நல்ல தோட்டக்காரன் யார்?

By யோகன்

ஒரு பணக்காரனுக்குச் சொந்தமாக ஒரு திராட்சைத் தோட்டம் இருந்தது. அந்தத் தோட்டத்தைச் சுற்றிலும் வேலி அமைத்திருந்தான். அந்தத் தோட்டத்தைக் தோட்டக்காரரின் பொறுப்பில் விட்டுவிட்டு வெளியூருக்குப் போனான்.

தோட்டத்தில் திராட்சைகள் காய்க்கும் காலம் நெருங்கியது. திராட்சைக் கனிகளை வாங்கிக்கொண்டு வரும்படி தன் வேலைக்காரர்களைத் தோட்டக்காரரிடம் அனுப்பினான்.

தோட்டத்தின் கனிகளைத் தானே எடுத்துக்கொள்ள விரும்பிய தோட்டக்காரனும் அவனது கூட்டாளிகளும் வேலைக்காரர்களைத் தாக்கினார்கள். ஒருவனை அடித்து விரட்டினார்கள். ஒருவனை அடித்துக் கொலைசெய்தார்கள். ஒருவனைக் கல்லெறிந்து கொன்றார்கள்.

இதைக் கேள்விப்பட்ட முதலாளி மிகுந்த கோபம் அடைந்தான். மேலும் அதிகமான அளவில் வேலைக்காரர்களை அனுப்பினான். தோட்டக்காரர்னும் அவன் ஆட்களும் இவர்களையும் அடித்து, விரட்டி, கொலை செய்து அராஜகம் செய்தார்கள்.

முதலாளியின் கோபம் உச்சத்துக்குப் போயிற்று. தன் மகனை அனுப்ப முடிவுசெய்தான். மகனைப் பார்த்தாலாவது அவர்களுக்கு நல்ல புத்தி வருமா என்று பார்க்கலாம் என்று நினைத்தான். தன் மகனுக்கும் ஆபத்து நேரலாம் என்பது தெரிந்தும் அவன் தைரியமாக அனுப்பினான்.

தோட்டக்கானுடைய கும்பல் மகனையும் கொன்றது.

இந்தக் கதையைத் தன் சீடர்களிடம் சொன்ன இயேசு கிறிஸ்து, “இப்போது திராட்சைத் தோட்டத்தின் சொந்தக்காரன் என்ன செய்வான்?” என்று கேட்டார்.

அதற்கு அவர்கள், “தோட்டக்காரனுக்கும் அவன் கும்பலுக்கும் உரிய தண்டனை தருவான். அவர்களைக் கொல்லுவான் அல்லது அரசரிடம் சொல்லி அவர்களுக்கு மரண தண்டனை கிடைக்க ஏற்பாடு செய்வான்” என்றார்கள்.

“தோட்டத்தை என்ன செய்வான்?” என்று கேட்டார் இயேசு.

“உரிய காலங்களில் தனக்குக் கனிகளைக் கொடுக்கக்கூடிய வேலைக்காரனைத் தேடிப் பிடித்து அவன் பொறுப்பில் தோட்டத்தை ஒப்படைப்பான்” என்றார்கள் சீடர்கள்.

“தேவனுடைய ராஜ்யத்தை துஷ்பிரயோகம் செய்பவனிடத்திலிருந்து அது நீக்கப்படும். அதற்குத் தகுதியுடைய நபருக்கு தரப்படும்” என்றார் இயேசு.

ஆதாரம்:

மத்தேயு 21:33-44

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE