ஓஷோ சொன்ன கதை: புத்தரும் சிறுமியும்

By சங்கர்

கவுதம புத்தர் ஒரு நகரத்துக்கு வருகை தந்தார். அவர் உரையைக் கேட்க நகர் மக்கள் எல்லாரும் காத்திருந்தனர். ஆனால் புத்தரோ, தான் வந்த சாலையைப் பார்த்தபடியே பேசாமல் அமர்ந்திருந்தார். அவர் நகரத்துக்குள் நுழைந்தபோது ஒரு சிறுமி அவரைப் பார்த்து, “எனக்காகக் காத்திருங்கள். நான் என் தந்தைக்கு உணவு கொடுக்கப் போகிறேன். அவர் வயலில் வேலை செய்கிறார். ஆனால் சரியான நேரத்துக்குள் வந்துவிடுவேன். நீங்கள் எனக்காகக் காத்திருக்க வேண்டும்” என்று சொல்லியிருந்தாள்.

அதற்காகத்தான் புத்தர் காத்திருந்தார். நகரத்துப் பெரியவர்கள் ஒருகட்டத்தில் பொறுமையிழந்து, “நீங்கள் யாருக்காகக் காத்திருக்கிறீர்கள். உரையைத் தொடங்கலாமே. முக்கியஸ்தர்கள் எல்லாரும் வந்துவிட்டனர்” என்றனர்.

புத்தர் சொன்னார். “ நான் யாரை எதிர்பார்த்து வந்தேனோ அவர் இன்னும் வரவில்லை. நான் காத்திருக்கவே வேண்டும்” என்றார்.

இறுதியில் அவர் எதிர்பார்த்திருந்த சிறுமி வந்தாள்.

“எனக்குக் கொஞ்சம் தாமதமாகிவிட்டது. ஆனால் நீங்கள் கொடுத்த உறுதிமொழியைக் காப்பாற்றிவிட்டீர்கள். நான் விழிப்புணர்வை அடைந்ததில் இருந்து உங்களுக்காகக் காத்துக்கொண்டிருப்பதால் நீங்கள் எனக்கு கொடுத்த உறுதிமொழியைக் காப்பாற்றவே வேண்டும். எனக்கு நான்கு வயது இருக்கும்போது உங்களது பெயரைக் கேட்டேன். அந்தப் பெயர் என் மனதில் தொடர்ந்து மணியாக ஒலித்துக்கொண்டிருந்தது. பத்தாண்டு காலமாக நான் காத்திருக்கிறேன்” என்றாள்.

“நீ காத்திருந்தது வீண்போகவில்லை. இந்த இடத்துக்கு என்னை ஈர்த்தது நீதான்” என்றார் புத்தர்.

புத்தர் தனது உரையை நிகழ்த்தினார். அந்தச் சிறுமி மட்டும் புத்தரிடம் வந்து, “ஐயா, எனக்கு தீட்சை அளியுங்கள். நான் போதுமான காலம் காத்திருந்துவிட்டேன். நான் உங்களுடன் இருக்க விரும்புகிறேன்” என்றாள்.

“ நீ என்னுடன் இருக்க வேண்டும். ஏனெனில் உனது நகரமோ எனது இருப்பிடத்திலிருந்து வெகு தூரத்தில் உள்ளது. நான் திரும்பத் திரும்ப இங்கே வந்துகொண்டிருக்கவும் முடியாது. வழியோ மிகவும் நீண்டது. நானும் முதுமை அடைந்துவருகிறேன்” என்றார்.

அந்த நகரத்தில் சிறுமியைத் தவிர யாருமே தீட்சைக்கு முன்வரவில்லை.

அன்றைக்கு இரவில் எல்லாரும் உறங்குவதற்குத் தயாரானபோது, புத்தர் தங்கியிருந்த இடத்தில் அவரது தலைமைச் சீடர் ஆனந்தா ஒரு சந்தேகத்தை புத்தரிடம் கேட்டார். “ ஒரு குறிப்பிட்ட இடத்தை நோக்கிச் செல்வதற்கு அந்த இடம் உங்களை ஈர்ப்பதை வைத்து உணர்வீர்களா?” என்றார்.

“நீ சொல்வது சரிதான். அப்படித்தான் எனது பயணங்களை முடிவுசெய்கிறேன். யாருக்கோ தாகம் எடுப்பதுபோல் உணர்ந்தால், அவர் இருக்கும் திசையில் நான் பயணத்தைத் தொடங்குவேன்” என்றார்.

ஆசிரியன் சீடனை நோக்கி நகர்கிறான்.

சீடன் ஆசிரியனை நோக்கி நகர்கிறான்.

தாமதமாகவோ, சீக்கிரத்திலோ இருவரும் சந்திக்கப்போகின்றனர்.

அந்தச் சந்திப்பு உடலினுடையது அல்ல. அந்தச் சந்திப்பு மனதினுடையதும் அல்ல. அது ஆன்மாவின் சந்திப்பு. இரண்டு தீபங்கள் நெருங்குவதைப் போன்றது அது. தீபங்கள் வெவ்வேறானவையாக இருக்கலாம். ஒளிப்பிழம்புகள் ஒன்றாகின்றன. இரண்டு உடல்களுக்கிடையே ஆன்மா ஒன்றாகும்போது, அதை ஒரு பந்தம் என்று சொல்வது மிகவும் சிக்கலானது. அது அல்ல, ஆனால் அதை விளக்கவும் வார்த்தைகள் இல்லை. மொழி என்பது எத்தனை வறியது.

அது ஒருமையில் இருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

10 hours ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

9 days ago

மேலும்