அமராவதி ஆற்றங்கரையில் பொன்மாரியம்மன்

By க.சே.ரமணி பிரபா தேவி

முளையாம்பூண்டி கிராமத்தில் எழுந்தருளி இருக்கும் கிராம தேவதை பொன் மாரியம்மன். பாண்டிய நாட்டில் குடிகொண்டிருக்கும் மதுரை மீனாட்சியின் ஓர் அம்சம், கொங்கு நாட்டில் கோவில் கொண்டுள்ள அம்மன் என்கிறது தல புராணம்.

சங்க கால இலக்கியங்களில் பாடப்பெற்ற 'ஆண்பொருணை ஆறு' என்று புகழப்படும் அமராவதி ஆற்றங்கரையில்தான் வீற்றிருக்கிறாள் இந்தப் பொன்மாரி.

அம்மை நோய், மன நோய் உட்படப் பல நோய்களைத் தீர்க்கும் தெய்வமாக மக்கள் இவளை வழிபடுகிறார்கள். விவசாயம் செழிக்க மழை தரும் மாரி, செல்வ வளம் தரும் தாய் என்றெல்லாம் போற்றுகிறார்கள். பக்தர்களுக்கு உற்ற துணை இந்தப் பொன் மாரி.

தானியங்களைக் காத்த கோயில்

கொங்கு வேளாளர்கள் சமுதாயத்தில் விவசாயம் சார்ந்த பணிகள்தான் பிரதானம் என்பதால், வீட்டில் தானியக் கிடங்குகளும், வேளாண்மைப் பொருட்களும் நிறைந்து கிடக்கும். அங்கு மூட்டைப்பூச்சிகள் அதிகம் வந்து தொல்லை கொடுத்தன. என்னென்னவோ செய்தும் அவற்றின் தொல்லை தீரவில்லை.

கடைசியில் கொள்ளுப் பருப்புகளை மாரியம்மனின் சன்னிதிக்கு வெளியில் வைக்கப்பட்ட குதிரைக் காலடியில் தெளிக்க, சில நாட்களிலேயே மூட்டைப்பூச்சியின் தொல்லை ஒழிந்தது என்கிறார்கள். மன்மத வருடம், வைகாசி மாதம் 5-ம் நாள், திருப்பூர் மாவட்டம், முளையாம்பூண்டி கிராமத்தில் தொடங்கி இருக்கிறது கொங்கு நாட்டு காடை குல மக்களின் பெருந்திருவிழா.

இவ்வூரின் வட எல்லையில் கோபி, சேலம், தென் எல்லையில் ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், மேற்கே பொள்ளாச்சி, ஆனைமலை, கோயம்புத்தூர், கிழக்கே அரவக்குறிச்சி, கரூர் என எல்லா எல்லைகளிலும், ஆயிரக்கணக்கான மைல்கள் சுற்றளவில் விரவிக் கிடக்கும் காடை குல மக்கள் மகிழ்ந்து கொண்டாடும் திருவிழா இது.

லட்சக்கணக்கான மக்கள் கூடும் இத்திருவிழா ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை கொண்டாடப்படுகிறது. கோயம்புத்தூர் கெளமார மட ஆதீனம் இந்தக் கோயிலின் குடிகளில் ஒருவர்.

அட்டு மாத்துதல்

இரட்டைப் பொங்கல், இரட்டைக் கிடாய் என்பது இவ்விழாவின் பாரம்பரியம். 15 நாட்கள் நடக்கும் இத்திருவிழாவின் முதல் செவ்வாய்க் கிழமை, அட்டு மாத்துதல் விழா நடைபெறும். வடிசோற்றையும், பாசிப்பயிற்றுக் குழம்பையும் புது மண்பானையில் இட்டு கோவிலுக்கு எடுத்துச் செல்லுதலையே இவ்விழா குறிக்கும். பொங்கல் சாட்டுதல் என்பது கிராமசபை கூடி பொங்கல் தேதியினை அறிவிக்கும் நாள்.

கம்பம் நாட்டுதல், அம்மனாய்ப் பாவிக்கப்படும் கம்பத்துக்கு உரிய மரத்தைத் தேர்ந்தெடுக்கும் விழா ஆகும். படைக்களம் என்பது பொன் மாரி அம்மனுக்கான போர்க்கருவிகளுக்குப் பூஜை செய்யும் விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

நீர் வார்த்தல்

இரண்டாம் செவ்வாயன்று அம்மனுக்கு அர்ச்சனை, அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் சிறுவர்கள், பெண்கள், பெரியவர்கள், ஆகியோர் குடம் குடமாகக் கம்பத்துக்கு நீர் ஊற்றிக் களிப்பர்.

மாவிளக்கு

மூன்றாம் செவ்வாயன்று மாவிளக்கு எடுக்கும் வைபவம். ஏர் பொங்கல், வேளாண்மையின் முதன்மைப் பொருளான ஏர்க் கலப்பையைத் தெய்வமாக எண்ணிப் பொங்கல் வைப்பது.

குட்டைக்கு அரிசி

குட்டைக்கு அரிசி மாற்றுதல், குளம், குட்டைக்கு அருகில் உள்ள கிராமத்து எல்லையின் முனைகளில் இருக்கும் ஒவ்வொரு கோயிலிலும் அரிசியை வைத்து மாற்றும் நிகழ்ச்சி. வாண வேடிக்கை, கரக ஆட்டம் போன்ற கொண்டாட்டங்கள் உண்டு.

கலை நிகழ்ச்சிகள்

புதன்கிழமையன்று பல்லாயிரக்கணக்கான மக்களின் முன்னிலையில் கம்பம், கும்பம் ஆகியன ஆற்றில் விடப்படும்.

கிடாய் தானம்

வியாழக்கிழமை காவல் தெய்வமான முத்துக் கருப்பணசாமிக்கு பொங்கல் நிவேதனம் செய்யப்படும். ஆடு மற்றும் எருமைக் கிடாய்கள் அம்மனுக்குத் தானமாய் வழங்கப்படும் பின்னர் அவற்றில் எருமைக் கிடாய்கள் ஏலமிடப்பட்டு, அம்மனின் பொது நிதியில் சேர்க்கப்படும். வீடுகளில் மஞ்சள் நீர் விளையாட்டு, வாண வேடிக்கை போன்ற நிகழ்வுகளுடன் விழா நிறைவுறும்.

நேர்த்திக் கடன்கள்

குழந்தைப் பேறு, நோய் நீங்குதல் போன்ற பல நேர்த்திக் கடன்களுக்காகக் குதிரை பொம்மை, வாகனங்கள் முதலிய பொம்மைகள் சிற்றுருவங்களாய்ச் செய்யப்பட்டு அம்மனுக்கு அளிக்கப்படும்.

சேற்று வேடம்

இப்போது பெரிதும் பேசப்படுகிற மண் குளியல் சிகிச்சை, காலங்காலமாகப் பொன் மாரியம்மன் கோயிலில், “சேற்று வேடம் போடுதல்” என்னும் வழக்கமாய் இருந்து வருகிறது. அம்மை நோய் வந்தவர்களும், ஆறாத கொப்பளங்கள் மற்றும் புண்களால் பாதிக்கப்பட்டவர்களும் அம்மனை வேண்டிக்கொண்டு, உடல்நிலை சரியானவுடன் இந்த வேடத்தைச் சில மணி நேரங்களுக்குப் போடுவது தொன்றுதொட்டு வரும் வழக்கம்.

மக்கள் அமராவதி ஆற்றங்கரையில் வெள்ளமெனத் திரண்டிருக்கும் காட்சியைக் கண்டால் பக்தியோடு சேர்ந்து அம்மன் மீது பாசமும் சுரக்கிறது.

படங்கள்: செந்தில், தாமோதரன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

மேலும்