வெள்ளைக்காரன் இருந்த மட்டும் அவனோடு சண்டை போடணும் என்கிறதில்..... ‘ஸாத்விகப் போர்', 'அஹிம்ஸா யுத்தம்' என்று சொல்கிறார்கள். வாஸ்தவத்தில் காந்தியும், அவருடைய கொள்கைகளில் மனஸாரப் பிடிமானம் வைத்திருந்த ஒரு சின்ன மைனாரிட்டியும் தவிர, மற்ற பெருவாரியான ஜனங்கள் அஸல் போரில் இருக்கிற சிரமம், தியாகம் எதுவும் அநுபவிக்காமல், ஆனாலும் உள்ளுக்குள்ளே அஸல் போர் செய்கிறவர்களுக்கு குறைச்சலில்லாத த்வேஷத்தோடுதான் இருந்து வந்தார்கள். ஆகையினாலே நான் ‘சண்டை' என்று சொன்னது தப்பில்லை.
அப்படி, வெள்ளைக்காரனோடு சண்டை போடுகிறதில் ஆஸேது ஹிமாசலம் அத்தனை ஜனங்களும் ஒற்றுமையாக இருந்தோமே தவிர, அவன் என்னிக்குப் புறப்பட மூட்டை கட்ட ஆரம்பித்தானோ அன்னியிலிருந்தே நமக்குள்ளேயே ஒற்றுமை போய், இத்தனைதான் பிரிவு என்று கணக்குப் போட முடியாமல் தினுஸு தினுஸாக வகுப்புவாதம், மதவாதம், கட்சிகள் வாதம், மாகாண (மாநில) வாதம். மாகாணம் என்ன, தாலுகாவுக்குத் தாலுகா, பக்கத்துக்குப் பக்கத்து ஊர், தெரு, வீடு வரை ஒவ்வொருவரும் ஒருத்தரையருத்தர் ஏசிக்கொண்டு, பரஸ்பரம் போட்டி போட்டுக்கொண்டு அவரவரும் தனக்கு ஸ்பெஷல் ரைட் கொண்டாடிக் கொண்டு வாதம், த்வேஷம் என்றெல்லாம் வீணாய்ப் போய்க் கொண்டிருக்கிறோம்.
ஜனங்களுக்கு ஸத்குணங்களை - ஒருத்தருக்கொருத்தர் விட்டுக்கொடுத்து அநுஸரித்துப் போவது, கட்டுப்பாடு, த்யாகம், ப்ரேமை, உழைப்பு மனப் பான்மை, எல்லாவற்றுக்கும் மேலே மொத்தமாக இந்த ஒரே பாரத தேசத்தை வைத்துப் பார்க்கிற உண்மையான தேசபக்தி முதலான ஒழுக்கங்களை - திரும்பத் திரும்ப எடுத்துச் சொல்லி, தேசத்துடைய ஒட்டுமொத்த ஷேமத் திற்காக அத்தனை பேரும் ஒற்றுமையாகப் பாடுபடணும் என்ற உணர்ச்சியை உண்டாக்க வேண்டும் என்ற அபிப்ராயம் காந்தியும் அவருக்குக் கீழேயே பயிரானவர்களும் இருந்த தலை முறைக்குப் பிற்பாடு வந்த தலைவர்கள் எனப்பட்டவர்களுக்கு அநேகமாக அஸ்த மித்துப் போய்விட்டதாகத் தெரிகிறது.
வயஸு வந்தவர்களுக்கெல்லாம் வோட்டு என்று பண்ணினாலும் பண்ணி னார்கள், அதிலிருந்து ஸமுதாயத்தின் பல ஸெக் ஷன்களில் ஒவ்வொன்றிலும் ஒரு மெஜாரிட்டியைத் தாங்களே புதுசாக ஸ்ருஷ்டித்தாவது உண்டாக்கி, ‘உங்கள் உரிமைக்காகப் போராடுகிறோம்' என்று சொல்லிக்கொண்டு அவர்களையும் அந்தந்த ஸெக் ஷன் மைனாரிடிகளையும் பரஸ்பர விரோதிகளாக்குவதுதான் வோட்டுப் பிடிக்க ப்ரம்மாஸ்திரம் என்று ஆக்கிக்கொண்டே இன்றைக்குப் பெரும்பாலும் ‘பாலிடிக்ஸ்` நடக்கிறது.
மொத்தத்தில் இந்த தேசத்தின் உசந்த ஸமுதாயம், மேலெழ வெளியிலே பார்க்கிறதற்கு மட்டும் ஒருமைப்பாட்டு கோஷம் என்ற ஒரு ‘ஷோ'வோடு, உள்ளுக்குள்ளே பிரிந்து, பிரிந்து, பிரிந்து வீணாய்ப் போய்க்கொண்டிருக்கிறது. ரொம்பவும் துக்கமும் வெட்கமும் படும்படியான ஸ்திதி, பொது எதிரி ஒருத்தன்கிட்டே விரோதத்தில்தான் நமக்கு ஒன்று சேரத் தெரிந்ததே தவிர நமக்குள்ளே பரஸ்பர ப்ரேமையில் ஒன்று சேரத் தெரியவில்லை!
அப்போது வெளிப் பார்வைக்காவது ஸாத்விகமாகச் சண்டை நடந்த மாதிரி இல்லாமல், இப்போது வெளியிலேயும் அஸுர யுத்தமாகவே நடந்து, யதுகுலம் மாதிரி நம்மை நாமே நிர்மூலம் பண்ணிக் கொள்வதில்தான் இது போய் முடியுமோ என்று பயப்படுகிற ஸ்திதி ஏற்பட்டிருக்கிறது.
இந்த அபாயத்தை இப்போதுள்ள அநேகக் கட்சிகளுடைய, வர்க்கங்களுடைய தலைமை ஸ்தானத்திலிருப்பவர்கள் தெரிந்துகொண்ட ப்ரக்ஞையே இல்லாமல் போய்க்கொண்டிருப்பதுதான் ரொம்பவும் விசாரம் தருவதாக இருக்கிறது. தர்மம் என்று ஒன்று இருக்கிறது. ஜனங்களுக்கு இருக்க வேண்டிய அநேக நல்லொழுக்கங்கள் சொன்னேனே, அவை எல்லாமும் அதோடு இன்னும் பலவும் சேர்ந்துதான் தர்மம், தர்மம் என்கிறது. இந்த பாரத தேச கலாசாரத்திற்கு லோகத்திலேயே வேறே எந்தப் பெரிய ‘ஸிவிலிஸேஷ'னுக்கும் இல்லாத தீர்க்காயுஸைக் கொடுத்து யுகாந்தரங்களாக ரட்சித்துக்கொண்டு வந்திருக்கிறது அந்த தர்ம சக்திதான்.
அப்படி ஒன்று இருக்கிறது என்று தப்பித் தவறியாவது தற்காலத்தில் தலைவர்கள் என்று இருக்கிறவர்கள் தங்கள் தங்கள் கட்சிக்காரர்களுக்கு சொல்கிறார்களா என்று தெரியவில்லை. எலெக்ஷனில் ஜயிப்பது ஒன்றைத் தவிர வேறே ஒரு லட்சியத்தையும் கட்சிகாரர்களுக்குச் சொல்லிக் கொடுப்பதில்லை என்ற துர்தசை ஏற்பட்டிருக்கிறது ஜயிப்பதுதான் குறி என்கிறபோது hook or crook, எதுவானாலும் சரி என்று அதர்மத்திற்கும் கட்சிக்காரர்களைத் தூண்டிக்கொடுக்கிற வரைக்கும் போய்விடுகிறது.
இந்த நிலவரத்திலே முக்கியமாக அப்போது வெள்ளைக்காரன் ஒரு தினுஸில் divide and rule தந்திரம் பண்ணினானென்றால், இப்போது தலைவர்கள் எனப்பட்டவர்களும் ஸமுதாயத்தை அநேக மெஜாரிடி மைனாரிடிகளாக divide பண்ணி, மெஜாரிட்டியைத் திருப்தி பண்ணு வதற்காக தர்மாதர்மத்தைப் பற்றி அவ்வளவாகக் கவலைப்படாமல் எது வேண்டுமானாலும் பண்ணி எலெக் ஷன் வெற்றிக்கே பாடுபடுவதாகத்தான் பொதுப்படையாகப் பார்க்கிறபோது தெரிகிறது.
இப்படித் தற்காலத்தில் அவரவரும் ஸ்பெஷல் ரைட் கேட்டுக்கொண்டு ஏகமாகப் பிரிவுகள் ஏற்பட்டிருப்பது போதாதென்று நான் வேறே பிள்ளையாரிடம் தமிழ் மக்களுக்கு ஸ்பெஷல் ரைட் என்று ஒரு பிரிவை உண்டாக்கி இன்னொரு சண்டை மூட்டிவிட்டால் ஸமஸ்த ஜனங்களுக்குமான அந்தப் பிள்ளையார் என்னைச் சும்மா விட மாட்டார்! வாஸ்தவத்தில் பிள்ளையாரும் ஸரி, ஸுப்ரஹ்மண்யரும் ஸரி இந்த தேசம் பூராவுக்கும் ஸ்வாமிகள்தான். அதை ப்ரூவ் பண்ணவும் நிறைய எவிடென்ஸ் உண்டு.
முக்யமாக இரண்டு வாதம் - அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள் ‘உண்மையை டிஸ்கவர் பண்ணிச் சொல்கிறோமாக்கும்' என்று சொல்லிக்கொண்டு தங்களை அறியாமலே, ஏற்கெனவே குறுகின மனப்பான்மைகளில் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறவர்களை இன்னும் தங்கள் பங்குக்கு வேறே மூட்டிக் கொடுத் திருக்கிற இரண்டு வாதம். ஒன்று, பிள்ளையார், நரஸிம்ஹ வர்மப் பல்லவ ராஜாவின் காலத்தில்தான் அவருடைய ஸேநாதிபதி பரஞ்ஜோதி - பிற்காலத்தில் சிறுத்தொண்ட நாயனார் ஆனவர், அவரால் சாளுக்ய தேச ராஜதானியான வாதாபியிலிருந்து தமிழ் நாட்டுக்குப் புதுசாக அறிமுகம் பண்ணப்பட்டவர். அதற்கு முந்தி அவருடைய வழிபாடு இங்கே கிடையாது. அதாவது அவர் தமிழ்த் தெய்வம் இல்லவே இல்லை, `அசலார்' என்பது.
இன்னொரு வாதம், ‘முருகன் தமிழ் நாட்டுக்குத்தான் ஆதியிலிருந்து ஸ்வாமி இங்கேயிருந்துதான் வடக்கே அவரை இரவல் வாங்கிக்கொண்டு ஏதோ தங்கள் ஸ்வாமியே மாதிரி புராணம், மந்த்ரம், ஆகமம் எல்லாம் எழுதி வைத்துக்கொண்டு கதை பண்ணுகிறார்கள்' என்பது. இரண்டுமே தப்பு என்று ‘ப்ரூவ்' பண்ண நிறையச் சான்றுகள் இருக்கின்றன. இப்போது அந்த விஷயம் வேண்டாம்.
ஆக, நான் வேறு, இப்ப இல்லாததை இருக்கிறதாகச் சொல்லி பேத உணர்ச்சியை மூட்டிக்கொடுக்கப்படாது.
இது ஒரு பக்கம். ஆனால் இன்னொரு பக்கத்தில், பிள்ளையார் இந்தத் தமிழ் நாட்டுக்கு எத்தனை தினுஸில் விசேஷ அநுக்ரஹம் பண்ணி நம் தமிழ் ஜனங்களுடைய இம்மை, மறுமை இரண்டுக்கும் ‘டாப்' ஆன உபகாரியாயிருக்கிறார் என்பதை நினைத்துப் பார்த்து நமஸ்காரம் பண்ணாவிட்டால் நமக்கு நன்றி மறந்த பெரிய தோஷம் ஏற்பட்டுவிடும் என்றும் தோன்றுகிறதே! ஆனதாலே, முத்ரை கித்ரை குத்திப் புதுசாக இன்னொரு சண்டை கிளப்பாமல், நன்றியோடு நமஸ்காரம் பண்ணுவதற்காகவே யதார்த்தத்தைச் சொல்கிறேன்.
(தெய்வத்தின் குரல் ஏழாம் பகுதி)
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
5 hours ago
ஆன்மிகம்
21 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
9 days ago
ஆன்மிகம்
10 days ago
ஆன்மிகம்
14 days ago
ஆன்மிகம்
20 days ago
ஆன்மிகம்
21 days ago