மீனால் விழுங்கப்பட்ட இறைத்தூதர்

By இக்வான் அமீர்

எல்லையே தெரியாத அந்த நீலக்கடலில் வெள்ளை நிற அலைகள் உருண்டு வந்து கப்பலின் பக்கவாட்டில் ‘தட்.. தட்..’ என்று சத்தத்துடன் மோதின. கப்பலில் பயணிகள் கூட்டம் அளவுக்கு அதிகமாக இருந்தது. துடுப்புப் போட்டும், பாய் மரங்களை ஏற்றியும் அந்தக் கப்பல் நகரவே இயலாமல் தத்தளித்தது. முன்னும், பின்னுமாய் அலை மோதியது. நீரில் மூழ்கிவிடும் நிலையில் இருந்தது. கப்பல் தலைவர் எவ்வளவோ முயன்றும் முடியாமல் போனது. கப்பலில் அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றியதால் வந்த வினை என்று அவருக்குப் புரிந்துபோனது.

“ஏறாதீர்.. எடை அதிகமாகிவிடும்.. என்றால் கேட்டால்தானே. நான் ஒருவன்தான..! நான் ஒருவன்தான்..! அவசரமாய் செல்ல வேண்டும் என்று ஒவ்வொருவராய் ஏறிக்கொண்டால்.. கப்பலில் எடை கூடாமல் வேறென்னவாகும்? ம்.. இதற்கு ஒரேயொரு வழிதான் உண்டு. இல்லையென்றால் எல்லோரும் ஜல சமாதிதான்!”

அந்த நாட்களில் கடல் பயணங்களின் அபாயகரமான வேளைகளில் சீட்டுக் குலுக்கிப் போடும் வழக்கம் பின்பற்றப்பட்டு வந்தது. கப்பல் தலைவர் பயணிகளிடம் நிலைமையை விளக்கிக் சொன்னார். தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் எல்லோருக்கும் ஆபத்து என்று எச்சரித்தார். அவருடைய முடிவுக்குப் பயணிகள் வேறு வழியின்றி உடன்பட்டனர்.

துக்கத்தில் இருந்த பெரியவர்

பயணிகள் மனங்களில் பயம் அப்பிக் கொண்டது. ஆனால், ஓர் ஓரத்தில் அமர்ந்திருந்த பெரியவர் மட்டும் எதையும் கவனிக்கும் நிலையில் இல்லை. அவரது மனம் துக்கத்தால் கனத்துப் போயிருந்தது. தனது போதனைகள் மக்களால் நிராகரிக்கப்பட்டதால் உண்டான துன்பம் அது. அந்த விரக்தியுடனேயே ஊரைவிட்டு கிளம்பிவிட்டிருந்தார் அவர்.

இந்நிலையில்தான் சீட்டுக் குலுக்கிப் போட்டார் கப்பலின் தலைவர். சீட்டை எடுத்தார். பயணிகள் மனதில் ஆர்வம், பயம் கலந்த உணர்வுகள் அலை மோதின. அந்த துரதிஷ்டசாலி யார்? . வந்த சீட்டில் ‘யூனுஸ்’ என்ற பெயர் வந்தது. அதுதான் கப்பலில் விரக்தியாக ஒதுங்கியிருந்த பெரியவரின் பெயர்.

பயணிகள் அனைவரும் திடுக்கிட்டார்கள். அவர்களது பார்வை அந்தப் பெரியவர் பக்கம் திரும்பியது. தமது போதனைகள் எதுவும் எடுபடவில்லை என்ற சோகத்தில் லயித்திருந்த இறைவனின் திருத்தூதர் யூனுஸ்தான் அவர்.

இறைவனின் தூதரான இவரைக் கப்பலிலிருந்து எறிய முடியாதென பயணிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அவர்கள் சொன்னதை யூனுஸ் ஏற்கவில்லை.

“சகோதரர்களே! என் போதனைகளைப் புறக்கணித்த ஊர்வாசிகளிடம் வெறுப்படைந்து அங்கிருந்து வெளியேறி வந்தேன். எஜமானன் பணித்த பணியை செய்யாமல் ஓடிவந்த பணியாளைப் போல நான் ஆகிவிட்டேன். அதனால், நான் தண்டிக்கப்பட வேண்டியவன்தான். அதனால், என்னை கடலில் எறிந்துவிட்டு உங்கள் பயணத்தைத் தொடருங்கள்” என்றார். கடைசியில் யூனுஸ் கடலில் தூக்கிவீசப்பட்டார்.

அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. எங்கிருந்தோ வந்த ஒரு மீன் அவரை விழுங்கியது. மீனின் வயிற்றில், அந்த இருட்திரைக்குள் தன்னை சீர்ப்படுத்திக்கொள்ள அவருக்கு அவகாசம் கிடைத்தது. “இறைவா! இதுவும் உனது கருணைதான்! மீன் என்னை விழுங்கியது. இருப்பினும் நான் உயிருடன் இருக்கிறேன். உண்மையில் இது உன் அருள்தான். சந்தேகமின்றி எனக்கு நானே அநீதி இழைத்துக் கொண்டேன். உன் கட்டளைகள் வரும் முன்னரே என் சமுதாயத்தாரைக் கைவிட்டு வந்துவிட்டேன். குற்றம் புரிந்துவிட்டேன் மன்னித்தருள்!” என்று வேண்டி நின்றார்.

இறைவன் யூனுஸ்ஸின் பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டான். சீர்த்திருத்தவாதி மனம் தளரக்கூடாது என்பதை அவருக்கு உணர்த்தி மீனின் வயிற்றிலிருந்து காத்தருளினான். ‘மீன்காரர்’, ‘மீனால் விழுங்கப்பட்டவர்’ என்று சிறப்புப் பெயருக்கும் அவர் உரியவரானார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

17 hours ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

9 days ago

மேலும்