வாழ்வு வளம் பெற

By ஜி.விக்னேஷ்

புண்ணிய பலன் இருந்தால் நல்வாழ்வைப் பெறத் தடையேதும் இல்லை என்பது ஐதீகம். இந்த தடையேற்படுத்தும் பாவம் நீங்க அருளுபவர் பாபநாசநாதர். இவர் மூலவராகக் காட்சி அளிப்பது பாபநாசம் என்ற தலத்தில். இங்கு எழுந்தருளியுள்ள இப்பெருமான் இந்திரனின் பிரம்மஹத்தி தோஷத்தை நீக்கியவர். இந்திரனின் பாவத்தையே நாசம் செய்த இவருக்கு பாபநாச நாதர் என்ற சிறப்புப் பெயர் உண்டு. அம்பாள் பெயர் உலகம்மை, விமலை, உலக நாயகி. ஊரின் பெயர் பாபநாசம். சூரிய கைலாயம் என்ற பெயர் கொண்ட இவ்வூர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளது.

தலமாக மாறிய வரலாறு

அகத்திய முனிவரின் சீடர்களுள் முதன்மையானவர் உரோமச முனிவர். இவர் திருநெல்வேலி மாவட்டத்தில் வற்றாத நதியாக ஓடிக் கொண்டிருக்கும் தாமிரபரணி ஆற்றங்கரையில் பல இடங்களில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்ய விரும்பினார். இதற்கான தலங்களைத் தேர்ந்தெடுக்க வழிகாட்டுமாறு தனது குருவான அகத்தியரைக் கேட்டார்.

அவரோ ஒரு புதுமையான கருத்தினைக் கூறினார். சுழித்து ஓடும் இந்த தாமிரபரணி ஆற்றில் ஒன்பது தாமரை மலர்களை வீசுமாறு கூறினார். அவை எங்கெங்கே கரை ஒதுங்குகிறதோ அங்கெல்லாம் சிவப்பிரதிஷ்டை செய்யுமாறு அகத்தியர் கூறினார். அம்மலர்கள் தனித்தனியே ஒன்பது இடங்களில் கரை ஒதுங்கின. எனவே இந்தச் சிவன் கோயில்களுக்கு நவ கைலாயத் தலங்கள் என பெயர் ஏற்பட்டது. மேலும் சைவ நெறியில் நவகிரகங்கள் தான் ஒன்பது என்ற கணக்கில் கூட்டுத் தெய்வங்களாக உள்ளன. அவற்றில் ஒவ்வொன்றுக்கும் முக்கியத்துவம் தரும் வகையில் இந்த நவ கைலாயம் அமைந்துள்ளது. தாமரை மலர் முதலில் ஒதுங்கிய இடமே பாபநாசம். நவகிரகங்களில் தலைமையாக மட்டுமல்லாமல் முதன்மையான கிரகமாகச் சூரியன் இருப்பதால், பாபநாசத்திற்கு சூரியத் தலம் என்ற மற்றொரு காரணப் பெயர் ஏற்ப்பட்டது.

தல புராணம்

கயிலையில் சிவனுக்கும் பார்வதிக்கும் திருமணம் நடந்தது. உலக மக்கள் அனைவரும் இந்த அருங்காட்சியைக் காணக் கைலாயத்தில் குவிந்தனர். உலகம் குடை சாயத் தொடங்கியது. அதனால் பாரத்தைச் சமநிலைப்படுத்த சிவன் அகத்தியரைத் தென் திசைக்கு அனுப்பினார். அதனால் அப்போது அக்காட்சியைக் காண இயலாத அகத்தியருக்குப் பின்னாளில் இத்தலத்தில் தனது திருமணக் கோலத்தை காட்டி அருளினார் சிவன். அதனை நினைவுகூரும் விதமாக, பாபநாசநாதர் கருவறைக்குப் பின்புறம் உள்ள பிராகாரத்தில் கைலாய நாதன் ரிஷப வாகனரூபனாகத் திருமணக் கோலத்தில் அம்பாளுடன் காட்சி அளிக்கிறார். அருகிலேயே அகத்தியரும் அவரது மனைவி லோபா முத்திரையும் சிவன் பார்வதியை வணங்கிய வண்ணம் காணப்படுகின்றனர்.

இத்தலத்தில் நந்திக்குத் தைப்பூசத்தன்று சிறப்பு சந்தனக் காப்பு மற்றும் பூஜை நடைபெறுகின்றன. சிவன் நடராஜராகக் காட்சி அளித்ததே இதற்கும் காரணம். வியாக்ரபாதர் மற்றும் பதஞ்சலி முனிவர் ஆகியோருக்கு நந்தியின் கொம்பின் நடுவே சிவன் நடராஜராக நின்று நடனமாடிக் காட்சி அளித்தார் என்பதால் நந்திக்குச் சிறப்பு பூஜைகள். இங்கு நடராஜர் தனிச் சன்னதி கொண்டு ஆனந்தத் தாண்டவ கோலத்தில், புனுகு சபாபதியாகக் காட்சி அளிக்கிறார்.

இத்தல லிங்கத்திற்கும் முக்கிளா லிங்கம் என்ற காரணப் பெயர் ஒன்று உண்டு. ரிக், யஜுர், சாம வேதங்கள் கிளா மரமாக நின்று சிவனாருக்கு நிழல் தந்ததால், அம்மரத்தடியில் உள்ள சிவனுக்கு முக்கிளா லிங்கம் என்ற திருப்பெயர். கருவறை சிவனோ ருத்திராட்ச வடிவினன்.

கல்லுக்குள் தேரைக்கும் கருப்பை உயிர்க்கும் புல்லுணவே தந்து காப்பவன் சிவன். அந்த வகையில் தினமும் இத்திருக்கோவில் அருகே உள்ள தாமிரபரணி ஆற்றில் உள்ள மீன்களுக்கு நைவேத்திய உணவு அளிக்கப்படுவது ஓர் அற்புதக் காட்சி.

தனிச் சன்னதி கொண்டுள்ள அம்பாள் உலகம்மைக்கு அருகே உள்ள உரலில் விரலி மஞ்சளை பக்தர்கள் இடிப்பர். அம்மஞ்சள் பொடி நீரால் அம்பாளுக்கு அபிஷேகம் நடக்கும். இந்த மஞ்சள் தீர்த்தத்தை அருந்தினால் திருமணத் தடை நீங்கும். புத்திர பாக்கியம் ஏற்படும். பெண்கள் தீர்க்க சுமங்கலியாக இருப்பர் என்பது ஐதீகம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

18 hours ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

9 days ago

மேலும்