ஓஷோ சொன்ன கதை: சிரிக்கும் துறவிகள்

By சங்கர்

நான் சீனாவைச் சேர்ந்த மூன்று துறவிகளைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். அவர்களின் பெயர் என்னவென்று யாருக்கும் தெரியாது. அவர்கள் யாரிடமும் பேசியதில்லை. யாருடைய கேள்விகளுக்கும் பதிலும் அளித்ததில்லை. சீனாவில் அவர்களைப் பற்றிப் பேசும்போது ‘மூன்று சிரிக்கும் துறவிகள்’ என்றே அழைத்தார்கள்.

அவர்கள் ஒரே ஒரு வேலையைத் தான் வாழ்நாள் முழுவதும் செய்துவந்தனர். ஒரு கிராமத்திற்குள் நுழைவார்கள். அங்கு மக்கள் கூடும் சந்தையில் நின்று சிரிக்கத் தொடங்குவார்கள். உடனடியாக அங்குள்ள மக்கள் விழிப்புணர்வை அடைந்து தங்கள் மொத்த உயிர்ப்பும் வெளிப்படும்படி சிரிப்பார்கள்.

அது மற்றவர்களையும் தொற்றும். கூட்டம் கூட்டமாகச் சிரிப்பார்கள். பிறகு என்ன? மொத்த கிராமமே சிரிக்கும். பின்னர் அவர்கள் மற்றொரு ஊருக்குச் செல்வார்கள். அந்த மூன்று துறவிகள் மீதும் சீன மக்களுக்கு மிகுந்த பிரியம் இருந்தது. அவர்கள் தங்கள் சிரிப்பைத் தவிர வேறெந்த போதனையையும் நிகழ்த்தவேயில்லை. அவர்கள் எதையும் யாருக்கும் கற்பிப்பதும் இல்லை. அவர்கள் ஒரு சூழ்நிலையை உருவாக்கினார்கள். அவ்வளவுதான்.

வாழ்க்கை என்பது வெறும் சிரிப்புதான், வேறொன்றுமில்லை என்பதைப் போல இருந்தது அவர்களது சிரிப்பு. அவர்கள் ஒருபோதும் மற்றவரைப் பார்த்துக் குறிப்பாக சிரித்ததே இல்லை. பிரபஞ்சத்தின் நகைச்சுவையைப் புரிந்துகொண்டது போல அவர்கள் சிரித்தனர். ஒரு வார்த்தையைக் கூட செலவழிக்காமல் சீனா முழுவதும் அந்த மூன்று துறவிகள் மகிழ்ச்சியைப் பரவச்செய்தனர்.

அந்த சிரிக்கும் துறவிகளுக்கும் வயோதிகம் வந்தது. அவர்களில் ஒருவர் கிராமம் ஒன்றைக் கடக்கும்போது இறந்துபோனார். அந்தக் கிராம மக்கள் அனைவருக்கும் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. குறைந்தபட்சம் சகதுறவியின் மரணத்துக்காக மற்ற இரண்டு துறவிகளும் அழுவதைப் பார்க்கலாம் என்று நினைத்தனர்.

மரணம் நடந்த இடத்தில் அனைத்து கிராமத்தவர்களும் கூடினர். இறந்த துறவியின் சடலத்தைப் பார்த்தபடி இருந்த இரண்டு துறவிகளில் ஒருவர் வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரிக்கத் தொடங்கினார். கிராம மக்கள் குழப்பமடைந்தனர். இதற்கு என்ன விளக்கம் என்று சிரித்த துறவிகளை வற்புறுத்திக் கேட்டனர்.

துறவிகள் முதல் முறையாகப் பேசத்தொடங்கினர். “இறந்து கிடப்பவன் வென்றுவிட்டான். யார் முதலில் இறப்பார்கள் என்பது எங்களுக்குள் பெரிய போட்டியாக இருந்தது. இவன் எங்களைத் தோற்கடித்து விட்டான். எங்களுடன் இவன் பல ஆண்டுகள் சேர்ந்து சிரித்தான். நாங்கள் சந்தோஷமாக இருந்திருக்கிறோம். அவனை வழியனுப்புவதற்கு சிரிப்பைத் தவிர வேறு என்ன சிறப்பு வழிமுறை இருக்கமுடியும்” என்றார்கள் அந்தத் துறவிகள்.

அந்த இரண்டு துறவிகளும் சக துறவியின் மரணத்தைப் பார்த்து சிரித்ததற்கான காரணம் பின்னர்தான் கிராமத்தவருக்குத் தெரியவந்தது. இறந்த துறவி தனது மரணத்துக்குப் பின்னர் தனது உடையை மாற்றவேண்டாம் என்றும் தன்னைக் கழுவ வேண்டாம் என்றும் உத்தரவு இட்டிருந்தார்.

“ நான் ஒருபோதும் தூய்மை குறைந்தவனாக இருந்தது இல்லை. நான் வாழ்க்கை முழுக்கவும் சிரித்துக் கொண்டிருந்ததால் அழுக்கு என்னிடம் சேரவே இல்லை. சிரிப்பு என்பது இளமையானது. புத்துணர்வு வாய்ந்தது.” என்று கூறியிருந்தார்.

அவரது விருப்பப்படியே அவரது சடலத்திற்கு தீ வைக்கப்பட்டது. அவரது உடல் எரியத்தொடங்கியது அவர் சிரிக்கத் தொடங்கினார். ஆம்! அவரது உடல் சீனப் பட்டாசுகளாக மாறி வண்ண வண்ண விந்தைகளைக் காட்டியது.

அந்த அதிசயத்தைப் பார்த்து கிராமத்தவரும் சிரிக்கத் தொடங்கினர்.

அந்த மூன்று துறவிகளும் மூன்று புத்தர்களாக இருந்திருக்க வேண்டும். நீங்களும் சிரிக்கலாம் ஒரு நிமிடம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

16 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

மேலும்