படித்து முடித்ததும் வேலை, கை நிறைய சம்பளம் கிடைத்தால் அதுதான் தலைசிறந்த கல்வி என்பதுதான் இன்றைய பெற்றோர்களின் பார்வை. ஆனால் தலைசிறந்த கல்வி என்பது அதுவல்ல என்று அழுத்தம் திருத்தமாக வழிகாட்டுகிறது விவிலியம். “மற்றவனுக்குப் போதிக்கிற நீ உனக்குத்தானே போதியாமலிருக்கலாமா? களவு செய்யக் கூடாதென்று பிரசங்கிக்கிற நீ களவு செய்யலாமா? விபசாரம் செய்யக் கூடாதென்று சொல்லுகிற நீ விபசாரம் செய்யலாமா? “(2:21) என்கிறது ரோமர் புத்தகம்.
முன்மாதிரிக் கல்வி
சொல், செயல் இரண்டிலும் முன்மாதிரியாகத் திகழ்வதே பெற்றோர்கள் பிள்ளைகளுக்குத் தரும் மிகச் சிறந்த கல்வி. பேச்சிலும் நடத்தையிலும் சிறந்த முன்மாதிரியாக இல்லாமல் தங்கள் பிள்ளைக்கு அறிவுரை அல்லது ஆலோசனைகள் வழங்கினால் அதைக் குழந்தைகள் ஒரு காதால் கேட்டு மற்றொரு காதால் விட்டுவிடுவார்கள். முன்மாதிரியாக இல்லாத பெற்றோர்களுடைய வார்த்தைகள் வலுவிழந்து போய்விடும்.
எடுத்துக்காட்டாக நேர்மையைப் பற்றிப் பிள்ளைக்குக் கற்றுக்கொடுக்க விரும்பினால், முதலில் பெற்றோர்கள் நேர்மையாக நடந்துகொள்ள வேண்டும். பல சந்தர்ப்பங்களில் போன் வந்தால், “அப்பா அல்லது அம்மா வீட்டில் இல்லை” என்று உண்மைக்குப் புறம்பாகச் சொல்லும்படி பிள்ளையிடம் பெரும்பாலான பெற்றோர்கள் கூறுகின்றனர். இவ்வாறு செய்யும்போது நமது அப்பா, அம்மா இருவரும் பொய் கூறுவதை ஒழுங்கீனமாகக் கருதவில்லை என்ற முன்மாதிரியைக் கற்றுக்கொள்கிறார்கள்.
பிறகு அதே தவறைப் பிள்ளைகள் செய்யும்போது “வீட்டில் இருந்துகொண்டே இல்லை என்று பொய் சொல்கிறாயே!?” எனப் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்து கேட்கும் தருணம் பிள்ளைகளைக் குழப்பத்தில் ஆழ்த்தும். மேலும் காலப்போக்கில் சிக்கலான சூழ்நிலையைப் பிள்ளைகள் எதிர்கொள்ளும்போது எவ்விதக் குற்றவுணர்ச்சியுமின்றிப் பொய் சொல்ல ஆரம்பித்துவிடலாம். எனவே பிள்ளைகள் நேர்மையாளராக வளரப் பெற்றோர்களின் முன்மாதிரியே அடிப்படைக் கல்வியாக அமைகிறது.
மிக மோசமான கல்வி
இன்று பெற்றோர்களிடமிருந்து கோபம் என்ற மிக மோசமான கல்வியொன்றைக் குழந்தைகள் எளிதில் கற்றுக்கொள்கிறார்கள். “என் மகன்/மகள் கோப்படுவது எவ்வளவு அழகாக இருக்கிறது பாருங்கள்” என்று ஐந்து வயதைத் தாண்டாத தம் பிள்ளைகள் பெரியவர்களைப் போலக் கோபப்படுவதைப் பார்த்துப் பெருமிதம் கொள்ளும் இளம் பெற்றோர்கள் நிறையவே இருக்கிறார்கள்.
சிறு வயது கொண்ட உங்கள் பிள்ளைகள் இவ்வாறு பெரியவர்களைப் போல் கோபம் கொள்வதை அல்லது கோபப்படுவதுபோன்ற பாவனையைச் செய்வதை எங்கிருந்து கற்றுக்கொண்டதாக நினைக்கிறீர்கள்? உங்களது கோபமான நடத்தையிலிருந்தே அவற்றைக் கற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்பதை நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். சட்டியில் இருந்தால் மட்டுமே அகப்பையில் வரும் என்று முன்னோர்கள் சொன்ன வழக்காறு இதற்கும் பொருந்தும்.
செய்து பாருங்கள்
நீங்கள் குடும்பத் தலைவர் என்றால் நீங்களும் உங்கள் மனைவியும் காரசாரமாகப் பேசிக்கொள்ளக் கூடாது என முதலில் முடிவு செய்யுங்கள். ஒருவருக்கொருவர் மரியாதை காட்டுங்கள். கோபப்பட்டாலும் கத்திப் பேசாதீர்கள். இப்போது உங்களைப் போன்ற தோரணையில் கோபப்பட்டதாக நீங்கள் பெருமிதப்பட்ட உங்கள் பிள்ளைகளைப் பாருங்கள். அவர்களும் உங்களைப் போலவே நடந்துகொள்வார்கள்.
உங்கள் சொல்லைவிடச் செயல்தான் அதிகப் பலன் தரும். இப்போது மற்றவர்களுடன் பேசும்போது உங்கள் பிள்ளைகள் மரியாதையுடனும் சாந்தமாகவும் நடந்துகொள்வதைப் பார்க்கும்போது உங்கள் மனம் மகிழ்ச்சியால் துள்ளும்.
கலாத்தியர் புத்தகம் 6:7 வசனத்தில் விவிலியம் இப்படிக் கூறுகிறது: “மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்.” உயர்ந்த ஒழுக்க நெறிகளைக் கொண்டவர்களாக உங்கள் பிள்ளைகள் வளர வேண்டும் என்று விரும்புகிற பெற்றோர்கள் நீங்கள் என்றால் முதலில் இத்தகைய தகுதிகளைக் கற்றுத்தரும் பள்ளிக்கூடமாக நீங்கள் மாறுங்கள்.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
3 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
8 days ago