த்த துறவிகள் அத்தனை பேரும் என்னுடைய திருட்டுத் தொழிலை நிறுத்தச் சொல்லியுள்ளனர். ஆன்மிக ரீதியாக என்னால் வளர்ச்சியடைய முடியாததற்குக் காரணம் என்னுடைய திருட்டுத் தொழிலே என்றும் சொல்லியுள்ளனர். அதை மட்டும் என்னிடம் சொல்லாதீர்கள். என்னால் அதை நிறுத்தவே முடியாது. அதுதான் என்னுடைய இயற்கை என்று கருதுகிறேன்.” என்றான்.

நாகார்ஜூனர் அந்தத் திருடனுக்குப் பதிலளித்தார். “இதுவரை நீ உண்மையான ஒரு துறவியைக் கூடப் பார்க்கவில்லையென்றே நான் சொல்வேன். அவர்கள் அனைவரும் முன்னாள் திருடர்களாக இருந்திருக்க வேண்டும். அப்படியில்லையெனில் அவர்கள் ஏன் உன்னுடைய தொழில் பற்றி கவலைப்பட வேண்டும்? நீ திருட்டை விடவேண்டாம். உன்னால் முடிந்ததை எவ்வளவு திறனுடன் செய்ய முடியுமோ அதைத் தொடர்ந்து செய். ஒரு தொழிலில் நிபுணத்துவம் அடைவது நல்லதும்கூட” என்றார்.

நன்றாகத் திருடு

திருடனுக்கு மகத்தான அதிர்ச்சி. “என்ன மனிதர் நீங்கள். நல்லது எது? தீமை எது என்று நீங்கள் சொல்ல வேண்டாமா?” என்று கேட்டான்.

“இது சரி, இது தவறு என்று ஒருபோதும் சொல்ல மாட்டேன். நீ திருட விரும்பினால் திருடு. ஆனால் அதைச் செய்யும்போது விழிப்புடன் கவனி. நள்ளிரவில் திருடச் செல்லும்போது மிகுந்த விழிப்புணர்வுடன் கதவுகளையும், பூட்டுகளையும் திற. அப்படியும் உன்னால் திருட முடிந்தால் அதே விழிப்புணர்வுடன் இரு. ஏழு நாட்களுக்குப் பிறகு வா.” என்றார்.

ஏழு நாட்களுக்குப் பிறகு அந்தத் திருடன் வந்தான். நாகார்ஜூனரின் பாதங்களைத் தொட்டு வணங்கினான். சன்னியாச தீட்சை அளிக்க வேண்டும் என்று நாகார்ஜூனரிடம் கோரினான்.

“திருட்டுத் தொழில் என்ன ஆனது?” என்று கேட்டார் நாகார்ஜூனர்.

“ நீங்கள் தந்திரமான ஆள். என்னால் முடிந்தவரை இருந்துபார்த்தேன். நான் விழிப்புடன் இருக்கும்போது என்னால் திருடவே முடியவில்லை. விழிப்புடன் இருக்கும்போது நான் திருடும் செயல் மொத்தமும் முட்டாள்தனமாகவும் அர்த்தமற்றதாகவும் உள்ளது. நான் என்ன செய்கிறேன், எதற்காக செய்கிறேன், நாளை நான் இறந்துபோய்விட்டால் இந்தச் சொத்தையெல்லாம் இப்படிச் சேர்த்து என்ன பயன்? என் தேவைக்கு மேலே நான் சம்பாதித்துவிட்டேன் என்று தோன்றியது.

கடந்த ஏழு நாட்களும் திருடச் சென்ற வீடுகளிலிருந்து வெறும் கையோடு திரும்பினேன். விழிப்புடன் இருப்பதை மிகவும் அழகாக உணர்கிறேன். அதை முதல்முறையாக ருசிக்கிறேன். அது மிகவும் சின்ன ருசிதான். அப்போதுதான் நீங்கள் எவ்வளவு பெரிய சுவையை அறிந்தவர் என்று உணர்ந்தேன். நீங்கள் நிர்வாணமாக இருந்தாலும் இந்த உலகின் அரசன் நீங்கள்தான் என்று உணர்ந்தேன். நீங்கள்தான் உண்மையான தங்கம். நாங்கள் இதுவரை பொய்யான தங்கத்துடன் விளையாடிக் கொண்டிருந்தோம் என்பதை உணர்ந்தேன்” என்றான்.

அந்தத் திருடன் நாகார்ஜூனரின் சீடனானான். புத்த நிலையை அடைந்தான்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

9 hours ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

9 days ago

மேலும்