செருப்பு தைக்கும் தொழிலாளியான அப்துல் கறீம் பாக்தாத் நகரில் வாழ்ந்துவந்தார். ஹஜ் பயணம் செல்ல வேண்டும் என்பது அவரின் நெடு நாளைய விருப்பம். அதற்காக ஒவ்வொரு நாளும் தன்னுடைய உழைப்பிலிருந்து ஒரு சிறு தொகையை உண்டியலில் சேமித்துவந்தார். பல வருடங்களுக்குப் பிறகு ஹஜ் செல்வதற்கான தொகை சேமிப்பின் வழியாகத் திரண்டுவிட்டது. அந்த வருடம் ஹஜ் பயணக் குழுவினருடன் தாமும் சேர்ந்து புறப்பட அப்துல் கறீம் ஆயத்தமாகிவிட்டார்.
பயணம் புறப்படுவதற்கு ஒரு சில நாட்களே எஞ்சியிருந்த நிலையில் அவர் உற்சாகமாக இருந்தார். பயணத்துக்கான முன்னேற்பாடுகளைச் செய்துகொண்டிருந்தபோது, அவரது குட்டி மகன் அழுதுகொண்டே வந்தான். அழுகைக்கான காரணத்தைக் கேட்டார் அப்துல் கறீம். அதைக் கேட்டதும் அவருக்கு கோபம் வந்தது.
பாக்தாதில் அப்துல் கறீமின் இளமைக்கால நண்பர் வீட்டில் அவரது குடும்பத்தினர் கோழி சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது அப்துல் கரீமின் மகன் அங்கே போய் தனக்கும் அந்த உணவு வேண்டும் என்று கேட்டிருக்கிறான். அப்துல் கறீமின் நண்பரோ கோழியைக் கொடுக்க மாட்டேன் என்று கூறி மறுத்துவிட்டார். அவமானம் தாங்காமல் சிறுவனும் தன் தந்தையிடம் அழுதுகொண்டே நடந்ததைச் சொல்ல அப்துல் கறீமிற்கு தன்மானம் பொங்கியது.
பரபரவெனத் தன் மகனின் கையைப் பிடித்துக்கொண்டு நேராக நண்பரின் வீட்டிற்கு மனக்கொந்தளிப்புடன் சென்றார். நண்பரைப் பார்த்து சூடாக இரண்டு சொல் கேட்டார் அப்துல் கறீம். அந்த நண்பரோ தன் கண்களில் கண்ணீர் பொங்க உண்மை நடப்பை விளக்கினார்.
“ நண்பா ! நானும் குடும்பத்தினரும் பல நாட்கள் பட்டினியாக இருந்தோம். உண்பதற்கு எதுவும் இல்லை. மனைவியும் குழந்தைகளும் பசி தாங்கவியலாமல் அரை மயக்கமாகி விட்டனர். யாரிடமும் கையேந்தவும் மனது இடம் கொடுக்கவில்லை. இச்சூழ்நிலையில்
மனம் நொந்து நான் கடை வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்தேன். அப்போது கோழிக்கடையிலிருந்து இறந்த கோழி ஒன்றை வெளியே எறிந்தனர். யாரும் கவனிக்காத நிலையில் நான் அதை அப்படியே வீட்டிற்கு கொண்டு வந்து விட்டேன். அதை சமைத்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதுதான் உன் மகன் வந்து உணவைக் கேட்டான். உயிரைத் தக்க வைத்துக்கொள்ள வேறு வழியில்லாத நிலையில் தானாகச் செத்த கோழியை உண்பது எனக்குக்கூடும்.
ஆனால் அதை எப்படி உன் மகனுக்கு நான் கொடுக்க முடியும் ? அதனால்தான் அவன் தப்பித்தவறிக்கூட அதை உண்டுவிடக் கூடாது என்பதற்காகவே உன் மகனிடம் நான் கடுமையாக நடந்துகொண்டேன்” என்றார். உற்ற நண்பனின் பசியைக்கூட அறிய முடியாத உணர்வற்றவனாக ஆகிவிட்டோம் என்று கதறிய அப்துல் கறீம் ஹஜ் பயணத்திற்காகத்
தான் சேமித்து வைத்திருந்த பணம் முழுவதையும் தனது நண்பனிடம் கொடுத்துவிட்டார். அந்தப் பண உதவி நண்பரின் குடும்பத்தினரின் பசியையும் வறுமையையும் நிரந்தரமாகத் துடைத்தெறிந்து விட்டது. நடந்த நிகழ்வுகள் அனைத்தும் நகரின் தலைமை முல்லாவை எட்டின. அவர் அந்த வார வெள்ளிக்கிழமை தொழுகை உரையில் மக்களைப் பார்த்து பின்வருமாறு கூறினார்.
“என் அருமை சகோதரர்களே!! சுவனத்திற்கு நுழைவதற்கு ஒரே வழிதான் உண்டு என யார் சொன்னது ? ஹஜ் பயணம் நமது பாவங்கள் அனைத்தையும் அழிக்கக்கூடியதுதான். நம்மோடு வாழும் சக மனிதனை பசியினால் அழிய விட்டு வேடிக்கை பார்ப்பதை அல்லா விரும்ப மாட்டார். அப்துல் கறீம் தனது ஹஜ் பயண வாய்ப்பை இழந்திருக்கலாம். ஆனால் அவர் செய்த கொடையின் பயனாக அவருக்கு எண்ணற்ற ஹஜ் வழிபாட்டின் நன்மைகளைக் கொடுப்பதற்கு இறைவனால் முடியும்தானே? அறத்தின் வழியில் நம்மைச் செயல்படத் தூண்டுவதுதான் வழிபாடுகளின் இறுதி இலக்காகும்.” எனக் கூறினார்.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
5 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
9 days ago