குருப் பெயர்ச்சிப் பலன்கள்: 05.07.2015 முதல் 01.08.2016 வரை (துலாம் முதல் மீனம் வரை)

By வேங்கடசுப்பிரமணியன்

நிகழும் மன்மத வருடம் ஆனி மாதம் 20-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை 05.07.2015 கிருஷ்ணபட்சத்து, சதுர்த்தி திதி, மேல்நோக்குகொண்ட அவிட்டம் நட்சத்திரம், ப்ரீதி நாமயோகம், கௌலவம் நாமகரணம், நேத்திரம், ஜீவனம் நிறைந்த மந்த யோகத்தில், பஞ்ச பட்சியில் மயில் பலவீனமாக உள்ள நேரத்தில் உத்ராயணப் புண்ய காலம் கிரிஷ்மருதுவில் குருபகவான் கடக ராசியிலிருந்து சிம்ம ராசிக்கு இரவு மணி 11.04-க்குப் பெயர்ச்சி ஆகிறார். 05.07.2015 முதல் 01.08.2016 வரை இங்கே அமர்ந்து தன் அதிகாரத்தைச் செலுத்துவார்.

குருபகவான் சிம்மத்தில் அமர்வதால் வங்கிகள் தங்களுடைய வட்டிவிகிதத்தைக் குறைக்கும். நடுத்தரக் குடும்பத்தினர் மற்றும் சாதாரண நிலையில் இருப்பவர்களும் கடனை எளிதாகப் பெறும் அளவிற்கு சட்ட விதிகள் தளர்த்தப்படும். ஆனால் வாராக்கடனை வசூலிக்க சட்டங்கள் கடுமையாக்கப்படும். பணப்புழக்கம் ஓரளவு அதிகரிக்கும். கல்வி நிறுவனங்கள் தழைக்கும், உலகத்தரத்திற்கு ஈடுஇணையாக இந்தியக் கல்வி நிறுவனங்களை மேம்படுத்த படிப்படியாகப் புதிய சட்டதிட்டங்களை அரசு கொண்டு வரும்.

தகுதியற்ற அங்கீகாரம் இல்லாத கல்வி நிறுவனங்கள் மூடப்படும். ஆசிரியர்களின் தகுதியை மேம்படுத்த சிறப்புப் பயிற்சி அரசால் அளிக்கப்படும். அனைத்துத் துறைகளிலும் பாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப்படும். சுபாஷ்சந்திரபோஸ், சர்தார் வல்லபாய் படேல், வாஞ்சிநாதன் உள்ளிட்ட சுதந்திரப் போராட்ட தியாகிகள் முக்கியத்துவம் பெறுவார்கள். ரூபாய் நோட்டில் பல மாற்றங்கள் செய்யப்படும். நவீனமாக அச்சடிக்கப்படும். பழைய தியாகிகளின் படங்களும் ரூபாய் நோட்டில் இடம் பெறும். கள்ளப்பணப் புழக்கம் முழுமையாகக் கட்டுப்படுத்தப்படும்.

வழிபாட்டுத் தலங்களைக் கட்டுவதற்குப் புதிய சட்ட விதிகள் அமலுக்கு வரும். புற்றுநோய் உள்ளிட்ட கொடிய நோய்களைக் கட்டுப்படுத்த புதிய மருந்துகள் கண்டறியப்படும். மருந்துகளின் விலை குறையும். பெரிய அளவிலே அறுவைசிகிச்சை இல்லாமல், ரத்த இழப்பில்லாமல் இதயநோயைக் குணப்படுத்தும் விதம் கண்டறியப்படும். பழைய கல்வெட்டுகள், புதைந்து கிடக்கும் விக்ரஹங்கள் வெளிப்படும். வழக்கறிஞர்களைக் கட்டுப்படுத்த புதிய சட்டங்கள் வரும். இனி குரு, பன்னிரெண்டு ராசிக்காரர்களை என்ன செய்யப்போகிறார் என்று பார்ப்போம்.

துலாம்

இனம், மொழி, மதம் பார்க்காமல் அனைவருக்கும் உதவுபவர்களே! கடந்த ஓராண்டு காலமாக உங்களுடைய ராசிக்கு 10-ம் வீட்டில் அமர்ந்து உங்களுக்கு மரியாதைக் குறைவையும், தோல்வியையும், அடுக்கடுக்காக ஏமாற்றங்களையும், காரியத் தடைகளையும் தந்த குருபகவான் இப்போது 05.07.2015 முதல் 01.08.2016 வரை உங்கள் ராசிக்கு 11-ம் வீடான லாப வீட்டில் அமர்வதால் உங்களின் புகழ், கவுரவம் உயரும். தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். கைமாற்றாகவும் கடனாகவும் வாங்கியிருந்த பணத்தையும் ஒருவழியாகத் தந்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள்.

கணவன், மனைவிக்குள் இருந்து வந்த சண்டை, சச்சரவுகள் விலகும். அன்னியோன்யம் அதிகரிக்கும். பிரிந்திருந்தவர்களும் ஒன்றுசேர்வார்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேலைக்கு விண்ணப்பித்துக் காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். நீங்கள் சொல்லாததையும் சொன்னதாக நினைத்துக்கொண்டு மனக்கசப்பால் ஒதுங்கியிருந்த உறவினர், நண்பர்கள் உங்களைச் சரியாகப் புரிந்துகொண்டு பேசத் தொடங்குவார்கள். விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். தோல்வி மனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். உங்களின் 3-ம் வீட்டை குரு பார்ப்பதால் சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள்.

விலையுயர்ந்த ஆபரணங்கள், ரத்தினங்கள் வாங்குவீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். குரு ஐந்தாம் வீட்டைப் பார்ப்பதால் உங்களுடைய அடிப்படை வசதிகள் பெருகும். மகனுக்கு எதிர்பார்த்த குடும்பத்திலிருந்து நல்ல பெண் அமையும். அவருக்கு அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனத்தில் அதிக சம்பளத்துடன் புது வேலையும் கிடைக்கும். 7-ம் வீட்டைப் பார்ப்பதால் அழகு, இளமை கூடும்.

அடிமனதில் இருந்த பய உணர்வு நீங்கும். பணப்பற்றாக்குறையினால் வீடு கட்டும் பணியைப் பாதியிலேயே நிறுத்தியவர்கள் இனி வங்கியின் கடனுதவியுடன் முழுமையாகக் வீடுகட்டி முடிப்பீர்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். கடையைப் பிரபலமான இடத்திற்கு மாற்றுவீர்கள். பழைய பாக்கிகளை இதமாகப் பேசி வசூலிப்பீர்கள். பிரபலங்களும் வாடிக்கையாளர்களாக அறிமுகமாவார்கள். அயல்நாட்டு நிறுவனங்களிலிருந்தும் ஒப்பந்தங்கள் வரும். புதிய பொறுப்புகள், பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். தள்ளிப்போன ஒப்பந்தம் கையெழுத்தாகும். கண்ணாடி, அழகு சாதனப் பொருட்கள், ஹோட்டல், ஹார்டுவேர்ஸ் வகைகளால் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் கடந்த ஒராண்டு காலமாக ஏற்பட்ட அவமானங்கள், தொந்தரவுகள், எதிர்ப்புகள் நீங்கும். இனி உங்கள் கை ஓங்கும். புதிய பதவிக்கு உங்களது பெயர் பரிந்துரை செய்யப்படும். இழந்த சலுகைகளை மீண்டும் பெறுவீர்கள். வேலைச்சுமை குறையும். தலைமைப் பொறுப்புகள் தேடி வரும். அதிகாரிகளுக்கு ஆலோசனை தருமளவிற்கு நெருக்கமாவீர்கள். மூத்த அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். இந்த குரு மாற்றம் ஒதுங்கி ஓரமாய் இருந்த உங்களுக்கு முதல் மரியாதையைத் தருவதுடன், வசதியையும் தருவதாக அமையும். வெற்றியைத் தரும்.

விருச்சிகம்

சிதறிக் கிடக்கும் சக்தியைத் திரட்டிச் சேர்ப்பதில் வல்லவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு பாக்ய ஸ்தானமான 9-ம் வீட்டில் அமர்ந்து ஓரளவு வசதி, வாய்ப்புகளையும், நிம்மதியையும் தந்தார் குருபகவான். இப்போது 05.07.2015 முதல் 01.08.2016 வரை உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் அமர்வதால் கொஞ்சம் மனக்கலக்கத்தையும், பணப்பற்றாக்குறையையும் தருவார். 10-ம் இடம் பதவியைக் கெடுக்குமென்றோ, அந்தஸ்து குறையுமென்றோ பெரிதாகக் கவலைப்பட வேண்டாம்.

உங்கள் யோகாதிபதியான சூரியனின் வீட்டில் குரு அமர்வதால் உங்களுக்குக் கெடுபலன்கள் குறையும். பிரச்சினைகளை சமாளிக்கும் சக்தி உண்டாகும். பிரபலங்கள் ஆதரவாக இருப்பார்கள். வெளிநாட்டில் சிலருக்கு வேலை கிடைக்கும். நல்ல சந்தர்ப்ப சூழ்நிலைகளையெல்லாம் சரியாகப் பயன்படுத்தி முன்னேறப்பாருங்கள். உங்களது திறமைகள் மீது நீங்கள் நம்பிக்கை வைப்பது நல்லது. என்றாலும் அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியோ, வாக்குறுதிகளோ தர வேண்டாம்.

குடும்பத்தில் சிறு சலசலப்புகள் வரும். மனிதர்களின் இரட்டை வேடத்தை நினைத்து கோபப்படுவீர்கள். சமூகத்தின் மீதும் கோபமெல்லாம் வந்து நீங்கும். சிலர் உங்களைத் தாழ்த்திப் பேசினாலும், விமர்சித்தாலும் கலங்கிக்கொண்டிருக்காதீர்கள். 2-ம் வீடான வாக்கு ஸ்தானத்தை குரு பார்ப்பதால் சாணக்கியத்தனமாகப் பேசி சாதிப்பீர்கள். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும்.

பார்வைக் கோளாறு, பல் வலி சரியாகும். சுகஸ்தானத்தைப் பார்ப்பதால் தாயாரின் உடல் நலம் சீராகும். இந்தி, தெலுங்கு பேசுபவர்களால் திடீர் திருப்பம் உண்டாகும். அயல்நாட்டிலிருப்பவர்களால் அனுகூலம் உண்டு. காற்றோட்டமில்லாத, தண்ணீர் வசதியில்லாத வீட்டிற்கு மாறுவீர்கள். 6-ம் வீட்டை குரு பார்ப்பதால் புதிதாக வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். பிள்ளைகள் தங்கள் தவறை உணர்வார்கள். அண்டை வீட்டாரிடம் அனுசரணையான சூழ்நிலை உருவாகும்.

வியாபாரத்தில் ஆழம் தெரியாமல் காலை விட வேண்டாம். மற்றவர்களின் பேச்சைக் கேட்டு அனுபவமில்லாத தொழிலில் முதலீடு செய்ய வேண்டாம். வேலையாட்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்குவது நல்லது. பங்குதாரர்களால் பிரச்சினைகள் வெடிக்கும். வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக்கொள்ளுங்கள். மின்னணு, மின்சார சாதனங்கள், மளிகை, ஸ்டேஷனரி மற்றும் துணிவகைகளால் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. மறைமுக அவமானங்களும் வீண்பழிகளும் வரக்கூடும். அடிக்கடி இடமாற்றம் உண்டு. அதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். மேலதிகாரிகளைப் பற்றி வெளியில் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். சிலர் சூழ்ச்சிகளாலும், பிரச்சினைகளாலும் வேலையை இழக்க நேரிடும். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்த வாய்ப்பிருக்கிறது. விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும் சகிப்புத் தன்மையும் இருந்தால் மட்டுமே இந்த குரு மாற்றம் ஓரளவு வெற்றியை தரும். மகிழ்ச்சியையும் தருவதாக அமையும்.

தனுசு

வளைந்து தாக்கும் கருவியான வில்லை ராசியாக கொண்டவர்களே! பொறுத்தார், பூமியாள்வார் என்பதை அறிந்தவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு 8-ல் அமர்ந்து தொட்டதையெல்லாம் நட்டப்படுத்திய குருபகவான் இப்போது 05.07.2015 முதல் 01.08.2016 வரை உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் அமர்வதால் குடும்பத்தில் நிம்மதி பிறக்கும்.

அடுத்தடுத்த பயணங்களால் அலைக்கழிக்கப்பட்டீர்கள். வேலைச்சுமையால் குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசவும் நேரமில்லாமல் தவித்தீர்கள். உறவினர்கள், நண்பர்கள், விருந்தினர்களின் வருகையாலும் செலவுகள் அதிகமாகப் போயிருக்கும். இனிமேல் அவசியப்படுபவர்களை மட்டும் வீட்டிற்கு அழைப்பீர்கள். விலையுயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். பழைய பொருட்கள், சமையலறை சாதனங்களை மாற்றுவீர்கள். அடகிலிருந்த பத்திரத்தை மீட்கும் அளவிற்கு பணவரவு அதிகரிக்கும்.

உங்கள் தகுதிக்கேற்ற வேலை அமையும். தந்தைவழி உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். சரியான தூக்கமில்லாமல் ஏதோ ஒன்று அழுத்தியது போல் தவித்தீர்களே! இனி ஆழ்ந்த உறக்கம் வரும். நீண்ட நாளாகச் செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த அண்டை மாநிலப் புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று முடிந்து வைத்திருந்த காணிக்கையை செலுத்துவீர்கள்.

குருபகவான் ராசியைப் பார்ப்பதால் சோர்வு களைப்பு நீங்கும். உற்சாகம் பிறக்கும். இனி நாலு காசு எடுத்து வைக்குமளவுக்கு வருமானம் கூடும். எப்போதும் பரபரப்பாக இருப்பதைப் போலக் காணப்பட்டாலும், தன் காரியத்தைச் சாதிக்க முடியாமல் தத்தளித்தீர்களே, அந்த அவல நிலை மாறும். அதிக வட்டி செலுத்தும் கடனில் ஒரு பகுதியை பைசல் செய்யலாம்.

பிள்ளைகள் குடும்ப சூழ்நிலையறிந்து பொறுப்பாக நடந்து கொள்வார்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். கல்யாணத்தை கோலாகலமாக நடத்துவீர்கள். 3-ம் வீட்டை குரு பார்ப்பதால் புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். இளைய சகோதரர் வகையில் இருந்து வந்த பிணக்குகள் நீங்கும். பாசமழைப் பொழிவார்கள். 5-ம் வீட்டைப் பார்ப்பதால் எவ்வளவோ மருத்துவம் செய்தும் குழந்தைப்பேறின்மையால் சங்கடம் அனுபவித்தவர்களுக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும். பிள்ளைகள் நல்ல வழிக்குத் திரும்புவார்கள்.

வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். சந்தை ரகசியங்களை தெரிந்துகொள்வீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கெமிக்கல், இரும்பு, மருந்து வகைகளால் லாபமடைவீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். அதிகம் படித்த, அனுபவமிக்க வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள். கடையை நவீனமாக்குவீர்கள். உத்யோகத்தில் உங்களுடைய தொலைநோக்குச் சிந்தனையை உயரதிகாரி பாராட்டுவார். எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு, சலுகைகளெல்லாம் தடையின்றிக் கிடைக்கும். சக ஊழியர்களும் உங்களை மதிக்கத் தொடங்குவார்கள். ஆகமொத்தம் இந்த குரு மாற்றம் வாழ்வில் திடீர் யோகங்களையும், திருப்பங்களையும், மரியாதையையும், மகிழ்ச்சியையும் தருவதாக அமையும்.

மகரம்

உலகில் திரும்பக் கிடைக்காத ஒரே சிம்மாசனம் தாயின் மடிதான் என்பதை அறிந்தவர்கள் நீங்கள். குருபகவான் இதுவரை உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் அமர்ந்து சின்னச் சின்ன சந்தோஷங்களையும், உறவினர்கள் மத்தியில் செல்வாக்கையும் தந்தார். இப்போது 05.07.2015 முதல் 01.08.2016 வரை ராசிக்கு 8-ம் வீட்டில் சென்று மறைகிறார். உங்கள் சுகாதிபதியான குருபகவான் மறைவதால் ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை அதிகமாகும். மனைவி, பிள்ளைகளுடன் பேசும் நேரம் குறையும். ஒரே வேலைகளை இரண்டு, மூன்று முறை அலைந்து முடிக்க வேண்டிவரும்.

அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். வேற்றுமதத்தவர்கள், மொழியினரால் ஆதாயமடைவீர்கள். சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியாவசியச் செலவுகள் அதிகமாகும். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். கணவன், மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வரும். மகளின் திருமணத்திற்காக வெளியில் கடன் வாங்க வேண்டிவரும். மகனின் உயர்கல்வி, உத்யோகத்திற்காக சிலரின் சிபாரிசை நாடுவீர்கள். மறதியால் விலை உயர்ந்த தங்க ஆபரணங்களை இழக்க நேரிடும்.

முன்கோபத்தால் நல்லவர்களைப் பகைத்துக்கொள்ளாதீர்கள். 2-ம் வீட்டைப் பார்ப்பதால் குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். பழைய காலி இடத்தை விற்றுப் புதிதாக வீடு வாங்கும் யோகம் உண்டாகும். உங்களது சுக ஸ்தானமான 4-ம் வீட்டைப் பார்ப்பதால் புது வாகனம் வாங்குவீர்கள். பழைய வீட்டைப் புதுப்பித்துக் கட்டுவீர்கள். தாயாருடனான மோதல்கள் விலகும். தாய்மாமன் வகையில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். குரு 12-ம் வீட்டைப் பார்ப்பதால் புண்ணிய ஸ்தலங்கள் சென்றுவருவீர்கள். வெகுநாட்களாக இழுபறியில் இருந்துவந்த வழக்குகள் சாதகமாக முடியும்.

வியாபாரத்தில் போட்டிகளை சமாளிக்கக் கடுமையாக உழைக்க வேண்டி வரும். வேலையாட்கள், பங்குதாரர்களிடம் கண்டிப்பு காட்ட வேண்டாம். வேலையாட்களிடம் அதிகக் கண்டிப்பு காட்ட வேண்டாம். பழைய வாடிக்கையாளர்களின் மனங்கோணாமல் பார்த்துக்கொள்ளுங்கள். சந்தை நிலவரங்களை உற்றுக் கவனியுங்கள். மற்றவர்கள் பேச்சை கேட்டு அதிகளவில் முதலீடுகள் செய்ய வேண்டாம். உத்தியோகத்தில் பணிகளைப் போராடி முடிப்பீர்கள். உங்களுக்கு ஆதரவாக இருந்த பழைய அதிகாரி வேறு இடத்திற்கு மாற்றலாவார்.

புது அதிகாரியால் நெருக்கடிகள் வந்து நீங்கும். மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். உங்களுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான சலுகைகள், உரிமைகளைக் கூட போராடிப் பெற வேண்டிவரும். உயர்மட்ட அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். எவ்வளவு உழைத்தாலும் உங்களைப் பற்றிக் குறை கூறத்தான் செய்வார்கள். இந்த குரு மாற்றம் அடுத்தடுத்த செலவுகளால் உங்களின் சேமிப்புகளைக் கரைய வைத்தாலும் புதிய பாதையில் பயணித்து வெற்றி பெற வைக்கும்.

கும்பம்

கொடுக்கும் குணம் கொண்ட நீங்கள் விளம்பரத்தை ஒருபோதும் விரும்ப மாட்டீர்கள். உங்கள் ராசிக்கு 6-ல் அமர்ந்து உங்களைப் பல பிரச்சினைகளிலும் சிக்க வைத்ததுடன், அசிங்கங்களையும், கவுரவக் குறைவையும், ஏமாற்றங்களையும் தந்து தூக்கத்தைக் கெடுத்த குருபகவான் இப்போது 05.07.2015 முதல் 01.08.2016 வரை உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்ப்பதால் அழகு, ஆரோக்கியம் கூடும். உங்களின் ஆளுமைத்திறன் அதிகரிக்கும்.

உங்களுடைய அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். தன்னம்பிக்கை பெருகும். பிரபலங்கள் ஆதரவாகப் பேசுவார்கள். தடைப்பட்ட திருமணப் பேச்சு வார்த்தை கூடிவரும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். எவ்வளவோ சிகிச்சை செய்தும் குழந்தைப்பேறின்மையால் அவதிப்பட்டுவந்த தம்பதிகளுக்கு அழகான வாரிசு உருவாகும். பிள்ளைகளின் பிடிவாத குணம் தளரும். அயல்நாட்டில் தரமான பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பெற உங்கள் பிள்ளைகளுக்கு வாய்ப்பு வரும். உறவினர், நண்பர் வருகையால் வீடு களைகட்டும். வீடு, வாகனம் வாங்குவீர்கள். பழைய நகைகளை விற்று புதுவடிவில் ஆபரணங்கள் வாங்குவீர்கள். அடிக்கடித் தொல்லை கொடுத்துவந்த வாகனத்தை மாற்றுவீர்கள்.

நீண்ட நாளாக வராமலிருந்த பணமெல்லாம் கைக்கு வரும். பழைய கடனில் ஒரு பகுதியைத் தீர்க்க வழி பிறக்கும். குருபகவான் லாப வீட்டைப் பார்ப்பதால் உங்களின் ஆளுமைத் திறன், நிர்வாகத் திறன் அதிகரிக்கும். பங்குவர்த்தகத்தில் பணம் வரும். மூத்த சகோதரங்களால் ஆதாயம் உண்டு. உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டை குரு பார்ப்பதால் எங்கு சென்றாலும் மதிக்கப்படுவீர்கள். கோவில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள். இளைய சகோதர வகையில் ஆதாயமடைவீர்கள். பழைய கடன் பிரச்சினையைத் தீர்க்க புது வழிவகை பிறக்கும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.

வியாபாரத்தில் அமோகமாக லாபம் இருக்கும். புது இடத்திற்குக் கடையை மாற்றுவீர்கள். புகழ் பெற்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்வீர்கள். இங்கிதமாகப் பேசி வாடிக்கையாளர்களைக் கவருவீர்கள். புதிய முயற்சிகள் பலனளிக்கும். புது கிளைகள் தொடங்குவீர்கள். விலகிச் சென்ற பங்குதாரர் மீண்டும் வந்து இணைவார். ஷேர், ஸ்பெக்குலேஷன், இரும்பு, லாட்ஜிங், போர்டிங், கட்டுமான வகைகளால் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் எல்லோரும் மதிப்பார்கள். உயரதிகாரிகள் உங்களைக் கலந்தாலோசித்து முடிவுகள் எடுப்பார்கள். சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துகொள்வார்கள். அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களிலிருந்து நல்ல வாய்ப்புகள் தேடி வரும். இந்த குரு மாற்றம் இடியாப்பச் சிக்கல்களாய் இருந்த உங்கள் வாழ்க்கையில் அதிரடி அதிர்ஷ்டங்களை தருவதாக அமையும்.

மீனம்

தன்னலமற்ற போக்கும், வழி நடத்திச் செல்லும் குணமும் கொண்டவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் அமர்ந்து அடிப்படை வசதி, வாய்ப்புகளை அதிகரிக்க வைத்தாரே! பணப்புழக்கம் சரளமாக இருந்ததால் சொத்து வாங்கினீர்களே! நல்லது கெட்டது நான்கையையும் அறிந்து செயல்பட வைத்தாரே! நாலு பேர் மதிக்கத்தக்க வகையில் உங்களின் தராதரத்தை உயர்த்திக் காட்டினார் குருபகவான். இப்போது 05.07.2015 முதல் 01.08.2016 வரை உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் சென்று மறைவதால் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

குடும்பத்திலும் சின்னச் சின்னச் சலசலப்புகள் வரும். கணவன், மனைவிக்குள் சிலர் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்வார்கள். வீண் சந்தேகத்தை விலக்கிக்கொள்ளுங்கள். மற்றவர்கள் பேச்சை கேட்டு மனைவியைக் குறை கூற வேண்டாம்.

தவறானவர்களையெல்லாம் நல்லவர்கள் என நினைத்து ஏமாறாதீர்கள். யாருக்கும் பணம், நகை வாங்கித்தருவதில் ஈடுபட வேண்டாம். திடீரென்று அறிமுகமாகுபவர்களை நம்பி பெரிய முடிவுகளெல்லாம் எடுக்காதீர்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக்கொண்டிருக்க வேண்டாம். உங்களின் தனித்தன்மையைப் பின்பற்றுவது நல்லது. குடும்ப ஸ்தானமான 2-ம் வீட்டைப் பார்ப்பதால் இதமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பணவரவு உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். ராசிக்கு 10-ம் வீட்டைப் பார்ப்பதால் வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். 12-ம் வீட்டைப் பார்ப்பதால் திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுபச் செலவுகள் அதிகமாகும். பாதியிலேயே நின்றுபோன கட்டிட வேலைகளை இனி முழு மூச்சுடன் முடிப்பீர்கள்.

வியாபாரத்தில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். பழைய வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக்கொள்ளுங்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும். பழைய வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக்கொள்ளுங்கள். இரும்பு, உணவு, கட்டிடம், கெமிக்கல் வகைகளால் ஆதாயம் உண்டு.

உத்தியோகத்தில் அலட்சியம் வேண்டாம். உங்களிடம் ஆலோசனை கேட்டுவிட்டு அதைத் தாங்கள் யோசித்ததாக மூத்த அதிகாரிகளிடம் சிலர் நல்ல பெயர் வாங்கிக்கொள்வார்கள். உங்கள் திறமைகளை நேரடியாக மூத்த அதிகாரிகளிடம் சிலர் கொண்டு செல்ல மறுப்பார்கள். பணியில் திடீர் இடமாற்றம் உண்டு. சக ஊழியர்கள் உங்களை மதிக்காமல் போவார்கள். சிலர் உங்கள் மீது அவதூறு வழக்குகள் தொடர வாய்ப்பிருக்கிறது. இந்தக் குருமாற்றம் சிறுசிறு பிரச்சினைகளால், உங்களைப் பல நேரங்களில் முணுமுணுக்க வைத்தாலும் சமயோஜித புத்தியால் ஓரளவு சாதிக்க வைக்கும்.

> மேஷம் முதல் கன்னி ராசி வரையிலான குருப் பெயர்ச்சிப் பலன்களைப் பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

8 hours ago

ஆன்மிகம்

11 hours ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

10 days ago

ஆன்மிகம்

16 days ago

ஆன்மிகம்

18 days ago

ஆன்மிகம்

18 days ago

ஆன்மிகம்

18 days ago

ஆன்மிகம்

18 days ago

ஆன்மிகம்

19 days ago

ஆன்மிகம்

23 days ago

ஆன்மிகம்

23 days ago

ஆன்மிகம்

24 days ago

மேலும்