நபிகள் நாயகம் பேசிய தமிழ்

By ஜே.எம்.சாலி

அருணகிரிநாதர் முருகனைச் சிறப்பித்துப் பாடிய திருப்புகழை அடிக்கடி பாடி மகிழ்ந்து கொண்டிருந்தார் காயல்பட்டிணத்தைச் சேர்ந்த தமிழாசிரியர் திருவடிக் கவிராயர். அவருடைய மாணவர்கள் ஆர்வத்தோடு கேட்பார்கள். “திருப்புகழுக்கு மறு புகழ் உலகில் எங்குமே கிடையாது. உங்களால் ஒரு திருப்புகழைப் படைக்க முடியமா?” என்று மாணவர்களைக் கேட்டார். “முடியும்!” என்று முன்வந்தார் மாணவர் காசிம். “உன்னால் அதைச் செய்ய முடியாது” என்று மறுத்தார் ஆசிரியர்.

“உங்கள் ஆசி கிடைத்தால் நான் ஒரு திருப்புகழைப் பாடி முடிப்பேன்!” என்று உறுதியுடன் சொன்னார் காசிம். “உன்னால் முடிந்தால் ஒரு திருப்புகழை இயற்று!” என்று அன்புடன் கூறினார் திருவடிக் கவிராயர். இது கதையல்ல, முந்நுாறு ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த சம்பவம்.

நபிகளின் முதல் வார்த்தை

நபிகள் நாயகத்தின் பேரில் திருப்புகழைப் படைக்க முடிவு செய்தார் காசிம் புலவர் அதை எப்படித் தொடங்குவது என்ற சிந்தனை ஏற்பட்டது. அதனால், முறையாக இறைவனைத் தொழுது, நபிமணியின் நல்லாசியுடன் பாட விரும்பி, காயல்பட்டணம் பெரிய பள்ளிவாசலுக்குச் சென்று தொழுதார். பிறகு, நபிகள் நாயகம் அவர்களின் நல்லாசியை வேண்டினார் காசிம் புலவர்.

“நபி நாயகமே! உங்கள் புகழ் போற்றும் திருப்புகழை நான் இயற்ற வேண்டும். தொடக்க வாசகத்தைத் தாங்களே எனக்குச் சொல்லித்தர வேண்டும். அன்புகூர்ந்து ஆரம்பச் சொல்லை அறிவியுங்கள்,அண்ணலே!” என்று பணிவன்புடன் அவர் கேட்டுக்கொண்டார். பலநாள் தவமிருந்தார். ஒருநாள் இரவில் காசிம் புலவரின் கனவில் நபிகள் நாயகம் காட்சி தந்து, ‘பகரும்’ என்ற தமிழ்ச் சொல்லைக் கூறினார்கள். அளவற்ற மகிழ்ச்சியடைந்த புலவர் திருப்புகழை இசைக்கத் தொடங்கினார்.

“பகரும் உருவிலி யருவிலி வெருவிலி சிறிதும் ஒருதலை பயிலிலி துயிலிலி பருவிணுனர்விலி துணையிலி யிணையிலி விரிவான பழைய சதுமறை முழுவது முணர்பவர் பசிய தமிழ்வளர் துறவற முளரெவரு பரவ வரிதரி தொரு பொருடிருவுள - வருளாலே”

முதல் பாடலை இப்படித் தொடங்கி சரளமாகப் பாடிக்கொண்டிருந்த புலவர் “வளமலிய பசியவிழ மடல்விரியும்” என்று தொடங்கும் 38-ம் பாடலுக்கு வந்தபோது சுயநினைவை இழந்துவிட்டார். எங்கே போகிறோம் என்பது தெரியாமல் நடந்து கொண்டிருந்தார்.அந்தப் பாடலை முடிக்க முடியாமல் மக்கா நகரைக் குறிப்பிடும் ‘மக்கப்பதி மக்கப்பதி’ என்ற சொல்லை மட்டுமே உச்சரித்துக்கொண்டிருந்தார்.

மக்கப்பதி சொர்க்கபதி

காயல்பட்டணத்தின் தெற்கில் திருச்செந்துாருக்குச் செல்லும் வழியிலுள்ள மகுதுாம் பள்ளியைத் தாண்டிவிட்டார். அருகில் ஒரு பெரிய குளம். காசிம் புலவர் தன்னை மறந்து பாடிக்கொண்டே அந்தக் குளத்தில் இறங்கிவிட்டார். கழுத்தளவுக்குத் தண்ணீர் சூழ்ந்தபோதும் அடுத்த சொல் கிடைக்காமல் ‘மக்கப்பதி மக்கப்பதி’ என்றே சொல்லிக்கொண்டிருந்தார்.

அடுத்த சொல் கிடைக்காமல் அவர் திக்கித் திணறிக் கொண்டி ருந்த போது முஹம்மது நபி அவர்கள் தோன்றி ’சொர்க்கப்பதி’ என்ற தமிழ்ச் சொல்லைக் கூறினார்கள்..

‘மக்கப் பதிக்குமுயர் சொர்க்கப் பதிக்கும் இரசூலே’ என்று பாடிவிட்டு, அடுத்த பாடல்களை இசைத்தார். மொத்தம் 141 பாடல்களுடன் திருப் புகழை நிறைவு செய்தார் காசிம் புலவர்.

ஆசிரியர் திருவடிக் கவிராயரிடம் திருப் புகழை ஒப்படைத்தார். திரும்பத் திரும்ப அந்த சந்தக் கவிகளைப் பாடிப் பரவசமடைந்தார் அவர். தனது சீடரின் சிறப்பைப் பாராட்டி சாற்றுக்கவியும் பாடினார். “விண்மேல் கொடிகட்டித் தாவுநல் காசிம்புலவர் கொழுங்கவியே” என்று புகழ்ந்தார் .

நபிகள் நாயகத்தின் தமிழ்க் குரலைக் கேட்கும் பாக்கியத்தைப் பெற்ற வரகவி, அருள்கவி எனப் போற்றப்படுகிறார் 17-ஆம் நுாற்றாண்டில் திருப்புகழ் படைத்த காசிம் புலவர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

4 hours ago

ஆன்மிகம்

11 hours ago

ஆன்மிகம்

11 hours ago

ஆன்மிகம்

11 hours ago

ஆன்மிகம்

13 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

மேலும்