ஒரு சீடன் அத்வைத பாடம் படித்துக்கொண்டி ருந்தான். எல்லாமே பிரம்மம் என்று குரு சொல்லிக்கொடுத்தார்.
“எல்லாமே பிரம்மம் என்றால் நானும் பிரம்மமா?” என்று சீடன் கேட்டான்.
“ஆமாம்” என்றார் குரு.
“இந்தக் குடிசை?”
“பிரம்மம்தான்.”
“இந்த ஆடு?”
“அதுவும் பிரம்மம்தான்.”
சீடனின் ஆச்சரியத்துக்கு அளவே இல்லை. தன்னையும் தன்னைச் சுறியுள்ள சகல உயிர்களையும் உயிரற்ற பொருள்களையும் பிரம்மமாக எண்ணிப் பார்க்கத் தொடங்கி னான். அந்த எண்ணமே பரவசமூட்டுவதாக இருந்தது. காற்றில் மிதப்பதுபோன்ற உணர்வு ஏற்பட்டது.
மறுநாள் கடைத்தெருவில் அவன் நடந்து போய்க் கொண்டிருந்தபோது மதம் கொண்ட யானை ஒன்று ஆக்ரோஷமாக ஓடி வந்தது. எல்லோரும் அதைக் கண்டு விலகி ஓடினார்கள். இந்தச் சீடன் மட்டும் ஓடவில்லை. யானையின் மீது இருந்த பாகன் இவனைப் பார்த்து “ஓடு ஓடு” என்று கத்தினான். இவனோ கண்டுகொள்ளவே இல்லை. ஆனந்தமாகப் போய்க்கொண்டிருந்தான்.
அருகில் வந்த யானை இவனை ஒரு தட்டுத் தட்டியது. இவன் பல அடி தூரம் போய் விழுந்தான். உடலெல்லாம் ரத்த காயம்.
சிகிச்சை முடிந்து ஆசிரமத்துக்கு வந்தவனிடம் குரு கேட்டார்:
“யானையைப் பார்த்ததும் நீ ஏன் தப்பி ஓடவில்லை?”
“யானையும் பிரம்மம், நானும் பிரம்மம். ஒரு பிரம்மம் இன்னொரு பிரம்மத்தைப் பார்த்து ஏன் ஓட வேண்டும்?” என்றான் சீடன்.
“யானை மேல் இருந்தவனும் பிரம்மம்தானே. அந்த பிரம்மம் சொன்னதை நீ கேட்டிருக்கலாமே?” என்று சொல்லிச் சிரித்தார் குரு.
இந்தக் கதை ஒரு முக்கியமான கேள்வியை எழுப்புகிறது. எல்லாமே பிரம்மம் என்பது உண்மை என்றால் ஏன் ஒரு பிரம்மத்தைப் பார்த்து இன்னொரு பிரம்மம் ஓட வேண்டும்? ஏன் ஒரு பிரம்மம் இன்னொரு பிரம்மத்தைத் தாக்க வேண்டும்? ஒரு பிரம்மம் ஏன் இன்னொரு பிரம்மத்தைக் காப்பாற்றவோ அழிக்கவோ செய்ய வேண்டும்? பிரம்மமே எல்லாவற்றுக்கும் ஆதாரம் என்பது உண்மை என்றால் இவை எல்லாம் பொய் ஆகின்றன.
ஐம்புலன்களாலும் அறிவாலும் உணர்ந்து அனுபவிக்கும் இவற்றை எல்லாம் பொய் என்று எப்படிச் சொல்ல முடியும்? இவை இரண்டில் ஏதாவது ஒன்றுதான் பொய்யாக இருக்க முடியும் அல்லவா?
தத்துவத் தேடலில், குறிப்பாக அத்வைதத்தில் மிக முக்கியமான கேள்வி இது. இரண்டுமே உண்மைகள்தான், ஆனால் இரண்டு உண்மை களும் மாறுபட்டவை அல்லது சார்பு நிலை கொண்டவை என்று இதற்கு பதில் சொல்லப்படுகிறது.
எல்லாமே பிரம்மம் என்பது பாரமார்த்திக சத்தியம் அதாவது நிரந்தரமான, முழுமையான உண்மை. நம் உடல், மனது, நம்மைச் சுற்றியுள்ள பொருள்கள், மனிதர்கள் முதலானவை வியவஹாரிக சத்தியம் அதாவது நடைமுறை உண்மை. நடைமுறை வாழ்வைப் பொறுத்தவரை, யானை வேறு, பாகன் வேறு, சாலையில் நடப்பவர் வேறு. கடன் கொடுத்தவர் வேறு, கடன் வாங்கியவர் வேறு.
இன்னொரு உண்மையும் இருக்கிறது. அது ப்ராதிபாசிக சத்யம் (அகவயமான உண்மை). அதாவது, ஒருவரின் கனவு, கற்பனைகள், கடவுளை நேரில் கண்ட அனுபவங்கள் ஆகியவை இதில் சேரும். இவை எல்லோருக்கும் பொதுவான உண்மைகளல்ல. இவற்றில் எதையும் அவர் நிரூபிக்க முடியாது. இவை அவருக்கு நேரவில்லை என்பதைப் பிறரும் நிரூபிக்க முடியாது. இது அனுபவித்தவருக்கு மட்டுமேயான உண்மை.
எல்லாமே பிரம்மம் என்பது நிரந்தரமான உண்மை. ஆனால் அந்த உண்மையை நாம் நடைமுறை வாழ்வில் உணர முடியாது. நடைமுறை வாழ்வைத் தாண்டிய நிலையிலேயே இந்த உண்மையை உணர முடியும் என்று தத்துவ நூல்கள் சொல்கின்றன. இதை உணர்ந்தவர்களுக்கு இந்த உலகம் பொருளற்றதாகிவிடுகிறது. பேதங்கள் இல்லாமல் ஆகிவிடுகின்றன. இது தத்துவத்தில் மிக உயர்ந்த நிலை. லட்சிய நிலை.
இந்த லட்சிய நிலையில் பேதங்கள் இல்லை. நடைமுறை வாழ்வில் வித்தியாசங்கள் உள்ளன. ஆனால் இந்த வித்தியாசங்கள் தாற்காலிகமானவை என்பதை உணர்ந்து இவற்றைக் கையாள வேண்டும் என்பதற்காகவே நிரந்தர உண்மைகள் எல்லோருக்கும் கற்பிக்கப்படுகின்றன. அந்த உண்மையை உணரும் பாதையில் பயணிப்பவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக வித்தியாசங்களைத் துறந்துவிடுவார்கள். முற்றிலும் துறக்கும் நிலைதான் உயிரோடு இருக்கும்போதே பெறும் மோட்சம்.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
21 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago